குர்-ஆன் பைபிளைவிட அளவில் சிறியதா? (அ) பெரியதா?

நான் என் சக கிறிஸ்தவர்களிடம் இஸ்லாம் பற்றி பேசும் போதும், திருச்சபைகளில் மற்றும் இதர கிறிஸ்தவ கூட்டங்களில் பேசும் போதும், ஒரு கையில் பைபிளையும், இன்னொரு கையில் குர்-ஆன் தமிழாக்கத்தையும் எடுத்துக்காட்டி  பேசுவதுண்டு. மேலும், குர்ஆனை படித்து புரிந்துக் கொள்ளுங்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு சொல்வதுண்டு.

1) ஒரே அளவுள்ள பைபிள் மற்றும் குர்-ஆன்

குர்-ஆனையும், பைபிளையும் நான் உயர்த்தி பிடித்துக் காட்டி பேசுவதைக் காணும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கேள்வி எழுவதுண்டு. அதாவது, பைபிளைப் போல குர்ஆனும் அளவில் பெரியதா? என்பதாகும். குர்-ஆனில் மொத்தம் 6236 வசனங்கள் மட்டுமே உள்ளன என்று நான் சொல்லிவிட்ட பிறகும், குர்-ஆன் மற்றும் பைபிளைக் காணும் அவர்களின் கண்கள் அவர்களை ஏமாற்றுகிறது. என்னிடமுள்ள  இவ்விரண்டு புத்தகங்களும் ஒரே அளவுள்ளதாக காணப்படுவது தான் காரணம்.

குர்-ஆனும் பைபிளைப் போல ஒரு பெரிய  புத்தகம் தான், இதனை படிக்க அதிக நேரம் தேவை என்ற சந்தேகத்தில் கிறிஸ்தவர்களில் சிலர் இருக்கிறார்கள். குர்-ஆன் என்பது பைபிளை விட அளவில் சிறியது என்பதை வேறு ஒரு வகையில்(Method) அவர்களுக்கு விளக்கி, அவர்களின் சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கிறேன். இதன் மூலமாக, குர்-ஆனின் அளவு பற்றிய தவறான எண்ணம் மாற்றப்பட்டு, கிறிஸ்தவர்கள் குர்-ஆனை படிக்க உற்சாகம் கொள்கிறார்கள்.  அந்த மெதடைத்(Method) தான்  இந்த கட்டுரையில் நான் விளக்கப்போகிறேன்.  இது படிக்க சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

2) பைபிள் மற்றும் குர்-ஆனின் மொத்த வசனங்கள்

முதலாவதாக, நாம் பைபிள் மற்றும் குர்-ஆனின் மொத்த வசனங்களின் எண்ணிக்கையை தெரிந்துக் கொள்ளவேண்டும்.

குர்-ஆன்:

குர்-ஆன் ஒரே புத்தகமாக கருதப்படுகின்றது, அது 114 அத்தியாயங்களாகவும், 6236 வசனங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயங்கள் (ஸூரா) வசனங்கள் (ஆயத்)
114 6236

பைபிள்: 

பைபிள், பழைய, மற்றும் புதிய ஏற்பாடுகள் என்ற இரு பெரிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன, புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. மொத்த வசனங்கள்: 31,102 ஆகும் [1]. 

பிரிவுபுத்தகம்அத்தியாயங்கள்வசனங்கள்
பழைய ஏற்பாடு3992923,144
பதிய ஏற்பாடு2726079,58
மொத்தம் 118931,102

சுருக்கம்:

  • பைபிள்: மொத்தம் 31,102 வசனங்கள்
  • குர்-ஆன்: மொத்தம் 6236 வசனங்கள்
  • குர்-ஆன் பைபிளை விட 80% சிறியது.
  • குர்-ஆன் பைபிளின் அளவில் 20% வசனங்களை கொண்டுள்ளது.
  • குர்-ஆன் பைபிளில் ஐந்தில் ஒரு பாகம் கொண்டது (1/5)

(ஒரே விவரத்தை பல வகைகளில் மேலே கூறியுள்ளேன் அவ்வளவு தான்).

இனியாவது கிறிஸ்தவர்கள் குர்-ஆனை படிப்பார்களா? 

ஒரு வருடத்தில் முழு பைபிளையும் படிக்கும் கிறிஸ்தவர்கள், குர்-ஆனை வெறும் 75 நாட்களில் (2.5 மாதத்தில்) படித்து முடித்துவிடலாம். உங்களை உற்சாகப்படுத்த இன்னும் சில சுவாரசியமான விவரங்களை அடுத்தடுத்த பாயிண்டுகளில் விளக்கியுள்ளேன். 

கவனிக்கவும்: நம்முடைய ஒப்பிடுதலுக்கு நாம் தமிழாக்க குர்-ஆன் மற்றும் பைபிளை எடுத்துக் கொண்டுள்ளோம். இவைகளின் மூல மொழிகளாகிய அரபியையோ, அல்லது எபிரேய, கிரேக்க மொழிகளையோ நாம் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அரபி குர்-ஆனில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன, எபிரேய/கிரேக்க பைபிளில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்ற ஒப்பிடுதலை இங்கு நாம் செய்யவில்லை. நமக்கு இது தேவையும் இல்லை. நம்முடைய ஒப்பிடுதல், வெறும் வசனங்களின் எண்ணிக்கையை மட்டுமே கருத்தில் கொள்கிறது. குர்-ஆனிலும் சரி, பைபிளிலும் சரி, சில வசனங்கள் 2-5 வார்த்தைகளை கொண்ட சிறிய வசனங்களாக இருக்கும். சில வசனங்கள் பல வரிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வசனமாக, பத்தியாக இருக்கும். இருந்த போதிலும், நாம் வசன எண்ணிக்கையை மட்டுமே இங்கு கருத்தில் கொள்கிறோம்.

3) குர்-ஆனை பழைய ஏற்பாட்டோடு ஒப்பிட்டால்!

முழு பைபிளோடு ஒப்பிட்டால், குர்-ஆனின் அளவு 20% என்பதை புரிந்துக் கொண்டோம். ஆனால், பழைய ஏற்பாட்டோடு மட்டுமே குர்-ஆனை ஒப்பிட்டால், அதன் அளவு எவ்வளவு? அதாவது குர்-ஆன் பழைய ஏற்பாட்டு புத்தகங்களோடு ஒப்பிட்டால், எத்தனை புத்தகங்களுக்கு குர்-ஆன் சமமானதாக இருக்கும்? 

குர்-ஆன் மொத்த வசனங்கள்: 6236

குர்-ஆன் பழைய ஏற்பாட்டின் 27% வசனங்களை கொண்டுள்ளது எனலாம்.

சுருக்கம்: நமக்கு பழைய ஏற்பாட்டில், மேற்கண்ட ஐந்து புத்தகங்களை படிக்க எவ்வளவு நேரம் பிடிக்குமோ, அவ்வளவு நேரம் தான் குர்-ஆனை படிக்க பிடிக்கும். மேற்கண்ட ஐந்து புத்தகங்களின் மொத்த வசனங்களும், முழு குர்-ஆனின் மொத்த வசனங்களும் சமம். 

4) குர்-ஆனை புதிய ஏற்பாட்டோடு ஒப்பிட்டால்!

சரி, புதிய ஏற்பாட்டை விட குர்-ஆன் அளவில் பெரியதா? சிறியதா? இதையும் பார்த்துவிடலாமே!

குர்-ஆன் புதிய ஏற்பாட்டின் 78.3% ஆகும்.

குர்-ஆன் புதிய ஏற்பாட்டின் ¾  (முக்கால்) பாகம் உள்ளது.

குர்-ஆன் புதிய ஏற்பாட்டைவிட 22% சிறியது.

நாம் (கிறிஸ்தவர்கள்) புதிய ஏற்பாட்டை படிக்க செலவிடும் நேரத்தில் முக்கால் பாகம் செலவிட்டாலே போதும், குர்-ஆனை படித்து முடித்துவிடலாம்.

5) பழைய/புதிய ஏற்பாட்டு புத்தகங்களோடு குர்-ஆனை ஒப்பிட்டால்?

பைபிளின் 20% தான் குர்-ஆன் என்பதை நாம் அறிந்துக் கொண்டோம். பைபிளின் ஒவ்வொரு பிரிவின் புத்தகங்களோடும் ஒப்பிட்டோம். கடைசியாக, பழைய புதிய ஏற்பாட்டு புத்தகங்களோடு ஒப்பிட்டால், முழு குர்-ஆன் எத்தனை புத்தகங்களின் வசனங்களுக்கு சமமாகும்?

பழைய ஏற்பாட்டின் சங்கீதமும், புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களையும் நாம் சேர்த்தால், வரும் வசனங்களின் கூட்டு தான் முழு குர்-ஆனின் வசனங்கள்.  இந்த ஐந்து புத்தகங்களை படிக்க நமக்கு தேவைப்படும் நேரத்திற்குள் குர்-ஆனை படித்துவிடலாம்.

இதுவரை பார்த்த விவரங்களை சுருக்கமாக, கீழ்கண்ட படத்தில் காணலாம்.

பட்டை வரைப்படம் (பார் சார்ட் - Bar Chart):

ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்றுச் சொல்வார்கள். பல வரிகள் எழுதி ஒரு விவரத்தை புரியவைப்பது ஒரு வகையென்றால்,  ஒரே ஒரு படத்தின் மூலமாக சுலபமாக புரியவைத்துவிடுவது, இன்னொரு வகையாகும். இதுவரை நாம் பார்த்த விவரங்களை இன்னும் சுலபமாக புரிந்துக்கொள்ள, கீழ்கண்ட வரைபடம் (Bar Chart) நமக்கு உதவும்.

குர்-ஆனில் 6000+ வசனங்கள் உள்ளன, பைபிளில் 31000+ வசனங்கள் உள்ளன என்றுச் சொல்லும் போது, மனதில் உண்டாகும் “புரிதலைக் காட்டிலும்”, மேற்கண்ட ”பார் கிராஃப்”ஐ பார்க்கும் போது, குர்-ஆன், மற்றும் பைபிள் பற்றிய வித்தியாசம் தெளிவாக புரிந்துவிடும்.

முடிவுரை:

மேற்கண்ட பட்டியலும் படமும் நமக்கு எப்படி உதவும்? இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும், நாம் குர்-ஆனை படிக்க நம்மை உற்சாகப்படுத்தும், அவ்வளவு தான். அதாவது, பைபிளை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, குர்-ஆனை படிப்பது பாரமாக தெரியக்கூடாது என்பதற்காக இந்த பட்டியலை நான் தயாரித்தேன். முக்கியமாக, குர்-ஆனை நாம் வாங்கிப் பார்த்தால், அதில் அரபியிலும், தமிழிலும் வசனங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதினாலும், தமிழாக்கத்தைச் செய்தவர், பல விளக்கவுரைகளை எழுதி, அதே குர்-ஆனில் ‘மேலதிக விளக்கமாக’ கொடுத்து இருப்பதினாலும் தான் ”குர்-ஆன் ஒரு பெரிய புத்தகமாக நம் கண்களுக்குத் தெரிகிறது”. உண்மையில், அது பைபிளோடு ஒப்பிடும் போது வசன எண்ணிக்கையில் 20% தான்.

கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு:

இவ்வளவு விவரங்களைச் சொன்ன நான், கீழ்கண்ட விவரங்களையும் சொல்லியாக வேண்டும்:

அ) பைபிளின் படி, குர்-ஆன் ஒரு இறைவேதமல்ல என்பதை கிறிஸ்தவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆ) குர்-ஆன் பைபிளின் அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும் எதிர்க்கிறது என்பதை கிறிஸ்தவர்கள் மறக்கக்கூடாது. பைபிளுக்கு விரோதமாக எழுதப்பட்ட புத்தகம் குர்-ஆன் ஆகும். 

இ) முஸ்லிம்களுக்கு சுவிசேஷம் சொல்பவர்கள், கட்டாயம் குர்-ஆனை படித்து, முடிந்த அளவிற்கு குர்-ஆனின் போதனையை புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பட்டியலை நான் தயாரித்து கொடுத்துள்ளேனே தவிர, ‘குர்-ஆன் ஒரு இறைவேதமென்றோ, அதனை கிறிஸ்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டுமென்றோ அல்ல’.

ஈ) குர்-ஆன், பைபிளைப் போல கோர்வையாக எழுதப்பட்ட புத்தகம் அல்ல. ஒரே அத்தியாயத்தில் பல விவரங்கள் சம்மந்தமில்லாமல் வரும், அடிக்கடி தலைப்புக்கள் மாறும். குருடனை கொண்டுச் சென்று அரேபிய பாலைவனத்தில் விட்ட கதை தான். உதாரணத்திற்கு, ஆதியாகமம் தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும், ஆங்காங்கே சில வசனங்களை எடுத்து, தலைப்பு இல்லாமல், ஒரு புத்தகமாக தொகுத்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இருக்கும் குர்-ஆன். அது சொல்லும் நிகழ்ச்சிகளின் பின்னணியை குறிப்பிடாமல் வசனங்கள் வருவதினால், குர்-ஆனை படிப்பவர்கள் தெளிவாக குழம்புவார்கள்.

உ) இத்தனை பிரச்சனைகள் உள்ள குர்-ஆனை ஏன் கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டும்?  முஸ்லிம்களுக்கு  நற்செய்தியை சொல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது, மேலும் அவர்களையும் பரலோக பிரஜைகளாக மாற்றவேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதால் தான், நாம் இஸ்லாமை கற்றுக்கொள்ளவேண்டும்.

குர்-ஆனையும், இஸ்லாமையும் இன்னும் சுலபமாக புரிந்துக்கொள்ள, நம் தளங்களில் உள்ள கட்டுரைகளை படிக்கவும். இன்னும் சில நுணுக்கங்களை, தகவல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் கர்த்தருக்கு சித்தமானால் பதிக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்

[1] பைபிளின் மொத்த வசனங்களின் எண்ணிக்கையை நான் ‘தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம்’ விளக்கவுரையிலிருந்து எடுத்தேன். இவ்விளக்கவுரையில், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னுரையில் ‘சில புள்ளிவிவரங்கள்’ என்ற தலைப்பின் கீழ், அப்புத்தகத்தின் மொத்த வசனங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, அவைகளை நான் இந்த கட்டுரைக்கு பயன்படுத்திக்கொண்டேன். நான் 66 புத்தகங்களின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சென்று, தனித்தனியாக வசனங்களை எண்ணவில்லை. இணையத்தில் தேடும் போது, ஆங்கிலத்தில் புத்தகவாரியாக வசன எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் தமிழில்  இப்படி புத்தகவாரியாக வசன எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை என்பதால், நான் தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமத்திலிருந்து எண்ணிக்கையை எடுத்தேன்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்