ஒரு கிறிஸ்தவர் இஸ்லாம் பற்றி போதிக்கும் போது, அங்கு ஒரு முஸ்லிம் கட்டாயம் இருக்கவேண்டுமா?

ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்

நான் கடந்த 10 ஆண்டுகளாக இஸ்லாம் பற்றி போதித்துக்கொண்டு இருக்கிறேன். பல முறை கிறிஸ்தவரல்லாதவர்கள் என்னிடம் கேள்விகள் கேட்பார்கள். ஒருமுறை கீழ்கண்ட கேள்வியை ஒருவர் என்னிடம் கேட்டார்:

“நீங்கள் இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்களுக்கு  வகுப்புகள் எடுக்கும் போது, ஒரு முஸ்லிமை அந்த கூட்டத்திற்கு வரவழைத்து, நீங்கள் போதிக்கும் விவரங்களுக்கு பதில்களைச் சொல்ல அனுமதிப்பீர்களா? உங்களின் போதனையை சரி பார்க்க அவருக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா?”

இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுக்கப்படும் வகுப்புகளுக்கு முஸ்லிம்களை அழைக்காமல் இருப்பது அநியாயம் என்று சிலர் கருதுகிறார்கள். இந்த கேள்விகளைக் குறித்து நான் என் கருத்துக்களை சுருக்கமாக இங்கு எழுதுகிறேன்.

முதலாவதாக, இஸ்லாம் பற்றி போதிக்கப்படும் இடத்திற்கு முஸ்லிம்களை கட்டாயம் அழைக்கவேண்டும் என்பதற்கு மிகச்சில காரணங்களே இருக்கமுடியும். உதாரணத்திற்கு சொல்வதானால், கிறிஸ்தவ-இஸ்லாம் விவாத நிகழ்ச்சிக்கு, கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்ச்சிக்கு கட்டாயம் முஸ்லிம்களை அழைத்தே ஆகவேண்டும். நான் சில நேரங்களில், முஸ்லிம்களை அழைத்து  இஸ்லாம் பற்றிய தங்கள் நிலைப்பாட்டை கிறிஸ்தவர்களிடம் விவரிக்க சொல்லி, அதன் பிறகு கிறிஸ்தவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளேன். கிறிஸ்தவர்கள் நடத்தும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு முஸ்லிம்களை அழைப்பது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நானோ அல்லது கிறிஸ்தவ-இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடத்தும் நிர்வாகியோ, கட்டாயம் முஸ்லிம் அறிஞர்களை அழைக்கவேண்டும் என்றுச் சொல்வதில் அர்த்தமில்லை, அது தேவையும் இல்லை. 

இரண்டாவதாக, நான் பல முறை கிறிஸ்தவர்களுக்கான நிகழ்ச்சிகளில் பேசும் போது, அவைகள் பெரும்பான்மையாக, இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளாக இருக்கும். இந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாம் பற்றி போதனை செய்துவிட்டு, சத்தியத்தை முஸ்லிம்களுக்கு எப்படி சொல்லவேண்டும் என்று கற்றுக்கொடுப்பேன். இவ்விதமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களை அழைப்பது தேவையில்லாத ஒன்றாகும். இஸ்லாமை போதிக்கும் நிகழ்ச்சிக்கு முஸ்லிம்களை அழைத்தால், அந்த நிகழ்ச்சி எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ, அது முறியடிக்கப்பட்டு விடும். 

மூன்றாவதாக, பலர் என்னிடம் ”உங்கள் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் அறிஞர் இருந்தால் நீங்கள் செய்யும் பிழைகளை சரி செய்துக் கொள்ளமுடியும் அல்லவா” என்று கேட்டுள்ளார்கள். என்னுடைய போதனையில் பிழைகள் இருக்கும் என்றும், அவைகளை முஸ்லிம்கள் மட்டுமே சரி செய்யமுடியும் என்றும் அவர்கள் எண்ணுவதினால் தான் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கிறார்கள். இஸ்லாமோ கிறிஸ்தவமோ, எப்போதெல்லாம் ஒரு சிறிய பிழை நடந்துள்ளது என்று எனக்கு தெரிகிறதோ, உடனே அதனை நான் சரி செய்துக்கொள்கிறேன். ஆனால், நான் ஒரு முஸ்லிமல்லாதவனாக இருப்பதினால், இஸ்லாம் பற்றிய தவறான விவரங்களை நிச்சயம் சொல்வேன் என்று எண்ணுவது தவறாகும்.

நான்காவதாக, ஒரு முக்கியமான கேள்வியை கேட்கவேண்டும். கிறிஸ்தவர்களிடம் கேட்ட இதே கேள்வியை முஸ்லிம்களிடமும் கேட்கமுடியுமா? அதாவது முஸ்லிம்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில், வகுப்புகளில் கிறிஸ்தவ அறிஞர்களை அழைத்து, முஸ்லிம்களின் போதனைகளில் இருக்கும் பிழைகளை சரி செய்ய கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? இன்னும் சரியாக கேட்கவேண்டுமென்றால், சௌதி அரேபியாவில் கிறிஸ்தவம் பற்றி மசூதிகளில் இமாம்கள் பேசும் போது, அங்கு கிறிஸ்தவர்களை வரவேற்று, அந்த இமாம்கள் சொல்லும் போதனைகளை சரி செய்ய வாய்ப்பு தரப்படுமா? இந்த ஆசை ஒரு போதும் நிறைவேறாது. முஸ்லிம்கள் இப்படி கிறிஸ்தவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. அது முஸ்லிம்களின் விருப்பம், அவர்கள் தங்கள் மசூதிகளில் பயான் செய்யும் போது, முக்கியமாக கிறிஸ்தவம் பற்றி பேசப்படும் பயான்களில், கிறிஸ்தவர்களை அழைப்பதற்கும், அழைக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தேவைக்கு ஏற்ப முஸ்லிம்களை அழைத்து பேச வைக்கிறோம். ஆனால், இது எங்களுக்கும் கட்டாயமில்லை, இதுவும் எங்கள் விருப்பம் தான். கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழைக்காமல், பல இஸ்லாமிய தலைப்புக்களில், தங்கள் சபை விசுவாசிகள் மத்தியிலே, அல்லது பல சபைகள் ஒன்றாக சேர்ந்து பல கூட்டங்களை நடத்தலாம், கருத்து பரிமாற்றங்கள் செய்துக்கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் தனிப்பட்ட கூட்டங்களில் முஸ்லிம்களை அழைக்காமல் இருக்க நியாயமான காரணங்கள் உள்ளன. நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? தலைப்பு என்ன? யார் யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள், இன்னும்  பல காரணங்களின் அடிப்படையில் முஸ்லிம்களை நம் எல்லா நிகழ்ச்சிகளிலும் அழைப்பதில்லை. இது நியாயம் கூட.

Source: http://www.str.org/blog/must-muslim-also-present-when-christian-teaches-islam

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

To know about the Author, visit: http://www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்