நபிகளும் அவர்களின் அழுகா சடலங்களும்
முஹம்மது ஒரு கள்ள நபி என்பதற்கு இன்னொரு ஆதாரம்
சாம் ஷமான்
இது ஒரு சிறிய கட்டுரையாகும், நான் நேரடியாக கருப்பொருளுக்கு வருகிறேன். ஒரு குறிப்பிட்ட ஹதீஸின் படி, முஹம்மது இவ்விதமாக கூறியுள்ளார். அதாவது, நபிகள் மரித்துவிட்டால், அவர்களின் உடல்கள் அழிக்கப்படாமல் இருக்கும்படி அல்லாஹ் பாதுகாப்பானாம். மரித்த உடல்களை மண்ணில் புதைக்கும் போது, பல நாட்கள்/மாதங்களுக்குள் அவைகளை மண் தின்றுவிடும், வெறும் எலும்புகள் தான் மிஞ்சம். ஆனால், முஹம்மதுவின் படி, அல்லாஹ் எல்லா நபிமார்களின் புதைக்கப்பட்ட உடல்கள் அழிக்கப்படாமல் (மக்கிவிடாமல்) பாதுகாத்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளான் என்று முஹம்மது கூறியுள்ளார்.
"உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் "நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?" என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் "நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா
இன்னொரு ஹதீஸ்:
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: நஸாயீ 1357
நாம் இனி காணப்போகும் பைபிளின் வசனங்களின் படி, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பது நிருபனமாகும். பைபிளில் அனேக தீர்க்கதரிசிகளின் மரித்த உடல்களை மண் தின்றுள்ளது என்பதைக் காண்கிறோம், அவர்களின் எலும்புகள் மட்டுமே மிச்சமாக இருந்துள்ளன (உதாரணத்திற்கு யோசேப்பைச் சொல்லலாம்).
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள். (ஆதியாகமம் 50:24-26)
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான். அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். (யாத்திராகமம் 13:19-20)
மற்றும் எலிஷா தீர்க்கதரிசியின் எலும்புகளைப் பற்றி நாம் படிக்கிறோம்:
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப் போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின் மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். (2 இராஜாக்கள் 13:19-20)
குர்-ஆன் எப்படி முந்தைய வேதங்களை உறுதிச் செய்கிறது என்பதை கவனியுங்கள். மேற்கண்ட விவரங்கள் முந்தைய வேதங்களில் காணப்படுகிறது, அவைகளைத் தான் முஹம்மதுவும் குர்-ஆனும் உறுதிச் செய்திருக்கிறார்கள். பைபிள் பற்றிய குர்-ஆனின் சாட்சிகளைப் பாருங்கள் (வசனங்கள் அனைத்தும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்).
இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:40-44)
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! (குர்-ஆன் 2:89)
“அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக. (குர்-ஆன் 2:91)
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (குர்-ஆன் 2:97)
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்-ஆன் 2:101)
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.(குர்-ஆன் 4:47)
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.(குர்-ஆன் 46:12)
(ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.(குர்-ஆன் 46:30)
மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் முந்தையை வேதமாகிய பைபிளை உறுதிப்படுத்துகிறது என்று முஸ்லிம்களிடம் சொல்லும் போது, ‘இல்லை, அது திருத்தப்பட்டுவிட்டது’ என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால் இது அவர்களுக்கு பயன்படாது. முஸ்லிம்கள் இப்படி சொல்வது அவர்களின் நபியாகிய முஹம்மதுவிற்கே தலைவலியாக மாறும், ஏனென்றால், மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் எவைகளை உறுதிச்செய்கிறதோ, அவ்வேதத்தை அறியாதவராக முஹம்மது இருக்கிறார். முஹம்மது முந்தைய வேதங்களை உறுதிச் செய்ய வந்தார், ஆனால் முஸ்லிம்கள் அவ்வேதங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள்.
இக்கட்டுரையில் நாம் ஆரம்பத்தில் கண்ட ஹதீஸ்களின் படி, நபிமார்களின் உடல்கள் மக்காது (மண் தின்பதில்லை) என்று முஹம்மது சொன்னார், ஆனால், முந்தைய வேதங்களில் (பைபிளில்) கண்ட வசனங்களின் படி, நபிமார்களின் உடல்களும் அழுகும், அவைகளை மண் தின்றுவிடும் என்று பார்த்தோம். இதன் மூலம் அறிவது என்ன? முந்தைய வேதங்களில் என்ன உள்ளது என்பதை முஹம்மது அறியவில்லை, அவருக்கு கற்றுக்கொடுத்த அல்லாஹ்விற்கே தெரியவில்லை என்பதாகும். மேலும், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்றும், அல்லாஹ் பைபிளின் தேவன் அல்ல என்பதும் இதன் மூலம் நிருபனமாகிறது.