இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்

Five Reasons Why Jesus is Not Merely a Prophet

ஆசிரியர்: கெய்த் தாம்சன்

இயேசுவை தேவனாக அல்லாது ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டுமே புதிய ஏற்பாடு போதிக்கிறது என்று நம்பும் முஸ்லீம் வாசகர்களுக்கு இந்தக் கட்டுரை கேள்விகளையும் வாதங்களையும் முன் வைக்கும். இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்று குர்‍ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக சூரா 5:75ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:

“ மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை....”.

ஆனால் இயேசுவை நேரடியாகக் கண்டவர்கள் மற்றும் இயேசு பேசினதைக் கேட்டவர்களால் எழுதப்பட்ட முதல் நூற்றாண்டு நூல்கள் இக்கருத்துக்கு மாறான உண்மையான இயேசுவை நமக்கு காண்பிக்கின்றன. எனவே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை இக்கட்டுரை நிரூபிக்கும். இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்றாலும் கூட அவர் சாதாரண தீர்க்கதரிசி மட்டுமல்ல என்பது இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும். அவர் தேவன் ஆவார். கிறிஸ்துவிடமாக பிதாவானவர் இழுத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு புதிய ஏற்பாடு, இயேசுவைக் குறித்து என்ன போதிக்கிறது என்பதைக் குறித்த தெளிவான‌ கருத்தை இந்தக் கட்டுரை அளிக்கும் என்பதே எனது நம்பிக்கையாக இருக்கிறது.

#1. இயேசு சாதாரணமான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் ஏன் யோவான் 5:22-23 ஆகிய வசனங்கள்:

“பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல் நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்” என்று கூறுகிறது?

இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் இயேசுவைக் கனம் பண்ணுதல் அல்லது பிதாவைக் கனம் பண்ணுவது போல இயேசுவைக் கனம் பண்ணுதல் என்பது தேவ தூஷணமாகுமல்லவா? அல்லாஹ்வைக் கனம் பண்ணுவது போலவே முஹம்மது நபியைக் கனம் பண்ணுதல் என்பது ஒரு முஸ்லீமுக்கு ஏற்புடையதாக இருக்குமா?

“போல” என்பதைக் குறிக்கும் “kathōs” என்கிற கிரேக்க வார்த்தைக்கான பொருள்/விளக்கம்: “… ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்...” என்று வருகிறது.

The primary definition of Greek word for “just as” (kathōs) is “… according as, just as, even as, in proportion as, in the degree that.” 1

ஆகவே, நாம் பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணி பயபக்தியுடன் இருப்பது போலவே, இயேசுவையும் அதே நிலையில் வைத்து கனம் பண்ணி பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்று இந்த வசனம் விசுவாசிகளுக்கு கட்டளையிடுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பிதாவாகிய தேவன் மிக உயர்ந்த நிலையில் தேவனாக இருக்கிறார். இயேசுவும் அதே போல மிக உயரிய நிலையில் இருக்கிறார். ஆகவே, இயேசு சாதாரண தீர்க்கதரிசியை விட மேலானவர் ஆவார்.

#2. இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், பின்னர் ஏன் வெளிப்படுத்தல் 5:8-14 வரையிலான வசனங்கள் தேவ தூதர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரையும் சேர்த்து பரலோகத்திலுள்ளவைகள் அனைத்தும் இயேசு துதிக்கும் மகிமைக்கும் கனத்திற்கும் மற்றும் வல்லமைக்கும் என்றும் பாத்திரர் என்று ஏன் கூறுகின்றன?

இயேசு தேவனாக இல்லாமல் சாதாரண தீர்க்கதரிசியாக இருந்தால், தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையிலிருந்து தவறுவதாக அது இருக்குமல்லவா? அது தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையாக இருக்குமென்றால், அது இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா? வெளிப்படுத்தல் 5:8-14 கூறுவதாவது:

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

#3. மனுக்குலத்தில் உள்ள அனைவரையும் போல வாழ்க்கையை கரு தோன்றியதில் இருந்து ஆரம்பித்த இயேசு சாதாரணமானதொரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் புதிய ஏற்பாடு, இயேசுவானவர் பிதாவோடு கூட முன்னமே தனித்துவமான மகிமையில் வாசம் செய்தார் என்று போதிக்கிறது?

பிலிப்பியர் 2:6-11 குறிப்பிடுவதாவது:

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

இயேசு தேவனுடைய ரூபமாக (தேவனுடய மகிமையாக) முன்பே இருந்தார் என்பதையும், ஒரு மனிதனாக தம்மைத் தாழ்த்தினார் என்பதையும் கவனியுங்கள். தேவனின் வல்லமை மற்றும் சக்தி இருந்தாலொழிய இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி மனிதனாக வருவது என்பது சாத்தியமில்லாத காரியமாயிருக்கிறபடியால் இயேசு தெய்வீக வல்லமை உடைவராக இருந்தார் என்பதை இது காண்பிக்கிறது. இதேபோல, யோவான் 8:58ல் இயேசு தாம் மனிதனாக தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதை பின்வருமாறு விளக்கினார், "அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”.

கவனியுங்கள் ஆபிரகாம் வாழ்வதற்கு முன்னமே நான் இருந்தேன் என்று மட்டும் இயேசு சொல்லாமல், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே தாம் தேவனாக இருந்ததாக சொல்வதை “நான்...இருக்கிறேன் – I AM” என்று தேவனுக்கு உரிய பதத்தை பயன் படுத்துவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.2

#4. இயேசு சாதாரண‌மான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், தாம் கொல்லப்படும் போது, தம்மைத் தாமே உயிரோடெழுப்புவதற்கு தனக்கு வல்லமை உண்டு என்று ஏன் கூறினார்?

ஒரு தீர்க்கதரிசியால் எப்பொழுதாவது இப்படிக் கூற முடியுமா? தாம் மரித்த பிறகு தமது சரீரத்தை உயிரோடு எழுப்பிக்கொள்ள தன்னால் முடியும் என்று இயேசு கூறியதால், அவர் மரித்த பிறகும், இறைவனைப் போல தெய்வீக வல்லமையோடு இருப்பதாக இந்த வார்த்தைகள் காட்டவில்லையா? தேவன் மனிதனானால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்க்கிற ஒரு காரியமாக இது இருக்கிறதல்லவா?

யோவான் 2:19-21 மற்றும் யோவான் 10:17 குறிப்பிடுவதாவது:

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். (யோவான் 2:19-21)

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)

#5. இயேசு தமது தீர்க்கதரிசன அழைப்பை மட்டும் பிரசங்கித்துக் கொண்டு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் அவருடைய கூற்றுகள் தாம் தேவனுக்கு சமமாக இருப்பதாகவும், தாம் தேவனாக இருப்பதாகவும் கூறுகின்றன‌?

யோவான் 10:33 மற்றும் யோவான் 5:18ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:

அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

(யோவான் 5:18)

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

(யோவான் 10:33)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய எழுத்துக்களும் இங்கே அவர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகள் அவருடைய தெய்வீகத்தை உறுதிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அவர் தம்மை தேவனாக உரிமைப் பாராட்டினார் என்பதை அவர்கள் சந்தேகமின்றி அறிந்திருந்தனர். வேதாகமம் அல்லது குர்‍ஆனில் ஏதாவது ஒரு தீர்க்கதரிசியின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் தன்னை தேவனாக உரிமைப் பாராட்டுவதாக நம்பச் செய்யும்படிக்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா?

முடிவுரை:

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான குறிப்புகள் இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலானவர் என்பதைக் காண்பிக்கின்றன என்பதே உண்மை ஆகும். எந்த தீர்க்கதரிசியும் பேசாத செய்யாத காரியங்களை இயேசு செய்தார். ஒரு சாதாரண தீர்க்கதரிசியால் செய்ய முடியாத பல காரியங்கள் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படியாக வரலாற்றுப் பூர்வமாகவும் மற்றும் இறையியல் பூர்வமாக சொல்லுவதானால் - இயேசு ஒரு தீர்க்கதரிசியை விடவும் மேலானவர்- இயேசு இறைவன் ஆவார்.

இயேசுவைக் குறித்து முதல் நூற்றாண்டுக் குறிப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை உண்மையாகவே அறிந்துகொள்ள விரும்பி; கிறிஸ்துவிடமாக இழுக்கப்படும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இந்த தகவல்கள் பிரயோஜனமாக இருப்பதாக.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அவர்" கர்த்தர்.

பின் குறிப்புக்கள்:

1 Joseph Henry Thayer, A Greek-English lexicon of the New Testament, [Harper, 1887], p. 315

2. "இருக்கிறேன் (I AM)" என்பது பழைய ஏற்பாட்டில் தேவன் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தெய்வீகப் பட்டப்பெயராகும். உதாரணத்திற்கு, யாத்திராகமம் 3:14ல் தேவன் மோசேயை நோக்கி: "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM WHO I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் (I AM) என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்". இந்த தெய்வீக பட்டப்பெயர் பழைய ஏற்பாட்டின் செட்பாஜின்ட் கிரேக்க மொழியாக்கத்தில் "egō eimi" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே வார்த்தையைத் தான் இயேசுவும் யோவான் 8:58ல் தனக்குத் தானே "இருக்கிறேன் (I AM)" என்று கூறினார், அதாவது தன்னை தேவன் என்று வெளிப்படுத்தினார்.

ஆங்கில மூலம்: Five Reasons Why Jesus is Not Merely a Prophet

கெய்த் தாம்சன் கட்டுரைகள்