கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்

ஆசிரியர்: ரோலண்ட் கிளார்க்

முஹம்மதுவை கேலி செய்ததின் காரணமாக பெருகிவந்துக்கொண்டு இருக்கும் வன்முறையை சாந்தப்படுத்த, சி என் என் (CNN) என்ற தொலைக்காட்சி, ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ஷேக் என்ற ஒரு புத்திசாலி இஸ்லாமிய விரிவுரையாளரின் மேற்கோளை காட்டியது:

“லிபியா, எகிப்து, துனிஷியா, யெமன் மேலும் இதர இடங்களில் அரங்கேரிய புத்தியில்லாத வன்முறைகள், குற்றமற்ற அனேகரின் மரணத்திற்கு காரணமாக இருக்கிறது, மேலும் அதிக ஆபத்தை அது உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது ஒரு சரியான வழிமுறையல்ல, இதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை”.

இந்த கட்டுரை வெளியான சில நாட்களுக்குள்ளேயே, பாகிஸ்தானில் 15 பேர் கொல்லப்பட்டார்கள், இவர்கள் அப்பாவிகளாவார்கள், அதாவது இவர்களுக்கும் அந்த “முஸ்லிம்களின் அறியாமை” என்ற வீடியோவிற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.

தற்போது நடந்துக்கொண்டு இருக்கும் இந்த வன்முறை செயல்கள், நமக்கு 2006 ஆண்டு நடந்த வன்முறையை ஞாபகப்படுத்துகிறது, அதாவது இஸ்லாமின் மதிக்கத்தக்க நபி முஹம்மதுவை கேவலப்படுத்தும்படியாக வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் அந்த வன்முறைக்கு காரணமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் முக்கியமான அனேக இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தார்கள், அது என்னவென்றால் “குற்றமில்லாத மக்களை கொல்லும் இந்த வன்முறைகளினால், இஸ்லாம் கறைபடுத்தப்படுகிறது” என்பதாகும். ஆப்கானிஸ்தானின் ஒரு முக்கியமான இஸ்லாமிய இமாம், முஹம்மது உஸ்மான் என்பவர் “இந்த வன்முறை செயல்கள் இஸ்லாமுக்கு கெட்ட பெயரை கொண்டுவருகிறது” என்று கூறியுள்ளார் (Islamism: A Cartoon of Islam).

தாவீது இராஜாவின் குமாரன் சாலொமோன் கூறிய நீதிமொழிக்கு ஏற்றது போல, உள்ளது மேற்கண்ட இஸ்லாமியர்களின் எச்சரிக்கைகள்: நீதிமொழிகள் 19:11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்த மேற்கண்ட வசனம் சொல்வதை கைக்கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாமியர்கள் கூட முந்தைய நபிகளுக்கு இறக்கப்பட்டதை நம்புகிறபடியினால், நாம் இப்படிப்பட்ட நல்ல அறிவுரைகளை ஏற்கவேண்டும். குற்றத்தை மன்னிப்பது நமக்கு மகிமையாக இருக்கிறது என்பதை நாம் நம்பினால், முஹம்மதுவும், இயேசுவும் இந்த விஷயத்தில் (கேலி செய்தல் பற்றி) எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதை கவனிப்பது சாலச்சிறந்தது. இவ்விருவர் இஸ்லாமையும் மற்றும் கிறிஸ்தவத்தையும் தோற்றுவித்தவர்கள் / மூலைக்கற்கள் ஆவார்கள். எனவே, இவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் செய்தார்கள் என்பதை கவனிப்போம்.

கேலி செய்தவரை கொல்வது (முஹம்மது):

சஹீஹ் புகாரி ஹதீஸில் எப்படி ஒருவன் முஹம்மதுவை கேலிசெய்து அவர் மனதை புண்படுத்திவிட்டான் என்பதை வாசிக்கமுடியும். சஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள்.

உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள். . . .

இந்த ஹதீஸ் மிகவும் நீளமாக இருப்பதினால், வெறும் சுருக்கத்தை இங்கு கொடுத்துள்ளோம். இதன் முடிவுரை என்னவென்றால், கஅப் என்பவர் கொலை செய்யப்பட்டார்( MUHAMMAD AND THE MURDER OF KAB BIN AL-ASHRAF). உண்மையில், இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, தம்மை கேலிசெய்து எதிர்த்தவர்களை முஹம்மது கொலை செய்தார். துரதிஷ்டவசமாக மேற்கண்ட ஹதீஸ்களை படிக்கும் முஸ்லிம்கள் தங்கள் நபியை கெலிசெய்யும் நபர்களைக் கண்டால், மூர்க்கவெறி கொண்டு கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் சென்றுவிடுகின்றனர். தம்மை கேலி செய்பவர்களிடம் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார் என்பதை அறிய இந்த விவரமாக கட்டுரைகளை படிக்கவும் கட்டுரை 1, கட்டுரை 2.

கேலிசெய்பவர்களிடம் பொறுமையுடன் இருந்து மன்னித்தல் (இயேசுக் கிறிஸ்து):

முஹம்மதுவை கேலி செய்து எதிர்த்தது போலவே இயேசுவையும் கேலி செய்து எதிர்த்தனர், ஆனால், இப்படிப்பட்டவர்களை கொல்லும் படி, இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிடவில்லை. மக்கள் தன்னை கேலி செய்யவும், அவமானப்படுத்தவும், அவ்வளவு ஏன், தம் முகத்தில் துப்பவும் இயேசு அனுமதித்தார். இயேசுவை சிறைபிடித்து, அவரை சிலுவையில் அறைந்த நிகழ்ச்சியை நீங்கள் கீழ்கண்ட மத்தேயு 27:1-54 வரையுள்ள வசனங்களில் படியுங்கள்:

விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

. . . . தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான் .

அதற்கு இயேசு : நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.

அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.

பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான்.

அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு , அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.

அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.

அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள் .

ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இயேசு அவமானப்பட்டார், நிந்திக்கப்பட்டார் என்பதை காட்ட நான் அதிக வசனங்களை மேற்கோள் காட்டினேன். உண்மையில் அவரை அனேகர் நிந்தித்தார்கள்,

1) ரோம காவலாளர்கள்

2) யூத மத தலைவர்கள்

3) மக்கள் கடைசியாக

4) அவருரோடு சிலுவையில் அறியப்பட்ட கள்ளர்கள் கூட நிந்தித்தார்கள் .

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இயேசு தம்மை நிந்தித்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதாகும். முஹம்மதுவின் வாழ்வில் காணப்பட்டது போல, தம்மை நிந்தித்தவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம், இயேசுவிடம் காணப்பட்டதா? மேலும், சமீப காலத்தில் நாம் செய்தித்தாள்களில் படித்ததுபோல, முஹம்மதுவை கேலி செய்து வெளியான படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கொண்ட மூர்க்கவெறி இயேசுவிடம் காணப்பட்டதா?

இயேசு தம்மை அவமானப்படுத்தியவர்களை பழி வாங்கவில்லை என்று வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. அதற்கு பதிலாக, இயேசு பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காட்டினார். தனக்கு எதிராக செய்த தவறுகளை அவர் மன்னித்தார் (இது நமக்கு நீதிமொழிகள் 19:11ம் வசனத்தை ஞாபகப்படுத்துகிறது). மத்தேயு 26:52-54ல் காண்பதுபோல, அனேக ஜனங்கள் ஆயுதங்களுடன் வரும் போது கிறிஸ்து பொறுமையுடன் சர்வ வல்லவரில் சார்ந்திருந்தார். அந்த மக்கள் அவரை கைது செய்ய வந்தார்கள். வாளை பயன்படுத்திய பேதுவை நோக்கி இயேசு “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் என்றார். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்”.

மக்கள் இயேசுவிற்கு எதிராக செய்த குற்றங்களை அவர் பொறுமையோடு சந்தித்தது மட்டுமல்ல, அவைகளை அவர் மன்னித்தும் விட்டார். இதனை நாம் லூக்கா 23:34ல் காணலாம், அங்கே அவர் “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் ”.

இயேசு தன்னுடைய எதிர்களிடம் கிருபையையும், அன்பையையும் காட்டினார். இயேசுவின் இந்த செயல் முஹம்மதுவின் செயல்களுக்கும், போதனைக்கும் எதிரானதாகும். உண்மையில் இயேசு, அநீதியை பொறுமையுடன் சகித்துக்கொள்வதைப் பற்றிய ஒரு மாதிரியை மட்டும் காண்பித்துச் செல்லவில்லை. மேலும் தன்னை பின்பற்றும் மக்கள் கீழ்கண்டவைகளை செய்ய போதித்துச் சென்றுள்ளார், ” நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் ”(மத்தேயு 5:44)

இயேசுவின் மாதிரியை பின்பற்றுதல்:

இன்று இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் நிந்திக்கப்படுகிறார்கள், பல பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை யாரும் நிராகரிக்கமுடியாது. இயேசுவின் போதனையும் இந்த நிலையை முன்னறிவித்துள்ளது. இயேசு தாம் எப்படி பாடுகள் அனுபவித்தாரோ அதே போல கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்படுவார்கள் என்று இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார் (யோவான் 15:18-20, 1 பேதுரு 2:21-23; 4:12, பிலிப்பியர் 1:28-29). மேலும் தம்மை பின்பற்றுபவர்களை சிலர் இறைவனின் பெயரில் கொலை செய்வார்கள் என்று இயேசு முன்னறிவித்துள்ளார் (யோவான் 16:2).

கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை அதிகமாக முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். முக்கியமாக சலீம் மன்ஸூர் என்ற அரசியல் பாட பேராசிரியர், மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவ சிறும்பான்மையினர் மீது இஸ்லாமியர்களின் வன்முறை என்பது “சகிக்கமுடியாதது, மனிதாபமற்றது” என்று கூறுகிறார்.

இறைவனின் பிள்ளைகளின் வெற்றி:

ஒரு கிறிஸ்தவன் தேவனுக்காக உயிர்த்தியாகம் செய்கிறானோ இல்லையோ, ஆனால் தன்னை எப்போதும் தேவன் கவனித்துக்கொண்டு இருக்கிறார், இந்த தீய உலகத்திலிருந்து தன்னை காப்பார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது (யோவான் 17:11-15). இதே போல நம்பிக்கையை ”1 யோவான் 5:4,5,11,12” தருகிறது:

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

ஒரு வெற்றியுள்ள உயிர்த்தியாகம் பற்றி பைபிள் இவ்விதமாக கூறுகிறது: மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 12:11)

வெற்றியும் கௌரவமும்:

மார்க்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை கௌரவப்படுத்தி, அவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள் என்று புகழாரம் சூட்டுவது என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. இஸ்லாமை பொறுத்தமட்டில், ஒருவர் சொர்க்கத்தை அடையும் நிச்சயமான வழி என்னவென்றால், ஜிஹாதில் தன் உயிரை கொடுத்து மரிப்பதாகும். எனினும், பைபிளை பொறுத்தமட்டில், சாத்தானை வெற்றிக்கொண்டு, தேவனால் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவதற்கு நம்முடைய சொந்த நீதியான காரியங்கள் உதவாது, அதற்கு பதிலாக, ஆட்டுக்குட்டியின் (இயேசுவின்) இரத்தத்தின் மூலமாக கிட்டும் கிருபை அதற்கு உதவும்.

உயிர்த்தியாகம் மற்றும் கௌரவம் என்றால் என்ன என்பதை இயேசுவின் போதனை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தம்மை பின்பற்றுபவர்கள் யார் என்பதையும், உயிர்த்தியாகம் செய்பவர்கள் யார் என்பதையும் இயேசு அடையாளம் காட்டியுள்ளார். அதாவது, தங்கள் உயிரை அதிகம் நேசிக்காதவர்கள், அப்படியானால், மரிப்பதற்கு பயப்படாதவர்கள் யார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:25,26)

மேற்கண்ட வசனங்களுக்கு (25,26) முன்னான வசனங்களில் , இயேசு தாம் மகிமையில் செல்வதைப் (மரிப்பதைப்) பற்றிய ஒரு உவமையை கூறினார், அதாவது ஒரு கோதுமை மணியானது மரித்தால் மட்டுமே, மிகுந்த அறுவடையை கிடைக்கும் என்பதைக் குறித்து விவரித்தார்.

இந்த தற்போதைய கட்டுரையின் தலைப்பு பற்றிய இதர முக்கியமான கட்டுரைகள்:

1) இயேசுவும் முஹம்மதுவும் நிந்தனையை எப்படி எதிர்க்கொண்டு செயல்பட்டார்கள் என்ற ஒரு ஒப்பிட்டை கட்டுரையாக ஜான் பைபர் மிகவும் அழகாக எழுதியுள்ளார்: நிந்திக்கப்படும் போது: முஹம்மதுவின் செய்ல்பாடுகளில் அல்ல, கிறிஸ்துவின் செயல்பாடுகளில் உள்ள சாராம்சம்.

2) கேலிச்சித்திரத்தினால் உண்டான கலவரங்கள் பற்றிய 2006ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரை: இஸ்லாமை இழிவுப் படுத்துவது எது? - What Defames Islam?

3) இயேசுவையும் முஹம்மதுவையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட இரண்டு முக்கியமான கட்டுரைகள்: Jesus and Muhammad: Fifteen Major Differences and The Cornerstone: Muhammad or Jesus?

4) கடைசியாக, இந்த ஒரு கட்டுரையை நான் உங்களுக்கு பரிந்துரை செய்வேன், அதாவது சமீபத்தில் வெளியான அந்த வீடியோவை முஹம்மது கண்டிருந்தால், எப்படி செயல்பட்டு இருப்பார் என்பதைப் பற்றிய கட்டுரையாகும்: அந்த வீடியோவை முஹம்மது பார்த்து இருந்திருந்தால், என்ன செய்து இருப்பார்?

ஆங்கில மூலம்: Mockery & Honor: Muhammad and Jesus

ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்