குர்‍ஆனை யார் எழுதியிருப்பார்கள்? இம்மூவரில் யாராவது ஒருவர் தான் எழுதியிருக்கவேண்டும்!

ஒரு முறை ஒரு ஆங்கில கட்டுரையை படித்தேன், அதில் “குர்‍ஆனை எழுதியர் கீழ்கண்ட மூவரில் ஒருவர் தான் இருந்திருக்கவேண்டும்” என்ற கோணத்தில் அவர் எழுதியிருந்தார்.

 1. அரேபியர்கள்
 2. முஹம்மது
 3. அல்லாஹ்

இந்த மூவரைத் தவிர வேறு யாரும் குர்‍ஆனை எழுதியிருக்கமுடியாது என்பதை முதலாவது கூறி, அதன் பிறகு ஒவ்வொரு தலைப்பை எடுத்து சில காரணங்களை முன்வைத்து, இன்ன இன்ன காரணங்களினால், அரேபியர்கள் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை, முஹம்மது எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. கடைசியாக நமக்கு கிடைப்பது அல்லாஹ் தான். எனவே, அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆசிரியராக இருக்கவேண்டும் என்று முடித்திருந்தார். அது சுவாரசியமான கட்டுரையாக இருந்தது.

அந்த தளம் இப்போது இல்லை, ஆனால் அந்த கட்டுரையை நான் கீழ்கண்ட தளத்தில் கண்டேன், அதன் தொடுப்பை கொடுத்துள்ளேன்: Who Wrote the Holy Qur'an?

1) அரேபியர்(கள்) ஏன் குர்‍ஆனை எழுதியிருக்க முடியாது?

குர்‍ஆன் அரபியில் உள்ளது எனவே அதனை அரபி தெரிந்த ஒருவர் தான் எழுதியிருக்கமுடியும். மேலும் அரபியில்  புல‌மை பெற்றவர் தான் எழுதியிருக்கமுடியும் என்று மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர் கூறுகின்றார்.  ஆனால் குர்‍ஆனை ஒரு அரபியர் அல்லது அரபியர்கள் எழுதியிருக்கமுடியாது காரணமென்னவென்றால், குர்‍ஆனில் அரேபியர்களின் தெய்வங்களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும், மத சடங்குகளுக்கும் எதிராக பல கட்டளைகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் சமுதாயத்தை தாக்கி தானே புத்தகம் எழுதமுடியாது, தன் தெய்வங்களைத் தாக்கி தானே புத்தகம் எழுதமாட்டான். ஆக, குர்‍ஆனை அரேபியர்கள் எழுதியிருக்கமுடியாது. இந்த ஒருதெரிவை ஒதுக்கிவிடலாம் என்று ஆசிரியர் கூறுகின்றார்.

ஒரு மனிதன் தன் சமுதாயத்துக்கு எதிராக எழுதமாட்டான் என்றுச் சொல்வது 100% ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.  இன்றும் பல  எழுத்தாளர்கள் தங்கள் ஊரில், நாட்டில் சமுதாயத்தில் நடக்கும் தீய செயல்களை கண்டித்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், குர்‍ஆனை பொருத்தமட்டில், ஆசிரியர் சொல்வது  போன்று, குர்‍ஆனை “அரேபிய சாதாரண பிரஜை எழுதவில்லை” என்று நாம் முடிவுக்கு வரலாம். நாமும் அக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்தை ஒப்புக்கொள்கிறோம்.

அடுத்தது யார் இருக்கிறார்கள்? - முஹம்மது.

2) முஹம்மது ஏன் குர்‍ஆனை எழுதியிருக்கமுடியாது?

சில காரணங்களை முன்வைத்து, ஏன் அரேபியர்கள் குர்‍ஆனை எழுதியிருக்கமுடியாது என்பதை மேலே பார்த்தோம். இப்போது குர்‍ஆனை முஹம்மது எழுதியிருக்கமுடியாது என்பதற்கு சில காரணங்களை அந்த ஆசிரியர் முன்வைக்கிறார்.

 • முஹம்மது கல்வியறிவு இல்லாதவர்
 • குர்‍ஆனில் பல விஞ்ஞான விஷயங்கள் உள்ளது, அதனை படிப்பறிவில்லாத முஹம்மது எப்படி அறியமுடியும்?
 • குர்‍ஆனின் அரபி மொழி இலக்கணம், இலக்கியம் மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளது, இதனை முஹம்மது அறியமாட்டார்.
 • முஹம்மது எப்படி தான் வாழ்ந்த சமுதாயத்தை எதிர்த்து எழுதமுடியும்? சமுதாய மக்களின் விரோதத்தை ஏன் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்?

எனவே, முஹம்மது குர்‍ஆனை எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்று ஆசிரியர் கூறுகின்றார்.

முஹம்மதுவிற்கு எழுத படிக்கத் தெரியாது என்று முஸ்லிம்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்கமுடியாது. மேலும் குர்‍ஆனில் விஞ்ஞானம் உள்ளது என்றுச் சொல்வதெல்லாம் சுத்தப் பொய்யாகும். 7ம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழும் ஒரு சாதாரண வியாபாரிக்கு  என்ன விஞ்ஞான ஞானம் இருந்திருக்குமோ, அந்த ஞானம் தான் குர்‍ஆனில் காணப்படுகிறது என்பது தான் உண்மை. குர்‍ஆனில் விஞ்ஞானம் இல்லை என்பதை வேறு கட்டுரைகளில் நான் விளக்கியுள்ளேன் (அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்) அதனால், இவர் சொல்வதெல்லாம் ஏற்கமுடியாது. மேலும் குர்‍ஆனில் பல விஞ்ஞான பிழைகள் முதற்கொண்டு, இலக்கண பிழைகள் வரை பிழைகள் உள்ளன, எனவே ஒரு பெரிய இலக்கியமாக குர்‍ஆனை கருதமுடியாது.  குர்‍ஆன் பற்றி ஆய்வு செய்யாதவர்கள் முஸ்லிம்களின் பொய்களை நம்பக்கூடும், மற்றவர்கள் அல்ல.

ஒரு விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன், அதாவது முஹம்மது தாம் கொண்டு வந்த குர்‍ஆனின் மூலமாக தன் நாட்டு மக்களின், சொந்தங்களின் எதிர்ப்புக்களை அவர் சம்பாதித்துக்கொண்டார், என்பது மட்டும் உண்மை. குர்‍ஆனில் முஹம்மதுவின் ஞானம் வெளிப்படுகிறது, அறியாமை வெளிப்படுகிறது என்பது தான் உண்மை. 

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆனின் கருத்துக்கள் முஹம்மதுவின் கருத்துக்கள், ஆனால் வரிகளோ மற்றவர்களுடையது (அந்த மற்றவர் யார் என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்).

பல ஆண்டுகளுக்கு முன்பு, தொலைபேசி, மொபைள் இல்லாத போது  நாம் கடிதங்களை எழுதிக்கொண்டு இருந்தோம். என் அப்பா, அண்ணன், சித்தப்பா என்று அனைவரும் கல்ஃப் நாடுகளில் வேலை செய்துக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவார்கள்.

என் அப்பாவிற்கு என் அம்மா கடிதம் எழுதுவார்கள், அண்ணனுக்கு என் அண்ணி கடிதம் எழுதுவார்கள், உண்மையில் நான் தான் எழுதுவேன். அவர்கள் உருது மொழியில் தங்கள் எண்ணங்களைச் சொல்லச் சொல்ல, நான் தமிழில் கடிதம் எழுதுவேன். கருத்து அவர்களுடையது, ஆனால் வரிகளோ என்னுடையது. இது போல குர்‍ஆனில் காணப்படும் கருத்துக்கள், எண்ணங்கள் முஹம்மதுவினுடையது, ஆனால் குர்‍ஆனின் வரிகளோ, வேறு நபருடையது என்பது தான் என் கருத்து. இதை வெறுமனே நான் சொல்லவில்லை, 20 ஆண்டுகளாக குர்‍ஆனை படித்து, இஸ்லாமை கற்று பல விளக்கவுரைகளையும், விமர்சனங்களையும் படித்து இந்த கருத்தைச் சொல்கிறேன்.

என்னுடைய நிலைப்பாடு மேற்கண்ட ஆசிரியரின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், முழுவதுமாக முஹம்மதுவே குர்‍ஆனை எழுதியிருக்கமுடியும் என்று நான் சொல்வதில்லை, வேறு ஒரு சக்தி அவருக்கு  உதவி செய்துள்ளது. எனவே, மேற்கண்ட ஆசிரியர் சொல்வது போன்று முஹம்மது கூட குர்‍ஆனை 100% எழுதியிருக்கமுடியாது  என்று கருதி, அவரையும் இந்த பட்டியலிலிருந்து  எடுத்துவிடலாம்.

இப்போது மேலேயுள்ள பட்டியலில் மீதமுள்ளது யார்? அல்லாஹ் மட்டும் தான்.

3) ஏன் அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆசிரியராக இருக்கமுடியும்?

குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், குர்‍ஆனை அரேபியர்கள் எழுதியிருக்கமுடியாது, மற்றும் முஹம்மதுவும் எழுதியிருக்கமுடியாது, ஆகையால் மீதமிருப்பது யார்? அல்லாஹ், எனவே அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆசிரியராக இருக்கமுடியும் என்று முடிவு கட்டுகிறார் மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர்.

நானும் இதே கருத்தை உடையவனாக இருக்கிறேன், அதாவது அல்லாஹ் தான் குர்‍ஆனை கொடுத்தவனாக எழுதியவனாக இருக்கவேண்டும்.  ஆனால், என் கருத்துக்கும், அக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்துக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், இது தான். அதாவது “அல்லாஹ் தான் இறைவன்” என்று அவர் கூறுகிறார், அல்லாஹ் இறைவன் இல்லை என்று நான் கூறுகிறேன்.

முஹம்மதுவிற்கு பின்னால், குர்‍ஆனுக்கு பின்னால் ஒரு சக்தி உள்ளது:

முஹம்மது தனி மனிதனாக குர்‍ஆனை முழுவதுமாக எழுதியிருக்கமுடியாது, மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும், குர்‍ஆனையும் படித்து ஆய்வு செய்யும் போது, ஏதோ ஒரு சக்தி முஹம்மதுவுடன் இருந்ததாக எனக்குத் தெரிகிறது.  

அந்த விசேஷித்த சக்தி அல்லாஹ் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அந்த விசேஷித்த சக்தி யெகோவா தேவனை எதிர்க்கும் சக்தி என்றும், பைபிளை எதிர்க்கும் சக்தி என்றும் எனக்குத்  தெரிகின்றது.  

பைபிளின் கோட்பாடுகளை எதிர்க்கும் இப்படிப்பட்ட சக்தியை, பைபிள் "சாத்தான்" என்று அழைக்கிறது.  குர்‍ஆனை எழுதிய சக்தி இதுவாகத் தான் இருக்கமுடியும் என்பது என் கருத்து. இந்த சக்தியை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைத்தால், எனக்கு பிரச்சனை இல்லை. குர்‍ஆனை எழுதியவன் அல்லாஹ் என்று முஸ்லிம்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன்.

முடிவுரை: 

கடைசியாக, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே கருத்தில் தான் உள்ளார்கள்.

 • குர்‍ஆனை அரேபியர்கள் எழுதவில்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் இதையே நம்புகிறார்கள்.
 • குர்‍ஆனை முஹம்மது எழுதியிருக்கமுடியாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் ஏறக்குறைய  இதையே நம்புகிறார்கள்.
 • குர்‍ஆனை அல்லாஹ் தான் எழுதியிருக்கமுடியும் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் இதையே நம்புகிறார்கள்.
 • இவ்விருவரின் நம்பிக்கைக்கும் இடையே இருப்பது ஒரே ஒரு வித்தியாசம் தான். அது என்ன?
 • அல்லாஹ்வை முஸ்லிம்கள் இறைவன் என்று சொல்கிறார்கள்.
 • அல்லாஹ்வை கிறிஸ்தவர்கள் இறைவன்/யெகோவா தேவன் அல்ல, அவன் வேறு ஒரு சக்தி என்றுச் சொல்கிறார்கள். 

இந்த "வேறு ஒரு சக்திக்கு" பைபிளில் பல பெயர்கள்/பட்டப்பெயர்கள் உள்ளன.

பைபிளில் அந்த விசேஷித்த சக்திக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள்: பொய்யன் (யோவான் 8:44), பொய்க்கு பிதா (யோவான் 8:44), கொலை பாதகன் (யோவான் 8:44), பிசாசு (மத்தேயு 4:1), சோதனைக்காரன் (மத்தேயு 4:3), உலகத்தின் அதிபதி (யோவான் 14:30), இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் (II கொரிந்தியர் 4:4), பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் (வெளி 12:9), உலகமனைத்தையும் மோசம்போக்குகிறவன் (வெளி 12:9) &  சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் (வெளி 12:10).

எனவே, குர்‍ஆனை எழுதியது அந்த விசேஷித்த சக்தி என்பதை கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அடிக்குறிப்புக்கள்:

குர்‍ஆனும் விஞ்ஞானமும்

 1. நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? - ‘குர்-ஆனில் விஞ்ஞானம்’ காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு
 2. குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?
 3. குர்-ஆனின் விஞ்ஞானப் பிழை - பீஜே அவர்களுக்கு கேள்வி: விந்தின் பிறப்பிடம் எது?
 4. குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - இயேசு குளோனிங் முறையில் கருத்தரிக்கப்பட்டாரா? இயேசு அல்லாஹ்வின் DNA வாக இருந்தாரா?
 5. பீஜேவும் இஸ்லாமின் விஞ்ஞானமும்: ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிடுவது அநாகரிகம், விரலை சூப்புவது நாகரிகம்
 6. குர்-ஆனும் விஞ்ஞானமும் -சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)

தேதி: 10th July 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்