ரமளான் கேள்வி பதில்கள் - 1: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்

(கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் தொடர்கிறது)

ஒரு கிறிஸ்தவ போதகரும், உமரும் உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதம் ரமளான் மாதம் என்பதால் இந்த போதகர் உமரிடம் ரமளான் பற்றிய கேள்விகளை கேட்கிறார். சிலருக்கு  குறுங்கதைகள்  படிக்க பிடிக்கும், சிலருக்கு நீண்ட நாவல்களை படிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு இதர மதத்தவரின் பண்டிகைகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இந்த வகையைச் சார்ந்தவர் தான் இந்த போதகர். இவர் கேட்கும் ரமளான் கேள்விகள் மிகவும் முக்கியமான கேள்விகளாகும். ஒரு கிறிஸ்தவருக்கு ரமளான் பற்றி இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்ட விவரங்கள் குறைந்த பட்சம்  தெரிந்து இருக்கவேண்டும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுச் சொல்வார்கள் அல்லவா அதுபோல, வெளியே இருந்து பார்த்தால், தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாம் புதிதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் தெரியும், ஆனால், சிறிது ஆழமாக நெருங்கிச் சென்று பார்த்தால் தான் உண்மை நிலை புரியும். எனவே, வாருங்கள் ரமளானை தொட்டுப் பார்ப்போம், ரமளான் பாயாசத்தை சுவைத்துப் பார்ப்போம், பிரியாணியின் எலும்புகளை கடித்துப் பார்ப்போம். இந்த வருடம் நம் அண்டை வீட்டு முஸ்லிம்கள் ரமளான் பண்டிகையன்று கம கம என்று மனக்கும் சுவையான "அந்த பிரியாணியை" நமக்கு தருவார்களா? நம் இஸ்லாமிய நண்பர்கள் ரமளான் அன்று நம்மை விருந்துக்கு அழைப்பார்களா? இப்படி நம்மில் சிலர் சிந்திக்கக்கூடும். பிரதர், நீங்க என்ன தான் சொன்னாலும் சரி, முஸ்லிம்கள் செய்யும் பிரியாணியின் சுவையே தனி தான் என்று நீங்கள் மனதில் மௌனமாக சொல்வது என் காதுகளில் சத்தமாக கேட்கத்தான் செய்கிறது.  ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக, இஸ்லாமிய நண்பர்கள் நம்மை விருந்துக்கு அழைப்பதற்கு முன்பாக, ரமளானை சிறிது மனதால் முகர்ந்துப் பார்ப்போமா? வாருங்கள்.


கேள்வி 1: நான் ஒரு சபையின் போதகராக இருக்கிறேன். ரமளான் என்றால் இஸ்லாமியர்களின் பண்டிகை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதற்கு மேலாக ஒன்றும் தெரியாது. ரமளான் என்றால் என்ன? சிறிது விளக்கமுடியுமா?

பதில்: முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானவைகள் இரண்டு பண்டிகைகளாகும், அவை: ரம்ஜான் மற்றும் பக்ரீத் என்பவைகளாகும்.

சிலர் "ரமலான்" என்று அழைப்பார்கள், வேறு சிலர் "ரமளான்" என்றும், "ரமழான்/ரமதான்" என்றும் அழைப்பார்கள். நாம் இந்த கட்டுரையில் "ரமளான்" என்று பயன்படுத்துகிறோம்.

இஸ்லாமிய காலண்டர் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது.  இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்பதாவது மாதம் தான் ரமளான் எனப்படுகின்றது. 

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் இவைகளாகும் [1]: 

1) முஹர்ரம்

2) ஸபர்

3) ரபியுல்  அவ்வல்

4) ரபியுல் ஆஹிர்

5) ஜமாத்திலவ்வல்

6) ஜமாத்திலாஹிர்

7) ரஜப்

8) ஷஃபான்

9) ரமளான் (ரமலான்)

10) ஷவ்வால்

11) துல்காயிதா

12) துல்ஹஜ் 

ரமளான் என்றுச் சொல்லும் போது, எல்லாருக்கும் ஞாபகம் வருவது "நோன்பு" ஆகும். இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள்.

நோன்பு – இஸ்லாமிய கட்டாய கடமை

இஸ்லாமியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளில் (இஸ்லாமிய தூண்களில்) ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கவேண்டும் என்பதும் ஒரு கடமையாகும்.

இந்த ரமளான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்துவிட்டு, அதன் பிறகு பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவார்கள்.

கேள்வி 2: கிறிஸ்தவர்களின் உபவாசம் தான் ரமளான் நோன்பா? இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாங்கள் என்ன?

பதில்: நான் 2012ம் ஆண்டு ரமளான் மாதத்தில் என் தம்பிக்கு கடிதம் எழுதும் போது, இதைப் பற்றி எழுதியுள்ளேன், அதாவது கிறிஸ்தவர்களின் / இயேசுவின் உபவாசமும், முஸ்லிம்களின் ரமளான் நோன்பும் வெவ்வேறானவை என்று குறிப்பிட்டு இருந்தேன்[2] . அந்த கடிதத்தை இப்போது இங்கு தருகிறேன், முஸ்லிம்களின் நோன்பை சரியாக புரிந்துக்கொள்ள இது உதவியாக இருக்கும்.


இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?

 தேதி: சனி, 28 ஜூலை, 2012

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தாய். பைபிளின் வசனங்களைமேற்கோள் காட்டி கடிதம் எழுதினாய், அதற்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என்னுடைய முதல் கடித்தத்தில் நான் முன்வைத்த விவரத்திற்கு நீ பதிலைஎழுதினாய், அதாவது இஸ்லாமியர்களின் நோன்பு என்பது ஏதோ பழங்குடிமக்களின் சடங்காச்சரமல்ல, அது இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த மக்களின்வழக்கமல்ல, அது இயேசு பின்பற்றிய நோன்பு, யூதர்கள் பின்பற்றிய நோன்புஎன்றுச் சொல்லி பதில் எழுதியிருந்தாய். அதற்காக, கீழ்கண்ட மூன்று பைபிளின்வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தாய்.

இயேசு 40 நாட்கள் நோன்பு (உபசாவம்) இருந்தார்: மத்தேயு 4:2  அவர் இரவும்பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

இவ்விதமான பிசாசு உபவாசத்திலும்,ஜெபத்தினாலுமே தவிர போகாது –மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றிமற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

நோன்பு இருக்கும் போது மாயக்காரரைப்போல இருக்கவேண்டாம் என்று இயேசு கூறிய அறிவுரை: – 

மத்தேயு  6:16 நீங்கள் உபவாசிக்கும்போது,மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதைமனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள்தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்குஎண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப்பலனளிப்பார்.

உன்னுடைய பதிலுக்காக மிக்க நன்றி, ஆனால் மேற்கண்ட வசனங்களை காட்டி நீஎடுத்த முடிவு தவறானதாகும், அதாவது இஸ்லாமிய நோன்பும், பைபிளின்நோன்பும் ஒன்று தான் என்று நீ நினைத்துக்கொண்டாய். மேலோட்டமாகவசனங்களை நாம் பார்த்தால், இரண்டும் ஒன்று போல காட்சி அளிக்கும், ஆனால்,சிறிது ஆய்வு செய்தோமானால் அனேக வித்தியாசங்கள் காணப்படும். நீமேற்கோள் காட்டிய வசனங்களிலிருந்தே உனக்கு நான் சில விவரங்களைவிளக்குகிறேன்.

இஸ்லாமிய நோன்பிற்கும், கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும்வித்தியாசங்கள்:

  1. இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும்.அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படிகுற்றமாகும். ஆனால், கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்) என்பதுநிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்ல. நம்முடைய தேவையைபொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
  2. இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்து, சூரியன் அஸ்தமிக்கும்வரை தொடருகிறது, ஆனால், கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள்முழுவதும் தொடரும். இத்தனை மணிக்கு ஆரம்பித்து, இத்தனை மணிக்குமுடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பழைய மற்றும் புதியஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேகஎடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்).
  3. இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள்நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை, ஆனால், கிறிஸ்தவத்திலேவருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்புஇருக்கவேண்டும் என்ற கட்டளையில்லை. அவரவருக்கு விருப்பமானநாட்களில், விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள்.
  4. இஸ்லாமிய நோன்பில், அதிகாலையில் எழுந்திருந்து, சாப்பிடுவார்கள்,கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும்கட்டளையில்லை.
  5. முக்கியமாக, இஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான்நோன்பு இருப்பதினால், எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பதுதெரியவரும். ஆனால், கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன்என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை.இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசுசொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறது. அதாவது வெளிப்படையானஒன்றாக இருக்கிறது.
  6. இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாக இருப்பதினால், ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கானபரிகாரங்கள் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உபவாசத்தில்இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை.
  7. ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிர, மீதமுள்ளமாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில்அதிகமாக செலவாகும். அதாவது உணவு பணடங்களின் விற்பனையும்இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறது. ஏதோஅதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள், மீதமுள்ள பாதிநாள் நன்றாக சாப்பிடுகிறார்கள். இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதைநான் தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட வழக்கங்கள்கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.
  8. புகாரி ஹதீஸில் "ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும்  நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30,எண் 1901).  இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாமிய நோன்பிற்கு, கிறிஸ்தவ உபவாசத்திற்கும் இடையே இருக்கும்வித்தியாசத்தை கண்டாய், ஆனால், இஸ்லாமிய நோன்பிற்கும், சேபியன்கள்என்ற ஜனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை காண்போமானால்,உனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த சேபியன்கள் ரமளான் மாதத்தில் நோன்புஇருப்பார்கள், காபாவை மதிப்போடு தெய்வீகமாக கருதுவார்கள் மற்றும் தாங்கள்தொழுதுக்கொள்ளும் போது காபாவை நோக்கிய தொழுவார்கள். இவர்களைப்பற்றி குர்-ஆனில் குறிப்பு உண்டு, இவர்களை நம்பிக்கையாளர்களின் பட்டியலில்குர்-ஆன் சேர்த்து பேசுகிறது (குர்-ஆன் 2:62, 5:69 & 22:17  பார்க்க answering-islam.org/Silas/pagansources.htm)

தம்பி, இஸ்லாமிய நோன்பும், பைபிளின் நோன்பும் ஒன்றல்ல. சேபியன்கள்பின்பற்றிய பழக்கங்களை, மத சடங்காச்சாரங்களை ஓர் இறைக்கொள்கை என்றுச்சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமில் முஹம்மது புகுத்தியுள்ளார்.  கிறிஸ்தவமற்றும் யூதர்களை குறிப்பிடும் போது குர்-ஆன் மூன்று இடங்களில்சேபியன்களையும் குறிப்பிடுகிறது.  இஸ்லாம் ஓர் இறைக்கொள்கை என்றுசொல்லிக்கொண்டாலும், அதில் அனேக பல தெய்வ வழிபாட்டு மக்களின்பழங்கங்கள் உள்ளன என்பது திண்ணம். இதுமட்டுமல்ல, அஷூரா நாள் நோன்பு கூட யூதர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதால் முஹம்மது  கடைபிடிக்க ஆரம்பித்தார். ரமளான் மாத நோம்பு கடமையாக்கப்பட்டதும் இந்த அஷூரா நோன்பு தளர்த்தப்பட்டது.

தம்பி, நீ எழுதிய விவரங்கள் தவறானதாகும், அதாவது இயேசுவின் நோன்பும்,இஸ்லாமிய நோன்பும் ஒன்றல்ல. பைபிளில் காணப்படும் அனேக விவரங்களை,நிகழ்ச்சிகளை நாம் குர்-ஆனில் காண்பது உண்மை தான், ஆனால் குர்-ஆனில்காணப்படும் தொழுகை, மற்றும் நோன்பு போன்ற விவரங்கள் மட்டும்பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதல்ல, அவைகள் இஸ்லாமுக்கு முன்பு இருந்த பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் பின்பற்றிய பழக்கங்களாகும்.                

உன்னை அடுத்த கடித்ததில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு

தமிழ் கிறிஸ்தவன்.


கேள்வி 3: நீங்கள் ஒரு முன்னாள் முஸ்லிம் என்பதினால், ஒரு தனிப்பட்ட கேள்வி  ஒன்றை கேட்கிறேன். நீங்கள் ரமளான் நோன்பு இருந்ததுண்டா? அப்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? இப்போது எப்படி உணருகின்றீர்கள்? இயேசுவை பின் பற்றிய பிறகு எப்போதாவது, ரமளான் பற்றிய காரியங்களை பார்த்து "நான் முஸ்லிமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்று எண்ணியதுண்டா?

பதில்: ஒரு கேள்வி என்றுச் சொல்லி, பல கேள்விகளை கேட்டுவிட்டீர்கள்.

முதலாவதாக, நான் முஸ்லிமாக இருந்த காலத்தில் நோன்பு இருந்துள்ளேன்.  ஒரு முறையும் 30 நாட்கள் முழுவதுமாக இருந்ததில்லை. ஒற்றைப்படையில் நோன்பு இருந்துள்ளேன், சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் இருந்துள்ளேன். வாலிபனாக வளரும் போது சிறிது சிறிதாக உயர்த்தி, 15 நாட்கள் வரை நோன்பு இருந்த ஞாபகம் எனக்கு உள்ளது. நான் 15 நாட்களுக்கு மேலாக நோன்பு இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதன் பிறகு நான் இயேசுவின் சீடனாக மாறிவிட்ட பிறகு, ரமளானுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.  அன்று எனக்கு ரமளான் பற்றி தெரிந்த விவரங்களை விட இன்று சிறிது அதிகமாக தெரியும்.

இரண்டாவதாக, அப்போது முஸ்லிம் சிறுவனான நான் என் குடும்பத்தோடு ரமளான் கொண்டாடியது, உறவினர்களோடு மகிழ்ந்தது என்னால் மறக்க முடியாது. என் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால், இப்படிப்பட்ட பண்டிகைகளில் உறவினர்களால் குடும்பமே ஒரு கலை கட்டும். பெரியவர்கள் சிறுவர்களுக்கு ஈதி (பரிசு பணம்) கொடுப்பார்கள். ரமளான் முடிந்த பிறகும் உறவினர்கள் சில நாட்கள் எங்களோடு இருப்பார்கள். நான் அதிகமாக அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். நான் நோன்பு வைக்காத நாட்களிலும் அதிகாலை 3:30 மணியளவில் எழுந்திருந்து, என் அம்மா சமைத்து வைக்கும் சூடான உணவுகளை, என் அக்காள், அண்ணனோடு சேர்ந்து நானும் நன்றாக சாப்பிடுவேன்.  இதே போல, மாலையிலும் அவர்கள் நோன்பை திறக்கும் போதும் நானும் சாப்பிடுவேன். விசேஷித்த வகையான உணவுகள், பழங்கள் என்று சாப்பிட அனேக வகையான உணவுகள் கிடைக்கும். ….ம்ம்ம்… அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வருகிறது.

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே….

அதிகாலையில் எழுத்து… சாப்பிட்ட உணவு…

மாலையில் குடித்த ரம்ஜான் கஞ்சி..

கஞ்சியின் நண்பன் புதினா சட்னி…

எல்லாம் எனக்கு ஞாபகம் வருதே. . .

ஹா..ஹா..ஹா.. சும்மா தமாஷ்

கிட்டத்தட்ட 12 மணி நேரம் சாப்பிடாமல், தண்ணிர் பருகாமல் இருந்த பிறகு, மாலையில் சாப்பிடும் கஞ்சியும், புதினா சட்னியும் வாய்க்கும், மனதுக்கும் அமிர்தம் போல இருக்கும், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

மூன்றாவதாக, நான் வாலிபனாகி, கொஞ்சம் அறிவு வந்த போது, ரமளான் பற்றிய எல்லாம் வெளியரங்கமான வெளிவேஷம் போல எனக்கு காணப்பட்டது. மசூதில் நாங்கள் நோன்பை திறந்த பிறகு, தொழுதுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது, சாலையோர கடைகளில் பார்த்தால், ஒரு கையில் டீ கப், இன்னொரு கையில் சிகரெட் அல்லது பீடியை பிடித்துக்கொண்டு, வானத்தில் புகை கொஞ்சமாக இருக்கிறது நாங்கள் உதவி செய்கிறோம் என்றுச் சொல்வது போல, இந்த நோன்பாளிகள் வானத்தைப் பார்த்து பார்த்து புகையை ஊதிக்கொண்டு இருப்பார்கள். நோன்பு திறக்கும் போது காணப்பட்ட மகிழ்ச்சியை விட இந்த புகைமகிழ்ச்சி அவர்களுக்கு அதிகமாக இருந்துள்ளது என்பதை காணமுடியும்.  குர்-ஆனின் ஒரு வசனம் கூட புரியாவிட்டாலும், இந்த ரமளான் மாதத்தில் முழு குர்-ஆனையும் படித்துவிட எங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள்.  இவைகளை பார்த்த போது,  எனக்கு எந்த ஒரு உற்சாகமும் உண்டாவதில்லை. பெரியவர்கள் துக்கப்படுவார்கள் என்பதற்காகவும், அல்லாஹ் தண்டித்துவிடுவான் என்பதற்காகவும், நம்முடைய அக்கவுண்டில் அல்லாஹ்விடம் நன்மைகள் குறைந்துவிடும் என்பதற்காகவும் நான் நோன்பு இருப்பேன்.  நான் மட்டுமல்ல, இன்றும் நோன்பு இருக்கும் பலரின் நிலையும் இது தான்.

நான்காவதாக, நீங்கள் கேட்ட கேள்வி,  "இயேசுவை பின் பற்றிய பிறகு எப்போதாவது, ரமளான் பற்றிய காரியங்களை பார்த்து " நான் முஸ்லிமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்று எண்ணியதுண்டா?" என்பதாகும்.

நான் கிறிஸ்துவை பின்பற்றியதிலிருந்து, நான் உலகை பார்க்கும் பார்வை மாறிவிட்டது. உண்மையுடன் தன் தாய் மொழியில் (புரியும் மொழியில்) பைபிளை படிக்கும் கிறிஸ்தவனுக்கு, தொடர்ந்து சபையின் ஐக்கியத்தில் இருக்கும் கிறிஸ்தவனுக்கு உலக காரியங்கள் அனைத்தையும் சரியாக பகுத்து அறியும் அறிவு கிடைத்துவிடுகின்றது. எது ஆன்மீகம், எது ஆன்மீகமில்லை என்றும், எதற்கு முன்னுரிமைப் தரவேண்டும், எதற்கு தரக்கூடாது என்றும் சரியாக பகுத்துப் பார்க்கத் தெரியும்.  எனவே, நான் பைபிளை அறிய அறிய, புதிய விஷயங்களைக் கண்டு வியப்பதில்லை, பிரமாண்டங்களைக் கண்டு பிரமிப்பதில்லை. பெருங்கூட்டம் ஒரு கோட்பாட்டை பின்பற்றுகிறது என்பதற்காக கண்மூடித்தனமாக நான் அதனை பின் பற்றுவதில்லை. இதனை நான் இஸ்லாமிலே கண்டாலும் சரி, கிறிஸ்தவ மக்களிடையே கண்டாலும் சரி, என்னை அவைகள் பாதிப்பதில்லை. எல்லாவற்றையும் நிதானித்து அறியமுடிகின்றது.

எனவே, என்னுடைய கடந்த கால இஸ்லாமிய அனுபவங்கள், மகிழ்ச்சிகள், பிரமிப்புகள் என் தற்கால கிறிஸ்தவ வாழ்வில் எந்த ஒரு அழுத்தத்தையும் உண்டாக்கமுடிவதில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

ஆகையால், நான் மிகப்பெரிய பிரமாண்டம் என்று கருதுவது, இயேசுவையும், அவர் எனக்காக செய்து முடித்து கொடுத்த இரட்சிப்பையுமே ஆகும். என் மிகப்பெரிய மகிழ்ச்சி இயேசுவில் நான் வாழும் வாழ்க்கையில் சார்ந்துள்ளது.  நான் பெற்ற மிகப்பெரிய மகிழ்ச்சியில் என் குடும்ப நபர்கள் பங்கு பெறவேண்டும் என்ற ஒரு ஆசை என்னை அவ்வப்போது அழுத்துகிறது. கிறிஸ்தவர்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால், "இஸ்லாம் ஒரு உலக பிரகாரமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும், கிறிஸ்தவம் என்பது பரலோகத்திற்கான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும்".  அதாவது வெளிப்புற வாழ்க்கைக்கு முக்கியத்தும் கொடுத்து வாழச்செய்வது இஸ்லாம், உள்ளான வாழ்க்கைக்கு முக்கியத்தும் கொடுத்து வாழச்செய்வது கிறிஸ்தவம். இதனை புரிந்துக் கொண்டபடியினால், நான் விட்டுவந்த மார்க்கத்திற்கே மறுபடியும் செல்லவேண்டும் என்ற ஆசையோ, விசையோ என்னிடம் இல்லை.

பாகம் 1 முற்றுப்பெற்றது.

இந்த கேள்வி பதில்கள் கட்டுரைகள், "கிறிஸ்தவ சபை இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை அடையவேண்டும்" என்ற நோக்கத்திற்காக பதிக்கப்படுகின்றது. எனவே, கிறிஸ்தவ சபைகள் இதனை தங்கள் சபை பக்தி விருத்திக்காக, இஸ்லாமிய விழிப்புணர்வு சபை அடையவேண்டும் என்பதற்காக தாராளமாக பயன்படுத்தலாம்.

இரண்டாம் பாகத்தில், கீழ்கண்ட கேள்விகளையும் அதற்கான பதில்களையும் காண்போம்.

1)      என் இஸ்லாமிய நண்பர், என்னை ரமளான் விருந்திற்கு அழைத்திருக்கிறார், கிறிஸ்தவனாகிய நான் அதில் பங்கு பெறலாமா? அவன் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது பைபிளின் படி சரியானதா?

2)      ரமளான் நோன்பை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் கடைபிடித்து ஆகவேண்டுமா? ஏதாவது விதிவிளக்குகள் உண்டா?

3)      முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு திண்பண்டங்களை, பழ வகைகளை வாங்கித் தரலாமா?

4)      ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்தும், முஸ்லிம்கள் மிகவும் புஷ்டியாக, ஆரோக்கியமாக காணப்படுகிறார்களே! இதன் இரகசியம் என்ன?

5)      ரமளான் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது? சில வசனங்களை மேற்கோள் காட்டமுடியுமா?

6)      இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக எச்சில் துப்பிக்கொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன், ஏன் இப்படி செய்கிறார்கள்?

அடிக்குறிப்புகள்:

[1] www.tamililquran.com/hijri.asp

[2] ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா? - http://isakoran.blogspot.in/2012/07/9.html

மூலம்: http://isakoran.blogspot.in/2014/07/1.html

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் கட்டுரைகள்