கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் இஸ்லாமிய விமர்சனம்: முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகின்றதா?
முன்னுரை: கேரள உயர்நீதி மன்ற நீதிபதி கமல் பாஷா அவர்கள் கடந்த வாரம், இஸ்லாமிய சட்டம் பற்றி விமர்சித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தின் படி (Muslim Personal Law), முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படும் போது, ஏன் முஸ்லிம் பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது? போன்ற சில கேள்விகளை எழுப்பினார். இக்கருத்துக்கு அனேக இஸ்லாமிய குழுக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவரின் இஸ்லாமிய விமர்சனத்தை இக்கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்யப் போகிறோம்.
1) கேரள உயர்நீதி மன்ற நீதிபதியின் விமர்சனம் என்ன?
2) இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா?
3) முஸ்லிம் பெண்களின் நன்மைக்காக, முஸ்லிம் ஆண்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்யவேண்டியவைகள் யாவை?
4) முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக முஸ்லிமல்லாத சட்ட நிபுனர்கள், வழக்கறிஞர்களின் கடமைகள் என்ன?
5) முஸ்லிம் தனியார் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும்?
6) முடிவுரை:
1) கேரள உயர்நீதி மன்ற நீதிபதியின் விமர்சனம் என்ன?
கேரள உயர்நீதி மன்ற நீதிபதி, இந்தியாவில் தற்போது அமுலில் இருக்கும் “முஸ்லிம் தனியார் சட்டம்” பற்றி தம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது விமர்சனத்தின் சுருக்கத்தை, ”தினமலர்” மற்றும் ”த ஹிந்து” நாளிதழ்களில் வந்த செய்திகளை தமிழில் இங்கு படிக்கவும். ஆங்கில தொடுப்புக்கள் இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது.
தினமலர் செய்தி: முஸ்லிம் ஆண்கள் மட்டும் 4 திருமணம் செய்யலாமா: கேரள ஐகோர்ட் நீதிபதி கேள்வி
திருவனந்தபுரம்;''முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,'' என, கேரள ஐகோர்ட் நீதிபதி கமல் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள மாநிலம், கோழிக்கோட்டில், தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: முஸ்லிம் தனிநபர் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது. இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது. இதுபோன்ற தீவிரமான பிரச்னைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த சட்டப்படி, ஒரு ஆண், நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம். இதுபோல பல திருமணங்கள் செய்து கொள்ள, முஸ்லிம் நாடுகள் கூட தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது.
பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கச் செய்ய முடியும்.இந்த விஷயங்களில் தலையிட, சுப்ரீம் கோர்ட் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது.இவ்வாறு அவர் பேசினார்.
த ஹிந்து நாளிதழ்:
இஸ்லாமிய சட்டம் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிரானது என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கெமால் பாஷா கூறியது முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
கோழிக்கோடில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிராக உள்ளது, இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகள் அதன் ஷரியத் சட்டத்தினால் முடக்கப்படுகின்றன, இது பெண் சமுதாயத்தின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக உள்ளது, இதனால் அனைவருக்குமான பொதுச் சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் நியாயம் இல்லை, உச்ச நீதிமன்றம் கூட இதில் தலையிட மறுத்து வருகிறது என்று பேசியுள்ளார்.
இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ள முஸ்லிம் குழுக்களும் கூட ஒன்று திரண்டு நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளன.
சன்னி முஸ்லிம் பிரிவினர் நடத்தும் சுப்ரபாதம் என்ற மலையாள நாளிதழ் தனது தலையங்கத்தில் நீதிபதியின் இந்தக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதி பாஷாவின் கருத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது என்றும் முஸ்லிம் இருப்பின் மீதே கையை வைக்கிறது என்றும் அந்தத் தலையங்கம் சாடியுள்ளது.
2) இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா?
இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். பல ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்து சட்டவிஷயங்களில் அனுபவம் பெற்றவர்களைத் தான் நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இவர் ஒரு முஸ்லிம் பின்னணியைக் கொண்டவர். இஸ்லாமை விமர்சிப்பவர்கள் மீது முஸ்லிம்கள் பொதுவாக கூறும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், “இவர்கள் அறியாமையினால் இப்படி செய்கிறார்கள், இவர்களுக்கு இஸ்லாம் தெரியாது” என்பதாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தை விமர்சித்த இவர் ஒரு பாமர மனிதனல்ல, இவர் இந்திய சட்டம் தெரிந்தவர், இதுமட்டுமல்ல, அந்த சட்டம் தன் மாநிலத்தில் மீறப்படுகின்றதா என்பதை கவனித்து தண்டனை வழங்கும் நீதிபதி ஆவார். சட்டத்தை நிலை நாட்ட உதவி புரிபவர். மேலும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனியாக இருக்கும் “முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law)” பற்றியும் அறிந்தவர். எனவே, இவரது விமர்சனத்தை நாம் புறக்கணிக்கமுடியாது. எனவே இவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை காண்போம்.
”முஸ்லிம் தனியார் சட்டம்” பற்றி, கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் கருத்துக்கள்/விமர்சனங்கள்:
அ) முஸ்லிம் ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது?
ஆ) முஸ்லிம் தனியார் சட்டம், பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது.
இ) இந்த சட்டம், ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது.
ஈ) பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்லாமல், சொத்து உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
உ) கணவரின் சொத்தில், மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறுத்தால் மட்டுமே, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கச் செய்ய முடியும்.
ஊ) இந்த விஷயங்களில் தலையிட, சுப்ரீம் கோர்ட் கூட தயக்கம் காட்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும்.
எ) இதுபோன்ற தீவிரமான பிரச்சனைகளில், மதத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இவைகள் செய்திகளில் வந்தவைகள் மட்டுமே, இன்னும அவர் எவைகளை பேசினாரோ நமக்குத் தெரியாது.
மனதில் ”சிறிதாவது மனித நேயம்” ஒட்டிக்கொண்டிருக்கும் எந்த மனிதனும் மேற்கண்ட விமர்சனங்களை குற்றப்படுத்த மாட்டான். தன்னைப் பெற்ற தாயையும், தான் பெற்ற மகள்களையும், தன்னோடு பிறந்த சகோதரிகளையும், தன் மனைவியையும் (ஒருமையை கவனிக்கவும்) நேசிக்கும் எந்த ஒரு முஸ்லிமும் மேற்கண்டவைகளில் குறைகள் உள்ளது என்றுச் சொல்லமாட்டான். பெண்களுக்கு நன்மைகள் உண்டாகவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இவரது விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், அனேக இஸ்லாமிய குழுக்கள் இந்த விமர்சனங்களை கண்டித்தார்களாம். இந்த இஸ்லாமிய குழுக்களில் பெண்கள் இருப்பார்களா? நம் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய குழுக்களில், ஆண்களுக்கு சமமாக பெண்கள் கூட அதிகாரிகளாக (Board Members) இருக்கிறார்களா?
நீதிபதி கமல் பாஷா அவர்கள் சொன்னது போல, பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட முன்வரவேண்டும். முக்கியமாக இஸ்லாமிய பெண்கள் முன்வரவேண்டும். ஆனால், இஸ்லாமிய பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதற்கு அனேக தடைகள் உள்ளன.
முதலாவது முஸ்லிம் பெண்களில் படித்தவர்களின் சதவிகிதம் குறைவு.
இரண்டாவது, முஸ்லிம் ஆண்கள் இவர்களின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள ஆண்களுக்கு தெரியாமல், இவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது.
மூன்றாவதாக, முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தில் திரை போட்டுக்கொண்டு இருப்பதினால் இதர பெண்களோடு சேர்ந்து, சில முக்கியமான உரிமை போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற மனதைரியத்தை பெரும்பான்மையாக பெருவதில்லைம்.
நான்காவதாக, இஸ்லாமையும், குர்-ஆனையும் விமர்சிப்பது இஸ்லாமியர்களில் தடை செய்யப்பட்டுள்ளது, இதில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்கு உரியது. எனவே இஸ்லாமிய சட்டம் பற்றி பேச முஸ்லிம் ஆண்களுக்கே தைரியம் இல்லாத போது, முஸ்லிம் பெண்களுக்கு எப்படி தைரியம் வரும்?
ஐந்தாவதாக, திருமணமான முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வது மிகக்குறைவு, மேலும், அவர்களின் எல்லா பொருளாதார தேவைக்காகவும் அவர்கள் ஆண்கள் மீதே சார்ந்து இருப்பதினால், அவர்களால் பெண்களின் பொதுநலத்தை மனதில் வைத்தவர்களாக, தங்கள் குடும்ப ஆண்களுக்கு எதிராக நின்று போராடுவது என்பது கடினமே, ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
இந்திய முஸ்லிம் பெண்கள் இப்படிப்பட்ட பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் போது, அவர்களை தூக்கிவிடுவது யார்? இவர்களுக்கு உதவி செய்ய மாற்று மதத்தவர்கள் முன்வருவது என்பது கடினம், எனவே மனிதாபமுள்ள முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் வழக்கறிஞர்களும் முன்வந்து உதவிகள் செய்தால் முஸ்லிம் பெண்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும்.
3) முஸ்லிம் பெண்களுக்கு நன்மை உண்டாகும் படி, முஸ்லிம் ஆண்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் செய்யவேண்டியவைகள் யாவை?
நீதிபதி கமல் பாஷா அவர்களின் கருத்துப் படி, முஸ்லிம் தனியார் சட்டம் ”முஸ்லிம் பெண்களுக்கு எதிராக கடுமையான சுமையை ஏற்றியுள்ளது மற்றும் ஆண் ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறது”.
இவரது இந்த விமர்சனத்தை குற்றப்படுத்துபவர்கள், முதலாவது “இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில்” இப்படிப்பட்ட நிலை இல்லை என்பதை நிருபிக்கவேண்டும். அதாவது, முஸ்லிம் தனியார் சட்டம் ஆண் ஆதிக்கத்தை ஆதரிப்பதில்லை என்பதையும், முஸ்லிம் பெண்களுக்கு சரிசமமான உரிமைகளை இச்சட்டம் வழங்குகிறது என்பதையும் அவர்கள் நிருபிக்கவேண்டும். இவர்களால் இதனை நிருபிக்க முடியாவிட்டால், இந்த முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி கமல் பாஷா போன்ற இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட நீதிபதிகள் ஒன்று திரண்டு, தங்கள் சமுதாய பெண் இனத்திற்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடி, அவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவி செய்யவேண்டும், இதனை அவர்கள் செய்வார்களா?
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்க முஸ்லிம் ஆண்கள் முன்வரவில்லையென்றால், மற்றவர்கள் எவ்வளவு சத்தமாக குரல் கொடுத்தாலும் அது எடுபடாது. எனவே, தன் சகோதரி, தாய், மனைவி, மகள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், முஸ்லிம் தனியார் சட்டத்தை மறுபரிசோதனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் சில திருத்தங்களை கொண்டுவர போராடவேண்டும்.
கிறிஸ்தவ பெண்களின் உரிமைகளுக்காக, இந்து பெண்களின் உரிமைகளுக்காக போராடுங்கள் என்று நான் இங்கு முஸ்லிம் ஆண்களிடம் வேண்டுகோள் வைக்கவில்லை, அதற்கு பதிலாக, உங்கள் சமுதாய பெண்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்று தான் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
”எங்கள் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தேவை” என்று எங்களுக்குத் தெரியும் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்வார்களானால், பின் ஏன் முஸ்லிம் தனியார் சட்டம் பெண்களை கொடுமைப்படுத்துகிறது என்று நீதிபதி சொல்கிறார்? நாட்டு நடப்புக்களை பார்க்கும் போது, முஸ்லிம் பெண்கள் நீதிமன்றங்களில் போடும் வழக்குகளை ஆய்வு செய்யும் போது, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பரிக்கப்படுவதாக அறிகிறோமே அது ஏன்?
இந்திய முஸ்லிம் வழக்கறிஞர்களே, நீதிபதிகளே! மாற்று மத பெண்களுக்காக நீங்கள் போராடி, நியாயம் பெற்று கொடுத்தது போற்றத்தக்கது. ஆனால், உங்கள் சமுதாய பெண்களின் நிலை என்ன? சம்பளத்திற்காக மாற்று மத பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் படி நீங்கள் உழைக்கிறீர்கள்! ஆனால், சம்பளம் இல்லாமல், உங்கள் முஸ்லிம் பெண்களுக்காக கொஞ்சம் உழைக்கக்கூடாதா? அவர்களுக்கு நியாயம் கிடைக்க சிறிது நேரம் ஒதுக்கக்கூடாதா? முஸ்லிம் பெண்களின் கண்ணீரை துடைக்க ”முஸ்லிம் தனியார் சட்டத்தை சிறிது தூசு தட்டக்கூடாதா?”. பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் சட்டம் படித்தீர்களா? மருத்துவர்கள் ஆசிரியர்கள் சட்டம் படித்தவர்கள், இவர்கள் அனைவரும் சமுதாய மக்களுக்கு முக்கியமானவர்கள். இப்போது நாம் முஸ்லிம் பெண்களுக்காக கையேந்துவது சட்டம் படித்தவர்களிடம் தான். முஸ்லிம் சமுதாயம் என்றால் அது வெறும் முஸ்லிம் ஆண்களை மட்டுமே குறிக்கும் என்று கருதிவிட்டீர்களா? உங்கள் பெண் சமுதாயத்தின் மீது சிறிது இரக்கம் காட்டுங்கள் பிளீஸ்.
4) முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக முஸ்லிமல்லாத சட்ட நிபுனர்கள், வழக்கறிஞர்களின் கடமைகள் என்ன?
• இது முஸ்லிம் பெண்களின் பிரச்சனை இதற்கு நாங்கள் ஏன் உதவவேண்டும்?
• இது முஸ்லிம் சமுதாயப் பிரச்சனை, எங்களுக்கும் இப்பிரச்சனைகளுக்கும் சம்மந்தமில்லை!
• எங்கள் சமுதாய பெண்களுக்கு இந்திய சட்டம் இருக்கிறது, நாங்கள் இருக்கின்றோம், அது போதும் எங்களுக்கு, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன?
நம்மில் (முஸ்லிமல்லாதவர்களில்) சிலர் இப்படி நினைக்கக்கூடும், ஆனால், நம் பக்கத்து வீடு எரிந்துக் கொண்டு இருந்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் அது நல்லதா? கண்ணில்லாத ஒருவன் ஒரு குழியை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை பார்த்த பின்பும் பார்வை இருக்கும் நாம் சும்மா இருக்கலாமா? ஓடிச்சென்று அவனுக்கு உதவ மாட்டோமா?
இந்து, கிறிஸ்தவ மற்றும் நாத்தீக வழக்கறிஞர்களே! முஸ்லிம் தனியார் சட்டத்தை (Muslim Personal Law), ஆய்வு செய்து, இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கு கொடுத்திருக்கின்ற உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் விவரங்கள், முஸ்லிம் தனியார் சட்டத்தில் கண்டுபிடித்தால், அதனை சரிசெய்ய தேவையான உதவிகளைச் செய்வீர்களா? இது முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு மட்டுமல்ல, இதர மத தனியார் சட்டத்துக்கும் பொதுவானதே.
எல்லோரும் சட்டம் படிக்கவில்லை, படித்த உங்களைப்போல உள்ள சிலரிடம் தான் நாங்கள் கையேந்தி நிற்கிறோம். முஸ்லிம் பெண்களின் கண்ணீரை சிறிது எண்ணிப் பாருங்கள்.
நாங்கள் உதவி செய்யச் சென்றாலும், முஸ்லிம் பெண்களிடமிருந்தே எங்களுக்கு எதிர்ப்புக்கள் வருகின்றன, எனவே நாங்கள் எப்படி உதவி செய்வது என்று சிலர் கேட்கலாம். உங்கள் ஆதங்கம் உண்மை தான், ஆனால் எதிர்ப்பு இருக்கின்றதே என்றுச் சொல்லி, நாம் சும்மா உட்கார்ந்தால் எப்படி? குறைந்தபட்சம் முயற்சி எடுக்கலாமே!
5) முஸ்லிம் தனியார் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும்?
முதலாவது நாம், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளவைகளை அறியவேண்டும். அதன் பிறகு, இந்திய சட்டத்தில் எல்லா பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளில் எவைகளை ”முஸ்லிம் பெண்கள் இழக்கிறார்கள்” என்பதை ஆய்வு செய்யவேண்டும். இதனை யார் செய்வது? சட்டம் தெரிந்தவர்கள் தான் செய்யவேண்டும். இதனை ஒரு முஸ்லிம் செய்தால் எப்படி இருக்கும்? மிகவும் அருமையாக இருக்கும்.
இலங்கை முஸ்லிம் சகோதரரின் தைரியமான செயல்:
இலங்கை முஸ்லிம் சகோதரர் ஒருவர் இதனை செய்துள்ளார். அதாவது “இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை” பரிசீலித்து, சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். இவரது இதர கட்டுரைகளை நான் படிக்கவில்லை. இந்த ஒரு கட்டுரையையின் தொடுப்பை இங்கு தருகிறேன்.
முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பும் நீதி அமைச்சரும் –சில கவனயீர்ப்புக் குறிப்புகள்
இஸ்லாம் முஸ்லிம் பெண்ணின் திருமண வயதை வரையறை செய்யவில்லை. பருவமடைந்த பெண்களுக்கு திருமணம் முடிப் பதைத் தாமதிக்க வேண்டாம் என வந்துள்ள ஹதீஸ்களை நாம் தவறாகவே விளங்கி வைத்துள்ளோம். 12 வயதிலுள்ள ஒரு சிறுமி இன்னொரு குழந்தையைச் சுமக்கும் உடற் பக்குவம் பெற்றிருப்பாளா என்பதை நாம் சிந்திக்கத் தவறுகின்றோம்.
தம் தளத்தில் அவர் குறிப்பிட்ட முதலாவது திருத்தம், சிறுமிகளுக்கு திருமணம் செய்வது பற்றியதாகும். “சின்னங்சிறு சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைப்பது, அவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடிகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். இவரின் முழூ கட்டுரையையும் படிக்க, மேலே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கவும்.
இந்த கட்டுரையை படிக்கும் நபர்களில், வழக்கறிஞர்கள் இருந்தால், அவர்கள் இதற்கு உதவலாம்.
முடிவுரை:
கேரள நீதிபதி கமல் பாஷா அவர்களின் ஒரு முக்கியமான விமர்சனம் இதுவாகும்: ''முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது”.
இவர் தன்னை ஒரு முஸ்லிமாக காட்டிக்கொண்டு, மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. “இந்திய முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் இதனை விமர்சிக்கிறாரோ அவர் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் விமர்சிப்பதற்கு சமமாகும். முஸ்லிம் பெண்களின் திருமணம் பற்றி இவர் எழுப்பியுள்ள கேள்வி, குர்-ஆனின் ஆண் ஆதிக்க தன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இதனை நிச்சயமாக முஸ்லிம்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். ஒருவேளை, இவர் இஸ்லாமை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டாரோ? என்ற சந்தேகம் வருகிறது. இஸ்லாமை பின்பற்றிக் கொண்டு யார் இஸ்லாமை விமர்சிக்க முன்வருவார்கள்? இதைப் பற்றி என் விமர்சனத்தை முடிந்தால் அடுத்த கட்டுரையில் எழுதுவேன்.
அடிக்குறிப்புக்கள்: