இஸ்லாமை சரியான முறையில் யாரிடம் கற்றுக்கொள்வது?
(Subjective Islam – Objective Islam)
ஒரு முஸ்லிமல்லாத நபரின் மூலமாக இஸ்லாமை கற்றுக்கொள்ள சிலர் விரும்புவதில்லை. அந்த நபர் ஒரு பேராசிரியராக இருந்தாலும், அவரிடம் ஆதாரபூர்வமான விவரங்கள் இருந்தாலும், சிலர் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இஸ்லாமிய பட்டப்படிப்பு படிக்காதவன் எப்படி இஸ்லாமில் புலமை பெறமுடியும்?
யார் நமக்கு இஸ்லாம் பற்றிய உண்மையான விவரங்களைச் சொல்வார்கள்? என்பது தான் சரியான கேள்வி. இந்த கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்கள் இவ்விதமாக பதில் சொல்வார்கள், ”உண்மையாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டில் வாழும், ஒரு சரியான முஸ்லிமை சந்தித்து அவரிடம் கற்றுக்கொண்டால், உங்களுக்கு சரியான இஸ்லாம் பற்றிய விவரம் கிடைக்கும். மேலும், நீங்கள் ஒரு தவறான முஸ்லிமிடம் (தீவிரவாதத்தை நம்பும் முஸ்லிமிடம்) கற்றுக்கொள்ள முயன்றால் உங்களுக்கு தவறான விவரங்கள் தான் கிடைக்கும், நீங்கள் அந்த விவரங்களை நிச்சயமாக விரும்பமாட்டீர்கள்”.
இஸ்லாமை கற்றுக்கொள்ள சௌதி அரேபியா அல்லது துருக்கி சரியான நாடுகளாக இருக்குமா? ஒரு வஹாபி இமாமோ அல்லது இதர இஸ்லாமிய அறிஞர்களோ, நாம் இஸ்லாமைக் கற்றுக்கொள்ள சரியான நபர்களாக இருப்பார்களா? நாம் எந்த நபரிடமும் இஸ்லாம் பற்றி கேட்டாலும், அவர் தனக்குத் தெரிந்த, அல்லது தான் நம்புகின்ற விவரங்களை மட்டுமே கற்றுக்கொடுப்பார், மேலும் அது தான் உண்மையான இஸ்லாம் என்றும் சொல்லுவார். இதைத் தான் சப்ஜெக்டிவ் இஸ்லாம் (Subjective Islam) என்றுச் சொல்லுவோம். உனக்கு கற்றுக்கொடுக்கப்படும் விவரம், நீ யாரிடம் கேட்கிறாய் என்பதைச் சார்ந்து இருக்கும். இதோ! இந்த இஸ்லாமிய அறிஞரிடம் இந்த குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டால், நாம் விரும்பும் பதிலைச் சொல்வார், அதோ அந்த இஸ்லாமிய அறிஞரிடம் இதே கேள்வியைக் கேட்டால், பதில் வேறுவிதமாக வரும் என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.
ஆனால், உலகில் ஒரே ஒரு மூலம் உள்ளது, அதன் வாயிலாக நீங்கள் இஸ்லாமை அறிந்தால், அது விருப்பு வெறுப்பு இன்றி எதையும் மறைக்காமல் ‘உண்மையான இஸ்லாமை’ உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடும். நீங்கள் முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள், இந்த ஒரு விஷயத்தைப் பற்றி உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைச் சொல்வார்கள். அது என்னவென்றால், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்’ என்பதாகும். இஸ்லாமை அதன் தூயவடியில் அறியவேண்டுமென்றால், இந்த மேற்கண்ட வாசகம் தான் அதன் தொடக்கமாக இருக்கும், இதனை 100% முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
குர்-ஆனில் அல்லாஹ்வை காணலாம். மேலும், நீங்கள் குர்-ஆனை படிக்கும் போது, முஸ்லிம்கள் தங்கள் நன்னடத்தைக்காக முஹம்மதுவையே நோக்கிப் பார்க்கவேண்டும், அவரை அவர்கள் அணுவணுவாக பின்பற்றவேண்டும் என்று குர்-ஆன் 91 வசனங்களில் கூறுவதை கவனிக்கலாம். முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார், அவர் எவைகளை போதித்தார் என்பதை நாம் அறிந்தால் தானே அவரை பின்பற்ற முடியும்? இவ்விவரங்களை இரண்டு நூல்களில் காணலாம், அவைகள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு (சீரா) மற்றும் ஹதீஸ்களின் தொகுப்புக்கள் ஆகும். இம்மூன்றும் இஸ்லாமை அதன் தூய உண்மையான வடிவில் கற்றுக்கொள்ள பயன்படும் நூல்கள் ஆகும்:
1) குர்-ஆன்
2) சீரா
3) ஹதீஸ்கள்
உண்மையான இஸ்லாம்: ஒரு விவரம் குர்-ஆனில், சீராவில் மற்றும் ஹதீஸ்களில் இருந்தால், அது தான் இஸ்லாம். இஸ்லாம் என்றால் அல்லாஹ்வும் முஹம்மதுவும் தாம், இதற்கு எந்த வித விதிவிலக்கும் இல்லை. எனவே, தூய இஸ்லாமை அறிய, முஸ்லிம்களிடம் கேட்காதீர்கள், முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லாதீர்கள், இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்காதீர்கள், இதற்கு பதிலாக அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் கேளுங்கள். அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் கேட்பது எப்படி என்று சந்தேகிக்கின்றீர்களா? நான் சொல்வது இது தான், குர்-ஆனைப் படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை (சீராவை) படியுங்கள், ஹதீஸ்களைப் படியுங்கள். இவைகளை நீங்கள் படித்தால், அல்லாஹ்விடமிருந்தும், முஹம்மதுவிடமிருந்தும் நீங்கள் இஸ்லாமை கற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
யாரும் குர்-ஆனைப் படித்து இஸ்லாமை அறிந்துக்கொள்ளலாம் என்று விரும்புவதில்லை, காரணம், குர்-ஆன் படிப்பதற்கு கடினம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த தொல்லை தற்காலத்தில் இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. நான் டிரைலாஜி பிராஜக்ட் (Trilogy Project) என்ற வழிமுறையை உருவாக்கியுள்ளேன், இதன் மூலம் இஸ்லாமை இம்மூன்று மூல புத்தகங்களிலிருந்து சுலபமாக அறிந்துக்கொள்ளலாம்.
இந்த ஆய்வு இஸ்லாமை புரிந்துக்கொள்ளுதலை சுலபமாக்கியுள்ளது. அதாவது, குர்-ஆனை நாம் இரண்டு குர்-ஆன்களாக பகுக்கலாம், ஒன்று மக்காவின் குர்-ஆன், அடுத்தது மதினாவின் குர்-ஆன். இதே போல, இரண்டு முஹம்மதுக்களை நாம் கண்டுக்கொள்ளமுடியும். மக்காவில் வாழ்ந்தபோது ஒரு வகையான முஹம்மது, மதினாவிற்கு சென்ற பிறகு இன்னொரு வகையான முஹம்மது. மக்காவில் இருக்கும் போது குர்-ஆன் ஒரு ஆன்மீக புத்தகமாக மட்டுமே இருந்தது, அந்த காலக்கட்டத்தில் அதாவது மக்காவில் இஸ்லாமை ஆரம்பித்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட (வெறும்) 150 முஸ்லிம்களை மட்டுமே இஸ்லாம் சம்பாதித்தது. ஆனால், மதினாவிற்கு வந்த பிறகு முஹம்மது அரசியல் தலைவராகிவிட்டார், ஒரு ஜிஹாதி போராளி ஆகிவிட்டார், இக்காலக்கட்டத்தில் தான் குர்-ஆனில் அரசியலும், ஜிஹாத் பற்றிய போதனைகளும் உட்புகுந்தது.
உண்மையில் இஸ்லாமுக்கு இரண்டு முகங்கள் உள்ளன, இரண்டு வகையான இறையியல்கள் உள்ளன, ஒன்று மக்காவின் இறையியல், அடுத்தது மதினாவின் இறையியல். மக்காவில் நடந்த இஸ்லாமிய போதனைகள் கிட்டத்தட்ட ஒரு தோல்வியையே தழுவியது. ஆனால், மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த பிறகு, முஹம்மது தம்முடைய கடைசி 9 ஆண்டுகளில், ஆறு வாரத்திற்கு ஒரு ஜிஹாத் போர் புரிந்தார். அதாவது முஹம்மது மரிக்கும் போது அரேபியாவில் வாழ்ந்த ஒவ்வொரு அரேபியனும் ‘முஸ்லிமாக’ மாறியிருந்தான்.
எனவே, உங்களுக்கு ஒரு அமைதியான இஸ்லாமை அறியவேண்டுமென்றால் மக்காவிற்குச் செல்லுங்கள், அதாவது மக்காவின் குர்-ஆனை படியுங்கள், மக்காவின் முஹம்மதுவோடு உறவாடுங்கள், அப்போது உங்களுக்கு இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாகத் தெரியும். உங்களுக்கு இஸ்லாமிய அரசியல் பற்றியும், வன்முறைகள் பற்றியும் அறியவேண்டுமென்றால், மதினாவிற்குச் செல்லுங்கள், மதினாவின் குர்-ஆனை படியுங்கள், மதினாவின் முஹம்மதுவோடு பேசிப்பாருங்கள். இஸ்லாம் இரட்டை வேடம் போட்டு இருக்கிறது, ஒரு பக்கம் அமைதியான வேஷம், இன்னொரு பக்கம் ஜிஹாத் வேஷம். இவ்விரண்டு கோட்பாடுகளை வைத்துக்கொண்டு தான், முஸ்லிம் அறிஞர்கள் தாங்கள் எதனை எப்போது சொல்லவேண்டுமோ அதனை எடுத்துச் சொல்கிறார்கள். இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக காட்டவேண்டுமா, இது மிகவும் சுலபம், மக்காவின் குர்-ஆனைலிருந்து வசனங்களை எடுத்துக் காட்டினால் போதும். தனிமையில், உள்வட்ட முஸ்லிம் வாலிபர்களோடு ஜிஹாத் பற்றி பேசவேண்டுமா, முஸ்லிம் அறிஞர்கள் மதினாவின் குர்-ஆனைத் தொட்டு பேசுவார்கள், மதினாவின் முஹம்மதுவை அவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள்.
எனவே, இஸ்லாம் பற்றி அறிய, நாம் நம்புவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர், அவர்கள் அல்லாஹ்வும் முஹம்மதுவும் ஆவார்கள். இவர்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்கள். இவர்கள் இருவரையும் நாம் இஸ்லாமிய நூல்களாகிய குர்-ஆன், சீரா மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால், முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் இமாம்கள் எழுதும் புத்தகங்களில் பெரும்பான்மையாக உண்மை இஸ்லாமை காணமுடியாது. எனவே, எந்த ஒரு முஸ்லிம் அறிஞன் முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் மேற்கோள் காட்டுகின்றானோ அவன் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும். யாராவது உங்களுக்கு இஸ்லாமைப் பற்றிய ஒரு கோட்பாட்டை போதிக்கவந்தால், அந்த குறிப்பிட்ட விஷயம் பற்றி ‘அல்லாஹ் குர்-ஆனில் என்ன சொல்கிறான், சீரா மற்றும் ஹதீஸ்களில் முஹம்மது என்ன சொல்லியுள்ளார்’ என்று மட்டுமே மேற்கோள் காட்டுங்கள், இதர நபர்கள், இமாம்கள், தலைவர்களின் மேற்கோள்கள் நமக்குத் தேவையில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடுங்கள். இஸ்லாமை அல்லாஹ் விளக்கினால் தான், முஹம்மது விளக்கினால் தான் சரியாக இருக்கும்.
நீங்கள் செய்யவேண்டியது இது தான். குர்-ஆனையும், சீராவையும், ஹதீஸ்களையும் பொறுமை ஈழக்காமல் படியுங்கள். நீங்கள் யாரிடமாவது இஸ்லாம் பற்றி பேசினால், குர்-ஆனிலிருந்தும், சீராவிலிருந்தும் மற்றும் ஹதீஸ்களிலிருந்தும் மட்டுமே மேற்கோள் காட்டுங்கள். இப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு இஸ்லாமில் புலமை வந்துவிட்டது என்று அர்த்தம். உலகத்துக்கு இஸ்லாமை அதன் தூய வடிவில் கற்றுக்கொடுக்கும் நபராக நீங்கள் மாற என் வாழ்த்துதல்கள்.
ஆசிரியர்: பில் வார்னர்
ஆங்கில கட்டுரை பதித்த தேதி: Jul 25 2013