தலாக் 8 – ஏழ்மையைச் சொல்லி துக்கப்பட்ட மருமகளுக்கு தலாக் – இப்ராஹீம் நபி வழி

தலாக் பற்றி இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளவைகளை சுருக்கமாக நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். தற்காலத்தில் முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், ஆரம்ப கால முஸ்லிம் பெண்கள் சந்தித்த சவால்களை புரிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மதுவின் மனைவிகள் என்பதால் அன்று அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரப்படவில்லை, சிகப்பு கம்பளம் விரிக்கப்படவில்லை. பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை மதிக்கும் சமுதாயம் முன்னேறும், அவர்களை மிதிக்கும் சமுதாயம் முன்னேறாது. இன்று வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களின் நிலையோடு முஹம்மதுவின் கால பெண்களை ஒப்பிடும் போது, இக்கால முஸ்லிம் பெண்களின் நிலை பல ஆயிர மடங்கு மேல் என்றுச் சொல்லலாம். இருந்தாலும், இதர சமுதாய பெண்களோடு ஒப்பிடும் போது அது குறைவே!

இதுவரை பதிக்கப்பட்ட தலாக் பற்றிய கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளில் படிக்கலாம். 

  1. தலாக் 1 – நம் கலாச்சாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது ஏன்?
  2. தலாக் 2 – தலாக்கிற்கான காரணங்களை குர்-ஆன் நிர்ணயித்துள்ளதா?
  3. தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்
  4. தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்
  5. தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்
  6. தலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா! மருமகளை தலாக் கொடுத்துவிடு
  7. தலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்?

தற்போதைய கட்டுரையில், குர்-ஆனுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் மதிக்கும் புகாரி ஹதீஸில் உள்ள ஒரு விவகாரத்தை (விவாகரத்தை) ஆய்வு செய்வோம்.

1) இப்ராஹீம், இஸ்மாயீல் – யார் இவர்கள்?

முஹம்மது பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இப்ராஹீம் என்ற பெயரில் ஒரு பெரியவர் இருந்தார். யூதர்களும் கிறிஸ்தவர்களும் இவரை “ஆபிரகாம்” என்று அழைப்பார்கள். இவர் மக்காவிற்கு வந்ததாகவும், அங்கு இவர் காபாவை கட்டினார் என்றும் முஹம்மது கூறியுள்ளார். ஆனால், இவ்விவரங்களுக்கு சரித்திரத்தில் ஆதாரங்கள் இல்லை, இஸ்லாமிய நூல்களில் மட்டுமே இவ்விவரங்களை காணமுடியும். 

இப்ராஹீமுக்கு இறைவன் ஒரு மகனை கொடுப்பதாக வாக்கு கொடுத்தார். இவருடைய முதல் மனைவி மட்டும் இருக்கும் போது, இந்த வாக்கை இறைவன் கொடுக்கிறார். இவ்விருவருக்கும் வயது அதிகமாக இருந்தபடியினால், இவருடைய மனைவிக்கு இறைவனின் வாக்கின் மீது நம்பிக்கை குறைவாக இருந்தது. வாக்கு கொடுத்தவனுக்குத் தெரியாது? எப்போது என்ன செய்யவேண்டுமென்று? இந்த முதல் மனைவி, ஒரு திட்டம் தீட்டினாள். எப்படியாவது பிள்ளை வேண்டும் என்பதற்காக, ஹாஜர் (ஆகார்) என்ற தன் அடிமைப் பெண்ணை தன் கணவனுக்கு கொடுத்தாள். ஹாஜரும்  கர்ப்பமானாள், மகனையும் பெற்றெடுத்தாள். அவருக்கு பெயர் இஸ்மாயீல்.

சில ஆண்டுகள் கழித்து, இறைவனின் வாக்கின்படி, முதல் மனைவி கர்ப்பமாகி பிள்ளைப் பெற்றாள். இவருக்கு ஈஷாக் என்று பெயர். இந்த ஈஷாக்கின் வம்சத்தில் வந்தவர்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்.

இந்த ஹாஜர் மற்றும் இஸ்மாயீலின் வம்சத்தில் நான் வந்தேன் என்றுச் சொல்லி, ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது என்பவர் தன்னை நபியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய மதம் தான் இஸ்லாம்.

2) ஹாஜரையும், இஸ்மாயீலையும் மக்காவில் அனாதையாக விட்டுவந்த இப்ராஹீம்

ஹாஜரும் அவரது மகனும், முதல் மனைவியை கேவலமாக பார்த்தபடியினால், முதல் மனைவி தன் கணவனிடம் “இவர்களை வெளியே அனுப்பிவிடுங்கள்” என்று கேட்க, கணவனும் ”சரி, ஆகட்டும்” என்றார். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியை வேறுமாதிரியாக சித்தரிக்கிறார்கள்.

ஹாஜரையும், அவரது மகனையும் மக்காவில் விட்டு வந்துவிடு என்று அல்லாஹ் இப்ராஹீமுக்குச் சொன்னாராம். ஏன் சொன்னார்? இஸ்லாமை பரப்புவதற்கு அல்லது அல்லாஹ் பற்றி அங்கு சொல்வதற்கு. இவ்விருவரை அவர் விட்டு வந்த போது, மக்காவின் மக்கள் தொகை எவ்வளவு? ஒருவரும் கிடையாது. ஒரு தாய் மற்றும் ஒரு கைக்குழந்தை இவ்விருவரை மட்டுமே அங்கு விட்டுச்செல்ல அல்லாஹ் இப்ராஹீமுக்கு சொன்னார். எனவே தாயையும் பிள்ளையையும், பல நூறு மைல்கள் தொலையில், மக்கள் நடமாட்டமில்லாமல் இருந்த வரண்ட பிரதேசத்தில் அதாவது இன்று மக்கா அழைக்கப்படும் இடத்தில் விட்டு வந்துவிட்டார் இப்ராஹீம்.

வேறு ஒரு ஊரிலிருந்து அவ்வழியே சென்றுக்கொண்டு இருந்த, பயணிகள் இவர்களைக் கண்டு, அங்கேயே தங்கிவிட்டனர். பல ஆண்டுகள் கடந்தன, கைக்குழந்தை இஸ்மாயீல் வாலிபனானார். அம்மக்கள் அவருக்கு அரபியை கற்றுக்கொடுத்தனர், அதோடு கூட தங்கள் மகளையும் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர். இஸ்மாயீலின் தாய் ஹாஜரும் மரித்துவிடுகின்றார்.

3) மருமகளை விவாகரத்து செய்துவிடு என்று அம்மருமகளிடமிருந்தே மகனுக்கு செய்தியை அனுப்பிய இப்ராஹீம்

இப்போது நாம் கட்டுரையின் முக்கியமான கிளைமாக்சுக்கு வந்திருக்கிறோம். கீழ்கண்ட ஹதீஸை படிக்கும் போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். 

இந்த ஹதீஸின் சுருக்கம்:

1) பல ஆண்டுகள் கழித்து இப்ராஹீம் பல நூறு மைல்கள் தாண்டி மக்காவிற்கு வருகிறார்.

2) மகன் வீட்டில் இல்லை, ஆனால் அவன் மனைவி இருக்கிறார்.

3) இவர் தன்னை அறிமுகம் செய்துக்கொள்ளவில்லை, ஆனால் இஸ்மாயீல் எங்கே என்று கேட்டார். வேட்டையாடச் சென்றுள்ளார் என்று அவள் கூறுகிறாள்.

4) உங்கள் வாழ்க்கை நிலை மற்றும் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

5) இஸ்மாயீலின் மனைவி, உள்ளதை அப்படியே சொன்னாள் அதாவது “நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்றுச் சொன்னாள்.

6) உன் கணவர் வந்தால் நான் கேட்டதாகச் சொல், அதே போல ’வீட்டின் நிலைப்படியை’ மாற்றச்சொல் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் இப்ராஹீம்.

7) அதன் பிறகு இஸ்மாயீல் வீட்டுக்கு வந்தார், நடந்ததை மனைவி ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டாள். பாவம் அவள், அவளுக்கு அந்த இரகசிய கோட்வோட் (code word) தெரியாமல் போய்விட்டது.

8) வந்தவர் என் தந்தை, அவர் மாற்றச்சொன்ன ‘நிலைப்படி’ நீ தான், எனவே உன்னை நான் விவாகரத்து செய்கிறேன் என்று தலாக் கொடுத்துவிட்டார் இஸ்மாயீல்.

9) அதன் பிறகு இன்னொரு மனைவியை  திருமணம் செய்துக்கொண்டார். 

10) மறுபடியும் இப்ராஹீம் வந்தார், இப்புதுப்பெண்ணிடம் ‘நலமா?’ என்று கேட்டார். நாங்கள் “நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்றுச்சொல்லி, அல்லாஹ்வை புகழ்ந்தாள் அப்பெண்.

11) நான் கிளம்புகிறேன், உன் கணவன் வந்தால், நிலைப்படியை உறுதி செய்துக்கொள் என்று நான் சொன்னதாகச் சொல் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் இப்ராஹீம்.

இது தான் இந்த ஹதீஸ் சொல்லும் கதை. இது நீண்ட ஹதீஸ், நான் தேவையானதை மட்டுமே இங்கு பதித்துள்ளேன். முழு ஹதிஸையும் படிக்க விரும்புபவர்கள் புகாரி எண் 3364ஐ இணைய தளங்களில் படிக்கலாம்.

புகாரி எண் 3364

3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

. . . . இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்நதார். அதன் பிறக அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். . . .  (புகாரி எண் 3365ஐயும் பார்க்கவும்).

4) ஏழ்மையைச் சொல்லி துக்கப்பட்ட மருமகளுக்கு தலாக் கொடுப்பது நியாயமா?

மேற்கண்ட கதையை சரித்திர நிகழ்வாக அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்தியுள்ளார். அதனை முஹம்மது தம் தோழர்களிடம் அறிவித்துள்ளார். 

முஸ்லிம்களுக்கு சில கேள்விகள்:

அ) நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம் என்று ஒரு பெண் சொல்வது, தலாக் கொடுக்கும் அளவிற்கு பெரிய பாவமா?

ஆ) குடும்ப நிலையைப் பற்றிய உண்மையைச் சொல்வது தவறா? இதற்காக விவாகரத்துவரைச் செல்வது சரியானதா?

இ) மணல் தவிர வேறு ஒன்றும் இல்லாத பாலைவனத்தில் குடும்ப நிலை எப்படி செழிப்பாக இருக்கும்? இது இஸ்மாயீலுக்கும், இப்ராஹீமுக்கும் தெரியும்.

ஈ) ஒரு வேளை, அல்லாஹ்வை அப்பெண் புகழவில்லையென்பதால் தலாக் கொடுக்கப்பட்டாளா? அல்லாஹ்வை புகழவில்லையென்பது தலாக் கொடுக்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய பாவமா?

உ) மருமகளை விவாகரத்து செய்யும் படி, மகனுக்கு மாமனார் அறிவுரை சொல்வது சரியான செயலா?

ஊ) தந்தையின் சொற்கேட்டு, மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா? எந்த ஒரு பலமான காரணம் இல்லாமல் மனைவியை விவாகரத்து செய்த இஸ்மாயீல் எப்படிப்பட்ட கணவராக இருக்கிறார் என்பதை கவனியுங்கள்.

எ) இதில் சிந்திக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தன்னை தன் கணவர் விவாகரத்து செய்வான் என்று தெரியாமல், அந்தப்பெண் உண்மையை சொல்லிவிட்டாள். இப்ராஹீம் என்ன சொன்னார் என்பதை அப்படியே (நிலைப்படியை மாற்றும்படி) சொல்லிவிட்டாள். மருமகளின் விரல்களால் அவள் கண்களையே குத்திவிட்டார் இப்ராஹீம்.

ஏ) இஸ்மாயீலுக்கு அரபியை கற்றுக்கொடுத்து, திருமணம் செய்ய பெண்ணையும் கொடுத்தால், தன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை வெளிப்படையாகச் சொன்னதால் அப்பெண் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்படுவாள் என்றுச் சொன்னால், இது மனித சமுதாயத்தில் காணப்படக்கூடாத தீய செயல் அல்லவா?

ஐ) இன்றிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியை இன்றைய சமுதாயத்தோடு ஒப்பிடுவது சரியானது அல்ல என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். இப்படிப்பட்டவர்கள், அன்று அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு  இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் செய்தது தவறு என்றும் கண்டிக்கத்தக்கது என்றும் சொல்லமுடியுமா? இந்த நிகழ்ச்சியை விளக்கும் போது முஹம்மது இதனை கண்டித்து இருந்திருப்பாரா? அல்லது பெண்களுக்கு எச்சரிக்கை உண்டாகும்படி பேசியிருந்திருப்பாரா? 

5) இந்த ஹதீஸின் பாதிப்பு

இந்த ஹதீஸின் பாதிப்பு இஸ்லாமியர்களிடையே எப்படி உள்ளது என்பதை விளக்க இங்கு இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.  இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீலின் நிகழ்ச்சியில் வரும் விவாகரத்தை நியாயப்படுத்தும் முஸ்லிம்கள்.

5.1 மனைவியிடம் எளிமை இல்லையா? தலாக் கொடுத்துவிடு

கட்டுரையின் பெயர்: மகிழ்ச்சி என்பது மலிவானதே!

மூலம்: sunnatillaram.blogspot.in/2013/12/blog-post_20.html

மேற்கோள்:

தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் என்பதை முன்னரே நாம் பார்த்தோம். அதை மீண்டும் இங்கே சுருக்கமாகப் பதிவு செய்வோம், 

இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு ஒரு தடவை இப்ராஹிம் (அலை) அவர்கள்  மகனைச் சந்திக்க மக்காவுக்கு வந்திருந்தார்கள். அப்போது இஸ்மாயில் வீட்டில் இல்லை; அவரது மனைவியிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல்; அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்கு வந்தபோது - தந்தை வந்து விட்டுப்போன செய்தியையும், தந்தையின் அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு  அந்த் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

5.2 மனைவியிடம் சகிப்புத்தன்மை இல்லையா? தலாக் கொடுத்துவிடு

கட்டுரையின் பெயர்: மனைவிக்குத் தேவை சகிப்புத் தன்மை!

மூலம்: sunnatillaram.blogspot.in/2014/04/blog-post_14.html

மேற்கோள்:

இஸ்மாயில் (அலை) அவர்களின் முதல் மனைவியிடம் இந்த சகிப்புத் தன்மை இல்லை! அந்த மனைவி "நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்; நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிடுகிறார்! அந்த மனைவியை "மாற்றி விடுமாறு" மறைமுகமாகச் சொல்லி விட்டுச் செல்கிறார் இப்ராஹிம் (அலை) அவர்கள்.

முடிவுரை:

எளிமையோ சகிப்புத்தன்மையோ, இவைகளுக்காக விவாகரத்து கொடுப்பது காட்டுமிராண்டித்தனம்.

முஹம்மதுவின் சமுதாயத்தில், ஆரம்ப கால இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக, சில நேரங்களில் மிருகங்களுக்கு சமமாக மதிக்கப்பட்டனர். 

  • குடும்ப செலவிற்கு பணம் அதிகமாக கேட்டால் தலாக்.
  • ஒரு இரகசியத்தை காக்கவில்லையென்றால் தலாக்.
  • மனைவிக்கு அழகு குறைந்துவிட்டால் தலாக். 
  • மனைவிக்கு வயது கூடிவிட்டால் தலாக்.
  • இதர மனைவிகளோடு போட்டிபோட முடியாது என்று கணவன் நினைத்தால் தலாக்.
  • மாமனாருக்கு விருப்பமில்லையென்றால் தலாக்.
  • குடும்பம் கஷடத்தில் உள்ளது என்று உண்மையை பேசினால் தலாக்.

என்ன நடக்கிறது இஸ்லாமிய சமுதாயத்தில்? இப்படிப்பட்ட ஹதீஸ்களை மேற்கோள் காட்டி மசூதிகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தும் போது, அவைகளை கேட்கும் ஆண்கள் என்ன நினைப்பார்கள்?

தற்காலத்தில் SMS மூலமாக தலாக் சொல்லும் முஸ்லிம் ஆண்களை தயார் படுத்தியது யார்? மேற்கண்ட ஹதீஸ்களும் குர்-ஆன் வசனங்களும் தான்.

தலாக்கிற்கு இன்னும் தலாக் கொடுக்கப்படும்…