நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 3: இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?
உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற முந்தைய உரையாடல்கள்:
1. நச்சென்று நாலு கேள்விகள் – 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?
2. நச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?
மேற்கண்ட உரையாடல்களை படித்து இந்த தற்போதைய உரையாடலை படிக்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
பாகம் 3: இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?
அப்துல்லாஹ்: அண்ணே, நீங்க இன்று மாலை ஃபிரியா இருப்பீங்களா? நாம் பேசலாம்.
உமர்: ஆம், நான் இன்று மாலை ஆறு மணிக்கு பிறகு ஃபிரியா இருப்பேன். நாம் பேசலாம்.
[மாலை ஆறுமணிக்கு உமரும் அவரது தம்பியும் தங்கள் வீட்டில் சந்தித்து பேசுகிறார்கள்]
அப்துல்லாஹ்: என்ன அண்ணே, நான் சொன்னது போல, சிந்தித்து வைத்தீங்களா? உங்களுக்கு ஏதாவது விவரம் கிடைத்ததா?
உமர்: ம்ம்ம்... நான் அதிகமாக அதைப் பற்றி சிந்திக்கவில்லை, இருந்தாலும் நாம் பேசலாம். சரி, ஒரு முறை உன்னுடைய கேள்விகளை சுருக்கமாகச் சொல்?
அப்துல்லாஹ்: இயேசு நாடு பற்றி, அரசு பற்றி என்ன சொல்கிறார். இயேசு சொல்வதைப் போல குற்றவாளிகள் அனைவரையும் மன்னித்துவிட்டு, சிறைச்சாலைகளை காலி செய்துவிட்டால், அந்த குற்றவாளிகள் திருந்துவது எப்போது? சமுதாயம் அவர்களால் படும் அள்ளல்கள் அனேகம். இதற்கு உங்கள் பதில் என்ன?
உமர்: தம்பி, ஒன்றை நான் சொல்லிக்கொள்கிறேன், பொதுவாக முஸ்லிம் அறிஞர்கள் இதர மார்க்க விஷயங்கள் பற்றி அதிகமாக கற்பனை செய்வார்கள். இவர்களாகவே ஒரு கற்பனையை செய்துக்கொண்டு இதர மார்க்க மக்களிடம் பேசிக்கொண்டு விவாதித்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களைப் போலவே நீயும் சொந்தமாக கற்பனைகளை செய்துக்கொண்டு கேள்விகேட்கிறாய், கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
அப்துல்லாஹ்: இதிலென்ன கற்பனை இருக்கிறது? நான் புதிய ஏற்பாட்டை படித்துள்ளேன் என்று உங்களுக்கே தெரியும். அதே போல, நான் இஸ்லாமையும் இப்போது சிறிது சிறிதாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். இந்த இரண்டனையும் ஓரளவிற்குக் படித்ததால், நான் இயேசு (ஸல்) மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்), இருவரின் போதனைகளை ஒப்பிட்டு பார்த்ததில், நாடு பற்றி, அரசு பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது போல, இயேசு (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மன்னிப்பு, அன்பு என்று இயேசு (ஸல்) கூறுவதை நாம் புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களில் காணலாம், ஆகையால், இயேசு தன்னுடைய அரசை நிறுவினால், எப்படி தண்டனை கொடுப்பார்? இது தான் என் கேள்வி.
உமர்: ஒரு அரசாங்கம் எப்படி இருக்கவேண்டும், மக்கள் அரசாங்கத்திடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டுமா? இல்லையா? போன்றவைகள் பற்றி நீ புதிய ஏற்பாட்டில் படித்ததில்லையா? குறைந்தபட்சம் ஒரு சில விவரங்களையாவது நீ புதிய ஏற்பாட்டில் மறைமுகமாக சொல்லப்பட்டு இருப்பதை படித்ததில்லையா?
அப்துல்லாஹ்: இல்லை, இல்லவே இல்லை.
உமர்: ம்ம்ம்... நான் சொன்னது போல, கொஞ்சம் கூர்ந்து நீ படித்திருந்தால், இயேசு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி சொன்னவைகளை நீ கவனித்து இருக்கமுடியும். சரி, உனக்கு இப்போது வசன ஆதாரங்களோடு விளக்குகிறேன்.
இயேசுவின் முதல் வருகை – அரசு அமைக்க அல்ல:
இயேசுவின் முதல் வருகை உலகத்தில் ஒரு அரசை நிறுவி அதன் மூலம் தன் செய்திகளை உலகிற்கு பரப்புவதற்காக அல்ல. அதற்கு பதிலாக, மனிதர்களின் உள்ளங்களில் அரசு அமைப்பதற்காகவும், அவர்களின் குற்றங்களை தன் மீது சுமத்திக்கொண்டு, தான் தண்டனை அனுபவிப்பதற்காக இயேசு வந்தார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அவர் ஒரு பரிசுத்தராக வந்து, நமக்காக குற்றவாளியாக மாறினார். நாம் செய்த குற்றங்களை தன் மீது ஏற்றுக்கொண்டார்.
எனவே, நாடு, அரசு மேலும் தண்டனைகள் பற்றி அவர் அதிகமாக சொல்லவில்லை, அவரது முக்கிய நோக்கம் உலகத்தில் அரசு அமைப்பதல்ல, உள்ளத்தில் அரசு அமைப்பதாகும். இருந்தபோதிலும், அவரது போதனைகள், உவமைகளை நாம் கூர்ந்து கவனித்தால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி அவர் என்ன கருதுகிறார் என்பதை நம்மால் ஓரளவிற்கு கண்டுபிடிக்கமுடியும்.
இப்போது அவைகளைக் காண்போம்.
அப்துல்லாஹ்: ஒரு நிமிஷம் நில்லுங்க.
உமர்: ஏன் என்ன ஆச்சு?
அப்துல்லாஹ்: இப்போ எங்கிட்டே வசமா மாட்டிகிட்டீங்க?
ஆன்மீக தலைவர் VS நாட்டின் அதிபதி (அரசு நடத்தும் தலைவர்)
முஹம்மது (ஸல்) அவர்கள் நாட்டை நடத்தும் ஒரு இறைத்தூதராகவும், அதே நேரத்தில் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்தார் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் சொல்கிறோம். ஒரு நாட்டின் அதிபர் என்ற முறையில் அவர் சில செயல்கள் செய்து இருந்தால், உடனே நீங்கள் அவர் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். ஒரு ஆன்மீக தலைவர் இப்படி தண்டனை கொடுக்கலாமா? இது நியாயமா? என்று கேட்கிறீர்கள். ஆனால், உண்மையில் அவர் ஒரு அரசை நடத்தும் பொறுப்பை ஏற்று இருப்பதினால் தான் தண்டனை கொடுக்கிறார் என்று நாங்கள் விளக்கம் அளித்தால், அதனை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்கள்.
ஆனால், இயேசு அரசு பற்றி என்ன சொல்லியுள்ளார் என்று கேள்வி கேட்கும் போது, அவர் உலக அரசு நடத்த வரவில்லை, உள்ளத்தில் அரசு நடத்த வந்தார் என்றுச் சொல்லி, இயேசுவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, இரண்டு வகையாக அவரது ஊழியத்தை பிரிக்கிறீர்கள், ஒன்று ஆன்மீக தலைவர் (முதல் வருகை), இன்னொன்று அரசு நடத்தும் தலைவர் (இரண்டாம் வருகை).
இதே போல, நாங்களும் எங்கள் இறைத்தூதர், இரண்டு நிலையில் ஊழியம் செய்தார், ஆன்மீக ஊழியம் மற்றும் அரசாங்க ஊழியம் என்றுச் சொல்லும் போது, அவர் அரசாங்க நிலையில் செய்த செயல்களுக்கு ஒரு ஆன்மீக முலாம் பூசி அவரை பழிக்கிறீர்கள்? இது எந்த வகையில் நியாயம்?
எங்கள் இறைத்தூதர் ஆன்மீக கட்டளைகள் கொடுத்தது போல, அரசாங்க கட்டளைகளையும் கொடுத்துள்ளார். ஆனால், நீங்கள் அவர் அரசு நிலையில் சொன்னதை ஆன்மீகத்தோடு சம்மந்தப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள். இது நியாயமா? இது சரியானதா?
உமர்: முதலாவது, இந்த உன் கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டு, அதன் பிறகு இயேசுவும், குற்றவாளிகளுக்கு தண்டனைகளும் என்ற உன் முந்தைய கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
முஹம்மது பற்றி நாங்கள் (கிறிஸ்தவர்கள்) தெளிவாக புரிந்துக்கொண்டு இருக்கிறோம். அவர் முதலாவதாக "ஒரு ஆன்மீக தலைவர்" என்ற முறையிலும், இரண்டாவதாக "ஒரு நாட்டு அதிபர்" என்ற முறையிலும் செயல்பட்டு இருக்கிறார் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.
ஆனால், எங்கள் குற்றச்சாட்டு என்னவென்றால், "அவர் ஒரு நாட்டு அதிபராக இருக்கட்டும், தன்னுடன் இருக்கும் ஒரு கூட்ட மக்களை "இராணுவம்" என்று அழைத்துக் கொள்ளட்டும், எங்களுக்கு பிரச்சனை இல்லை. எங்கள் கேள்வி என்னவென்றால், உங்கள் இறைத்தூதர் நடந்துக்கொண்டது போல தற்காலத்தில் ஒரு நாட்டு அதிபர் நடந்துக்கொண்டால், அவரை நீங்கள் (முஸ்லிம்கள்) ஏற்றுக்கொள்வீர்களா?
முஹம்மது ஒரு அரசு நடத்தும் தலைவராக செயல்பட்ட செயல்களில் சிலவற்றை கூறுகிறேன், அவைகளை தற்காலத்தில் ஒரு நாட்டு அதிபர் செய்தால், அவைகள் நியாயமானவைகளாக நீங்கள் காண்பீர்களா? என்று பாருங்கள்.
1) பணத்திற்காக கொடுமைப்படுத்தினார்
2) வலியச் சென்று போர் புரிந்தார், போரில் பிடிப்பட்ட பெண்களை அடிமைகளாக கொண்டார். மேலும் அப்பெண்களை கற்பழித்தார், தன் சகாக்களும் கற்பழிக்க அனுமதித்தார். அடிமைப் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு கொள்ள அனுமதி அளித்தார்.
3) என்னை நபி என்று ஏற்றுக்கொண்டு, இஸ்லாமை தழுவுங்கள் அல்லது என் வாளுக்கு இறையாகுங்கள் என்று இதர நாட்டு அரசர்களுக்கு கடிதம் எழுதி, பயப்படவைத்தார்.
4) தன்னை விமர்சித்தவர்களை கொன்றார்: அ) வியாபார வழிப் பிரயாணிகள் மீது திடீர் தாக்குதல், ஆ) வயது முதிர்ந்த ஒரு பெரியவரின் கொலை, இ) ஐந்து பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டாள், ஈ) கடைவியாபாரியின் கொலை, உ) கஜானாவை அடையும் படி கொடுமைப்படுத்தி கொலை செய்த முஹம்மது.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவைகள் எல்லாம் இன்று ஒரு அரசாங்கம் செய்ய ஆரம்பித்தால், நீ எப்படி சகித்துக்கொள்வாய்? இந்த குற்றங்களை செய்பவர்கள் அரசு நடத்தும் தலைவர்களாக இருந்தாலும், மக்கள் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் சரித்திரம், தீய சர்வாதிகாரிகள் என்று பட்டம் சூட்டுகிறது.
ஆக, ஒரு சாதாரண சர்வாதிகாரி மேற்கண்ட விவதமாக நடந்துக்கொண்டாலே ஏற்றுக்கொள்ளாத உலகம், ஒரு ஆன்மீக தலைவராக ஒரு வழிகாட்டியாக இருந்துக்கொண்டு, அதே நேரத்தில் ஒரு அரசு நடத்தும் தலைவர் செய்தால், அது நியாயமானதாக காணப்படுமா? சர்வாதிகாரிகளாக இருந்துக்கொண்டு தீய செயல்களில் ஈடுபடும் நபர்களை, சத்தாம் உசேனை தூக்கில் போட்டது போல போடவேண்டாமா? பின்லாடனை சுட்டுக்கொன்றது போல துப்பாக்கியால் துளைக்கவேண்டாமா? சொல் தம்பி சொல்.
ஒரு நல்ல அதிபரை மதிப்பதில் எங்களுக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஒரு அரசாங்கம் தீயவர்களுக்கு தண்டனை நியாயமாக கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால், வன்முறையையே தன் ஆயுதமாக கருதும் ஒரு நபரை எப்படி இறைவனின் அடியார் என்றும், நல்ல வழிகாட்டி என்றும் ஏற்றுக்கொள்ளமுடியும்?
இன்னும் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தீய அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் நாம் அடங்கியே இருக்கவேண்டும் என்று பைபிள் எங்களுக்கு போதிக்கின்றது.
எனவே, ஒரு கட்டளையை முஹம்மது கொடுத்தால், அது ஆன்மீக தலைவர் என்ற முறையில் கொடுத்தாரா? அல்லது அரசு தரப்பிலிருந்து நாட்டு தலைவராக இருந்து கொடுத்தாரா? என்பதை சரியாக பகுத்தறிந்து தான் நாங்கள் பேசுகிறோம் அல்லது கேள்வி கேட்கிறோம்.
அப்துல்லாஹ்: ம்ம்ம்.... இன்று இந்த தலைப்பு பற்றி நாம் அதிகம் பேசவேண்டாம். அடுத்த முறை இதைப் பற்றி பேசுவோம். உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை தெரிந்துக்கொண்டு வந்து பேசுகிறேன்.
இப்போது இயேசு அரசு அமைத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா இல்லையா? என்பதைப் பற்றி புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் விளக்குங்கள், பார்க்கலாம். குறைந்தபட்சம் "தண்டனை" என்ற வார்த்தைக்கு இயேசுவின் விளக்கமென்ன?
உமர்: ம்ம்ம்…கொஞ்சம் முஹம்மதுவின் உண்மை சரித்திரத்தை வெளியே சொன்னால் பொதுமே, நீ நழுவிடுவியே!
சரி, இயேசுவின் போதனைகள், உவமைகளை நாம் கூர்ந்து கவனித்தால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி அவர் என்ன கருதுகிறார் என்பதை நம்மால் ஓரளவிற்கு கண்டுபிடிக்கமுடியும். இப்போது அவைகளைப் பற்றி உனக்கு விவரிக்கிறேன். இவைகளை நீ அறிந்துக்கொண்டால், அடடே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் போதனைகளை இந்த கோணத்திலும் பார்க்கமுடியுமா என்று ஆச்சரியப்படுவாய்!
அ) குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் இயேசுவிற்கு நிகர் இயேசுவே
இந்த தலைப்பை படித்தவுடன் கிறிஸ்தவர்களே என்னை பகைத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதாவது தண்டனை கொடுப்பதில் இயேசுவிற்கு நிகர் இயேசுவேயா? யார் சொன்னது? இயேசுவானவர் மன்னிக்கும் தெய்வம், சமாதான கர்த்தர் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.
உண்மை தான்! இயேசு மன்னிக்கும் தெய்வம் தான், சமாதான கர்த்தர் தான், ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால் – எப்போது இயேசு மன்னிக்கும் தெய்வம்? அவரது முதலாவது வருகையின் போதா? அல்லது இரண்டாவது வருகையில் அவர் நியாயந்தீர்ப்பு தரும்போதா? என்பது தான் முக்கியமான கேள்வி.
ஆம், அவரது முதலாவது வருகையில் அவர் ஒரு ஆட்டுக்குட்டியாக நமக்காக வந்தார், நம் தண்டனைகளை தாம் ஏற்றுக்கொண்டார்? நான் உன்னை மன்னித்தேன், இனி பாவம் செய்யாதே என்று அறிவுரை கூறினார். ஆனால், இரண்டாவது வருகையில் அவர் எப்படி இருப்பார் தெரியுமா? அவர் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பார்? சரி, புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில வசனங்களை மேற்கோள் காட்டுகிறேன்.
ஆ) நரக தண்டனை மற்றும் நித்திய தண்டனை
மத்தேயு 5:29-30 வரையுள்ள வசனங்களில், நரகத்தில் தள்ளப்படுவதைப் பற்றி இயேசு எச்சரிக்கிறார்.
மத்தேயு 25:31-46 வசனங்களில், தாம் நீதிபதியாக உட்காரும் போது என்ன நடக்கும் என்பதை விளக்குகிறார். மக்களை இரண்டு பிரிவாக பிரித்து, ஒரு பிரிவினர் இந்த உலகத்தில் செய்த நன்மைகளுக்கு அவர்களை மெச்சிக்கொள்கிறார், அவர்களை நித்திய மகிழ்ச்சிக்குள்ளாக செல்லும் படி சொல்கிறார். இரண்டாவது மக்களுக்கு நித்திய தண்டனையை தருகிறார்.
ஒரே ஒரு வசனத்தை பார்ப்போம்:
மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
இந்த இடத்தில் தண்டனை என்பது ஒரு சில நாட்கள் இல்லை, இது நித்தியமானது.
ஆகையால் "குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் இயேசுவிற்கு நிகர் இயேசுவே" என்று கூறினேன்.
அப்துல்லாஹ்: கொஞ்சம் நில்லுங்க. இயேசு தம்முடைய இரண்டாம் வருகையில் தண்டனை கொடுப்பார் என்றுச் சொல்கிறீர்கள், அதனை நான் அங்கீகரிக்கிறேன். ஏனென்றால், எல்லா மதங்களிலும், இஸ்லாமிலும், இறைவன் என்பவன் தண்டனைகளை கொடுப்பான். அது ஒரு புறம் இருக்கட்டும்.
என் கேள்வி இது தான்: இந்த உலகத்தில் நடக்கும் அரசாங்கங்கள், எப்படி தண்டனைகளை தரவேண்டும், சட்டம் ஒழுங்கை எப்படி பேணிக்காக்க வேண்டும் என்று இயேசு சொல்லியுள்ளாரா?
நீங்க கழுவுற மீன்களில் நழுவுற மீன் என்று எனக்குத் தெரியும். இரண்டாம் வருகை, கடைசி காலம் பற்றி எனக்கு அக்கரையில்லை, இந்த உலகம் பற்றிய விஷயத்துக்கு வாங்க.
உமர்: அட அவசர புத்திக்காரனே! ஏன் அவசரப்படுகிறாய்! என்னை முதலாவது பேசவிடு?
அப்துல்லாஹ்: பேசுங்க பேசுங்க... எவ்வளவு பேசினாலும் ஒரு நாள் அமைதியாக வேண்டி வரும்.
உமர்: எதைச் சொல்லுகிறாய் நீ! ஒரு நாள் வரும் அன்று நான் இஸ்லாமின் உண்மையை உணர்ந்து இப்படி பேசுவதை நிறுத்துவேன் என்ற வகையில் சொல்கிறாயா? அல்லது ஒரு நாள் நீயே என் வாயை மூடும்படி, ஏதாவது செய்யப் போகிறாயா? (வன்முறையில் ஈடுபடப்போகிறாயா?). முஸ்லிம்கள் ஏதாவது சொன்னால் அதனை செய்துமுடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.
அப்துல்லாஹ்: அடடே! நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன். நீங்க ரொம்பவும் பயந்து இருக்கீங்க போலிருக்கு?
உமர்: பயப்படாமல் என்ன செய்யமுடியும்? பாம்பை என்ன தான் பால் கொடுத்து வளத்தாலும், அன்பு காட்டினாலும், பாம்பு பாம்புதானே! ஜாக்கிரதையா இருக்கவேணுமில்லே, ஹி..ஹி...
அப்துல்லாஹ்: என்ன! நான் விஷப்பாம்பா? ஏன் இப்படி சொல்றீங்க!
உமர்: பாம்பு மீது எந்த குற்றமும் கிடையாது தம்பி, குற்றமெல்லாம், அது விஷமுள்ள பாம்பு இனத்தோடு சேர்ந்தது என்பதால் தான்? உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால், நீ சார்ந்திருக்கின்ற மார்க்கம் மீது தான் எனக்கு சந்தேகம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
இயேசு இவ்வுலக ஆட்சி, அரசு பற்றி, இவ்வுலக தண்டனை பற்றி என்ன கூறியுள்ளார் என்று கேட்டாய். இதோ ஒரு சில விவரங்களைச் சொல்கிறேன், கேள்.
இ) என் அரசு நடக்குமானால், என் சேகவர்கள் வந்து சண்டையிட்டு இருப்பார்கள்:
ஒரு அரசாங்கத்தின் தலைவரை மற்றவர்கள் கைது செய்யும் போது, அந்நாட்டு இராணுவம் சண்டையிட்டு மீட்டுக்கொள்ளும் என்று கூறுகிறார். அதாவது ஒரு இராணுவத்தின் கடமையை இங்கு சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் அவர் ஒரு உலக அரசாங்கத்தை கவனத்தில் கொண்டு பேசுகிறார்.
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோவான் 18:36)
ஈ) கணக்கு போட்டு சண்டைக்குச் செல்லவேண்டிய அரசன்:
ஒரு உலக அரசன் எப்படி கணக்கு போடவேண்டும் என்பதை இயேசு இங்கு குறிப்பிடுகிறார். இங்கு ஒரு அரசங்கம் தன் பெலம் பலவீனம் போன்றவற்றை தெரிந்துக்கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. (லூக்கா 14:31-32)
உ) அநீதியான குத்தகைக்காரருக்கு தண்டனை (மத்தேயு 21:33-41)
இந்த உவமையை நீ ஏற்கனவே அறிந்திருப்பாய், குத்தகைக்காரர்கள் செய்த அநியாயத்திற்கு அவர்களை கொடுமையாக தண்டிக்கவேண்டும் என்று இயேசு ஒப்புக்கொள்கிறார். எனவே தண்டனை என்பது குற்றவாளிகளுக்கு அரசு அல்லது அதிகாரமுடையவர்கள் தரவேண்டும் என்பதில் இயேசுவிற்கு எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை.
அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். (மத்தேயு 21:40-41)
ஊ) நீதிமன்றத்திற்கு வெளியே உன்னால் முடிந்தால், விடுதலையாக முயற்சி எடு, இல்லையானால் தண்டனை நிச்சயம்:
மன்னிப்பு, அன்பு என்று அதிகமாக பேசிய இயேசு, இந்த இடத்தில் எதைச் சொல்கிறார்? ஏழு எழுபதுமுறை மன்னிப்பது பற்றி பேசுகிறாரா? இல்லை. அவர் நாட்டு நடப்பு பற்றி பேசுகிறார். உன்னிடம் தவறு இருந்தால், உன் எதிரியிடம் நீயே சென்று ஒப்புறவாகு, இல்லையானால், தண்டனை நிச்சயம் உனக்கு உண்டு, நீ கடைசி ரூபாயை கொடுக்கும் வரை உன்னை விடுதலை செய்யமாட்டார்கள்.
உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான். நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 12:58,59)
ஆக, நீதி, சட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும் நாட்டில். அதே குடும்பமாக இருந்தால், உன் சகோதரனை நீ மன்னித்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் குடும்பத்துக்கு வெளியே வந்துவிட்டால், நீதியும், நியாயமும் சட்டமும் தான் பேசும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.
எ) பெற்றோரை கனம்பண்ணாதவன் கொல்லப்படவேண்டும்:
இயேசுவின் முதல் வருகை தண்டனை கொடுப்பதற்காக அல்ல என்றாலும், யூத மத தலைவர்களின் மாயமான வாழ்க்கையும், பாரம்பரியங்களும், அவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் மரண தண்டனை பற்றி இயேசு ஞாபகப்படுத்தவேண்டியதாக இருந்தது.
இப்படி இயேசு எங்கேயும் பேசவில்லையே என்று நினைக்கிறாயா தம்பி? மத்தேயு 15:3-4 வசனங்களை படி:
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. (மத்தேயு 15:3,4)
அதாவது, ஒரு மகன் தன் பெற்றோரை கனப்படுத்தவில்லையானால் கொல்லப்படவேண்டும் என்பது பழைய ஏற்பாட்டின் கட்டளை. இதனை இயேசு ஏன் இங்கு சுட்டிக்காட்டுகிறார்? யூத மத தலைவர்களுடைய பாரம்பரியங்கள் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கிறது என்பதைக் கண்டு, அவர்களுக்கு அவர்களின் சட்டத்தை இயேசு ஞாபகப்படுத்துகிறார்.
ஆகவே, இயேசு எப்போது பார்த்தலும் நாடு சட்டம் போன்றவற்றை மறந்துவிட்டு, அன்பு, மன்னிப்பு என்பதை மட்டும் முக்கியப்படுத்தவில்லை. அன்பும் வேண்டும், அதே நேரத்தில் சட்டமும் ஒழுக்கமும் வேண்டும்.
ஏ) நாணயத்தின் இரு பக்கங்கள் – மனிதனின் இரண்டு பக்கங்கள்
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு வகையான சூழ்நிலைகள் இருக்கும்.
முதலாவது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அயலகத்தார்கள், திருச்சபையின் இதர அங்கத்தினர்கள் ஆவார்கள். இவர்கள் மத்தியிலே இயேசு கூறுவதுபோல மிகவும் அன்பாகவும், மன்னிக்கும் மனப்பான்மையுடன், பொறுமையுடன் நடந்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, சமுதாயம், நாடு, சட்டம் போன்றவற்றோடு ஒட்டி வாழுகின்ற வாழ்க்கை. இந்த இடத்தில் அதிகமாக நாம் அன்புடன், மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருக்கமுடியாது. ஒருவன் நம்முடைய வீட்டை அநியாயமாக எடுத்துக்கொண்டால், சட்டத்தின் மூலமாக அதனை நியாயமான முறையில் மீட்கவேண்டும். குற்றம் புரிந்தவனுக்கு சமுதாயத்தில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்றுச் சொன்ன அதே இயேசு,
அவரை வாரினால் அடித்து சித்திரவதை செய்தபோது ஒன்றும் செய்யாமலிருந்த இயேசு,
இவர்களை மன்னியும் என்று தன்னை சித்திரவதை செய்தவர்களுக்காக வேண்டிக்கொண்ட இயேசு,
"பிரதான ஆசாரியரிடத்தில் இப்படியா பேசுகிறது" என்றுச் சொல்லி ஒரு சேவகன் தம்மை ஒரு அறை அறையும் போது, "நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?" என்று கேள்வி எழுப்புகிறார் (யோவான் 18:22,23). இங்கு அவர் சட்டத்தை நியாயமாக கையாளுங்கள் என்று உரிமையோடு கேட்கிறார்.
குடும்பம் வேறு சட்டம் வேறு, குடும்பத்தில் நாம் நடந்துக்கொள்கிறது போல, சட்டத்தில் நடக்கமுடியாது. ஒரு கிறிஸ்தவன் அநியாயத்தை தட்டிக்கேட்கக்கூடாது என்று எங்கும் சொல்லப்படவில்லை, முடிந்த அளவிற்கு எல்லாரோடும் சமாதானமாக இருக்கவே நாம் கட்டளையிடப்பட்டு உள்ளோம். முடியவில்லையானால் என்ன செய்வது? சொந்த அண்ணன், அநியாயமாக நீதிமன்றத்திற்கு அழைக்கிறான், ஒற்றுமையாக போகவேண்டும் என்றுச் சொல்லி நாமும் முடிந்த அளவிற்கு பேசிப்பார்க்கிறோம், விட்டுக்கொடுத்துப் பார்க்கிறோம். ஆனால், அவன் விடமாட்டேன் என்கிறான், இந்த நிலையில் ஒரு நல்ல கிறிஸ்தவன் என்னவேண்டும்? சட்டம் என்ன சொல்கிறதோ அதைத் தான் செய்யவேண்டும்.
எனவே, கிறிஸ்தவர்களுக்கு எது குடும்பம்? எது சட்டம்? எங்கு கன்னத்தை திருப்பி காட்டவேண்டும்? எங்கு மற்றவன் கன்னத்தில் திருப்பி அறையவேண்டும் என்று நன்றாகத் தெரியும்.
ஆக, தம்பி, இயேசு சட்டத்திற்கு விரோதி அல்ல, இயேசு சட்ட ஒழுங்கிற்கு எதிரி அல்ல. அவருடைய பெரும்பான்மையான போதனைகள், குடும்பம், சொந்தம் பந்தம், நட்பு போன்றவற்றைப் பற்றியே அதிகமாக இருந்தது. அதே நேரத்தில், இயேசு குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என்றுச் சொல்லவில்லை. அவரின் முதலாவது வருகையின் நோக்கம் வித்தியாசமானதாக இருந்ததால், அவர் அதிகமாக அன்பு செலுத்தி, மன்னித்தார், பிதாவின் அன்பை வெளிப்படுத்தவே அவர் வந்தார், அந்த செயலை கச்சிதமாக முடித்தார். அடுத்த முறை அவரை நாம் காணும்போது, அவர் இராஜாதி இராஜாவாக, நீதிபதியாக வெளிப்படுவார்.
அப்துல்லாஹ், இது போதுமா? அல்லது இன்னும் வேணுமா?
அப்துல்லாஹ்: நீங்க ஏதோ ஒரு மாயம் செய்யறீங்க. எந்த கேள்வியை கேட்டாலும் எதோ ஒன்றைச் சொல்லி என்னை மயக்கிறீங்க.
உமர்: தம்பி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் வசனங்களைச் சொல்லித் தானே உன்னோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். இயேசுவின் உவமைகள், போதனைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால், அவர் நாட்டையும், சபையையும் (மார்க்கத்தையும்) தனியாக பிரிப்பதை நாம் காணமுடியும். இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன்:
அரசாங்கத்திற்கு வரி செல்லுத்துவது சரியா? என்று கேட்டபோது, அவர் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டியதை அரசாங்கத்துக்கு செலுத்துங்கள், தேவனுக்கு செலுத்தவேண்டியவைகளை தேவனுக்கு செலுத்துங்கள் என்றார். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்வில், தான் வாழும் நாட்டின் அரசாங்கம் ஒரு பக்கமும், தன் குடும்பம், மார்க்கம், திருச்சபை போன்றவை இன்னொரு பக்கமும் இருக்கவேண்டும்.
முடிவாகச் சொல்கிறேன், இயேசு நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிரி அல்ல, அதே நேரத்தில் இயேசு சொன்னது போல ஒவ்வொரு குடிமகனும் வாழ்ந்தால், நாட்டின் ஒழுக்கம், சட்டம் நிச்சயம் சீர் பெறும், நாட்டில் குற்றங்கள் குறையும். ஆக, நாடாளுமன்றம் தன் வேலையை செய்யட்டும், திருச்சபை தன் வேலையைச் செய்யட்டும், இரண்டையும் ஒன்றுபடுத்தி குழப்பிக்கொள்ளவேண்டாம் என்பது இயேசுவின் கருத்து. இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மார்க்க அறிஞர்கள் அரசை நடத்த முயற்சி செய்வது தான். அரசாங்க விஷயங்களில் இஸ்லாமிய அறிஞர்கள் மூக்கை நுழைத்து, செயல்படுவது அனேகருக்கு தொந்தரவாக இருக்கிறது.
அப்துல்லாஹ்: போதும் போதும். நீங்க எங்கள் இறைத்தூதரின் அரசாங்க செயல்கள் பற்றி சொன்ன விவரங்களுக்கு நான் பதிலை தெரிந்துக்கொண்டு வந்து உங்களோடு பேசுகிறேன். எங்கள் இறைத்தூதர் செய்த போர்கள், அவர்கள் கொடுத்த தண்டனைகள் அனைத்தும் நாட்டின் நன்மைக்காகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே செய்தார் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விவரிக்கிறேன்.
உமர்: உனக்கு என் வாழ்த்துக்கள். உனக்கு ஆட்சேபனை இல்லையானால், நம் வீட்டில் இருக்கும் என் சிறிய நூலகத்தை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நூலகத்தில் புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் அனைத்தும் உள்ளது, மேலும் அனேக தமிழ், மற்றும் ஆங்கில குர்-ஆன் மொழியாக்கங்கள் உள்ளன. முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம் கூட உள்ளது, நீ தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நம்முடைய இந்த உரையாடல், கனி தரும் உரையாடலாக மாறட்டும்.