எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?
கேள்வி 517: எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?
பதில் 517:
முஸ்லிம்களின் முதலாவது புனித நகரம் மக்கா ஆகும், இரண்டாவது புனித நகரம் மதினா ஆகும். இந்த நகரங்களிலும் அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்ட மசூதிகள் இருக்கும் இடம் தான் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் மூன்றாவது புனித நகரமாக எருசலேம் உள்ளது, அதிலும் முக்கியமாக மசூதி உள்ள இடம் தான் மூன்றாவது புனித ஸ்தலமாக உள்ளது. முஹம்மது உயிரோடு இருக்கும்போது எருசலேமில் உள்ள மசூதியை (Dome of Rock) அவர் கட்டினாரா? என்று கேட்டால், “இல்லை, முஹம்மது மரித்த பிறகு 60 ஆண்டுகள் கழித்து” தான் மசூதி கட்டப்பட்டது. அப்படியானால், எப்படி எருசலேம் நகரமும் மற்றும் மசூதி இடமும் புனிதமாக மாறியது?
இந்த மசூதி இருந்த இடத்திலிருந்து தான் கடந்த மே மாத சண்டைகள் தொடங்கின.
முஸ்லிம்களின் 3வது புனித ஸ்தலம் பற்றி சில விவரங்களை சுருக்கமாக காண்போம்.
1) முந்தைய நபிகளை சொந்தம் கொண்டாடிய குர்ஆன்:
முந்தைய வேதமான பைபிளின் நபிமார்களை குர்ஆன் எடுத்துக்கொண்டது, அவர்களை குர்ஆனின் இறைவனாகிய அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொந்தம் கொண்டாடியது.
2) முந்தைய வேதங்களை சொந்தம் கொண்டாடிய குர்ஆன்:
முந்தைய நபிமார்களை சொந்தம் கொண்டாடியது போன்று குர்ஆன் முந்தைய வேதங்களையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொல்லி அவைகளையும் சொந்தம் கொண்டாடியது. உதாரணத்திற்கு, பைபிளின் ஐந்து ஆகமங்கள், சங்கீதப் புத்தகம், மற்றும் நற்செய்தி நூல்கள், இவைகள் அனைத்தையும் அல்லா தான் கொடுத்தான் என்று சொந்தம் கொண்டாடியது.
3) முந்தைய வேதகால இடத்தையும் சொந்தம் கொண்டாடிய குர்ஆன்:
முந்தைய நபிமார்களை எடுத்துக்கொண்டது, வேதங்கள் எடுத்துக்கொண்டது, கடைசியாக முந்தைய வேதமாகிய பைபிள் கொடுக்கப்பட்ட இடத்தையும் எடுத்துக்கொள்ள குர்ஆன் முயன்றுள்ளது.
இஸ்லாமின் முதல் புனித ஸ்தலம் (எருசலேம்) எப்படி மூன்றாவது புனித ஸ்தலமானது?
இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான். முஹம்மது முதன்முதலாக அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது, எருசலேமை தொழுகையின் திசையாக (கிப்லாவாக) வைத்துக்கொண்டுதான் தொழுகை நடத்தினார். இதையே முஸ்லிம்களும் பின்பற்றினார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் மக்காவில் முஹம்மது இஸ்லாமை பரப்பும் போது, முஸ்லிம் சமுதாயம் முழுவதும் தினமும் ஐந்து வேளை எருசலேமை நோக்கி தொழுதனர். இது அல்லாஹ்வின் கட்டளையின் படியே நடைபெற்றது. இந்த தொழுகையை மக்காவில் இருந்து கொண்டே, கஅபா என்ற அல்லாவின் முதல் வீடு இருக்கும் ஊரிலிருந்தே, கஅபாவுக்கு புறமுதுகு காட்டி, எருசலேமே கிப்லாவாக மாற்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் எருசலேமை நோக்கி தொழுது கொண்டது.
இது உண்மை என்றால், முஸ்லிம்களின் முதலாவது புனித ஸ்தலம் எருசலேம் என்பது தானே உண்மை? மக்காவில் பன்னிரண்டு ஆண்டுகள் இஸ்லாமிய தாவா பணியை செய்தபிறகு, மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார் முஹம்மது . அங்கு சென்ற பிறகும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை, எருசலேமை நோக்கியே முஸ்லிம்கள் தொழுதார்கள்.
யூதர்கள் தம்மை நபி என்று ஒப்புக்கொள்வார்கள் என்று முஹம்மது கனவு கண்டார், யூதர்கள் தங்கள் பிடியை விட்டுக் கொடுப்பதாக இல்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடித்தனர், கிறிஸ்தவர்களும் இயேசுவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்த முஹம்மது அல்லது அல்லாஹ், மதினாவில் இருக்கும்போது, தொழுகையின் திசையை எருசலேமிலிருந்து, முன்னூறுக்கும் அதிகமான விக்கிரக கற்சிலைகள் கொண்ட காபாவின் பக்கம் திருப்பப்பட்டது.
இதன் பிறகுதான், மக்காவும் அதில் உள்ள காபா ஆலயமும் இஸ்லாமின் முதல் புனித ஸ்தலமாக மாறியது. இப்படி நடந்து பிறகு, அடுத்த ஒன்பது/பத்தாண்டுகள் விக்ரகங்கள் இருக்கின்ற கஅபாவை நோக்கி முஹம்மதுவும் முஸ்லிம்களும் அல்லாவை தொழுதனர். என்னது முஹம்மதுவும் முஸ்லிம்களும் விக்கிர சிலைகள் இருந்த ஆலயத்தை நோக்கியா தொழுதார்கள்? என்ற சந்தேகம் வருகிறதா? உங்கள் இமாம்களை கேட்டுப்பாருங்கள், அல்லது சரித்திர பக்கங்களை சிறிது நேரமெடுத்து புரட்டிப்பாருங்கள்.
ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
இப்பொழுது எருசலேம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம்.
அல் அக்ஸா மசூதி என்பது எருசலேம் ஆலயத்தை குறிக்குமா?
கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில், முஹம்மதுவை அல்லாஹ் மக்காவிலிருந்து அல் அக்ஸா மஸ்ஜித் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த அல் அக்ஸா மஸ்ஜித் எருசலேமை தான் குறிக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனில், எருசலேமில் தான் "அல் அக்ஸா மஸ்ஜித்" உள்ளது என்று சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
குர்ஆன் 17:1 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
மூன்றாவது புனித ஸ்தலமாக எருசலேம் மாறிவிட்டது:
கீழ்கண்ட புகாரி ஹதீஸ்களை கவனியுங்கள்:
1189. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மேலும் பார்க்க புகாரி: 1197 & 1864)
குர்ஆனின் இன்னொரு சரித்திர பிழை என்னவென்றால், 'எருசலேமின் அல் அக்ஸா மஸ்ஜித் அதாவது யூதர்களின் இரண்டாவது ஆலயம், கி.பி 70 ரோமர்களால் அழிக்கப்பட்டது', முஹம்மது வாழ்ந்த காலத்தில் (கிபி 570 - 632), அந்த ஆலயம் அங்கு இல்லை. இருந்த போதிலும், இல்லாத ஆலயத்திற்கு புனித யாத்திரை செல்லலாம் என்று முஹம்மது சொன்னது வேடிக்கையின் உச்சக்கட்டம் என்றுச் சொல்லலாம்.
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-23-html.html