2016 ரமளான் (5) - நிலமெல்லாம் இரத்தம் – தானியேல் தரிசனமும் பாராவின் தரிசனமும்

(அத்தியாயம் 4: கி.பி.)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

உங்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

இந்த கட்டுரையில் உங்களின் '4)  கி.பி.' என்ற அத்தியாயம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இவ்வத்தியாயத்தில் இயேசுவைப் பற்றிய‌ உங்கள் புரிந்துக்கொள்ளுதலில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1) தானியேல் கண்ட மனுஷகுமாரன் யார்?

பாரா அவர்கள் எழுதியது:

//அவரைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை ‘மனிதகுமாரன்’ (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும். Son of Man) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு. ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு. இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது. 

டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. ‘கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் (Third person) வருகின்றனவே தவிர ஒருபோதும் ‘கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் குறிப்பிட்டதில்லை.

இயேசுவை ஏற்க மனமில்லாத யூதர்கள், இதையெல்லாமும் ஆதாரமாகக் காட்டி, ‘வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதகுமாரன் இவர் அல்லர்’ என்று சொன்னார்கள்.//

இந்த "மனித குமாரன்" என்பவரைத் தான் யூதர்கள் மேசியாவாக அடையாளப்படுத்தி, அவருக்காக காத்திருந்தனர்.  இதைப் பற்றி தானியேல்  7:13-14ல் கூறப்பட்டுள்ளது. "மனித குமாரன்" தான் மேசியா என்று யூதர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? இதனை அறிந்துக்கொள்ள தானியேல் புத்தகத்தில் மட்டுமல்ல, இன்னும் பழைய ஏற்பாட்டின் இதர புத்தகங்களிலும் மேசியாவைப் பற்றிய வர்ணனைகளை படிக்கவேண்டும். இதைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: The Son of Man as the Son of David - Examining the OT Evidence for The Messianic Identity of Daniel’s Heavenly Figure

மேலே  பதித்த   உங்களுடைய மேற்கோளின் இரண்டாவது பத்தியில் நீங்கள்  கொடுத்த விமர்சனத்திற்கு என் பதிலை இங்கு பதிக்க விரும்புகிறேன்.

முதலாவது இந்த வரியை பார்ப்போம்:  

//டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப் பற்றியது தான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை.//

 பாரா அவர்களே, 

இயேசு ”டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப் பற்றியது தான்” என்று சொல்லவில்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

இயேசு மூன்று / மூன்றரை ஆண்டுகள் சீடர்களோடு வாழ்ந்தார், அவர்களோடு பேசினார், உண்டார் மற்றும்  உறங்கினார். நற்செய்தி நூல்களில் அவர் பேசிய மற்றும் செய்த காரியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவில்லை (யோவான் 21:25).  சீடர்களிடம் ”தானியேல் தரிசனத்தில் கண்ட மனுஷகுமாரன் நான் தான்” என்று அவர் சொல்லியும் இருக்கலாம் அல்லது சொல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் சொல்லவில்லை என்று உறுதியாக நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? எனவே, பின்னணியை தெரிந்துக் கொள்ளாமல்  ஒரு எழுத்தாளராக நீங்கள் "இயேசு சொல்லவில்லை" என்று உறுதியாக கூறக்கூடாது , இது உங்களின் முதலாவது பிழை.

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, தம்முடைய இரண்டு சீடர்களுக்கு காணப்பட்டு, தம்மைப் பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட அனைத்தையும் அவர்களுக்கு தெளிவாக விளக்கிக்காண்பித்தார். மோசே முதற்கொண்டு அனைத்து தீர்க்கதரிசிகள் எழுதின வேத வாக்கியங்களை இயேசு விளக்கினார், இந்த நேரத்தில் அவர் தானியேல் கண்ட மனுஷகுமாரன் பற்றியும் சொல்லியிருக்கலாம். எனவே, அவர் அப்படி சொல்லவில்லையென்று நீங்கள் சொல்லக்கூடாது. பார்க்க லூக்கா 24:25-27 வசனங்கள்: 

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:25-27)

சீடர்களிடம் இயேசு அப்படி  சொல்லியிருக்கலாம், ஆனால் யூத மத தலைவர்களிடம் சொல்லவில்லையல்லவா? என்ற கேள்வி எழலாம். இதை மேலோட்டமாகப் பார்த்தால், நியாயமான கேள்வியாகத் தெரியும்.  ஆனால், யூத மதத்தலைவர்களிடம் சென்று "தானியேல் சொன்ன அந்த மனித குமாரன் நான்" என்று  இயேசு சொல்லவேண்டியதில்லை. ஏனென்றால், "மனித குமாரன்" என்ற வார்த்தை முதலாம் நூற்றாண்டு யூதர்களிடம் மிகவும் பிரபல்யமான ஒன்று.  பாரா அவர்கள் எதிர்ப்பார்க்கும் படி, இயேசு சொல்லவேண்டியதில்லை, அதைவிட மிகவும் அழுத்தமான வகையில் இயேசு சொல்லியுள்ளார். "நான் தான் அவர்" என்று சொல்வதை விட, அந்த மனுஷகுமாரனுக்கு இருக்கும் தெய்வீக தன்மைகள் அனைத்தும் என்னிடம் உள்ளது என்றுச் சொல்வது தான் சரியானதாக இருக்கும். இதைத் தான் இயேசு யூதர்களிடம் செய்துக் காட்டினார்.

பாரா அவர்களே உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக, மனுஷ குமாரன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்று இயேசு சொன்ன சில தெய்வீக வெளிப்பாட்டு வசனங்களைத் தருகிறேன்.

இயேசுவை கொலை செய்யும் அளவிற்கு யூதமத தலைவர்களை தூண்டிய வசனங்கள் இவைகளாகும். ஒரே வரியில் ”தானியேல் கண்ட மனுஷகுமாரன்” நான் தான் என்றுச் சொல்வதைக் காட்டிலும், தம்மைப் பற்றி கீழ்கண்ட விதமாக இயேசு விளக்கியது தான் யூதர்களுக்கு நெத்தியடியாக உரைத்தது.

  1. பாவங்களை மன்னிக்க பூமியில் மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு (மத்தேயு 9:6)
  2. மனுஷ குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்: (மத்தேயு 12:8)
  3. மனுஷ குமாரனுக்கு சொந்தமாக தூதர்களும் இருக்கிறார்கள் (மத்தேயு 13:41)
  4. மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11)
  5. சீடர்களுக்கு யூதர்களை நியாயம் தீர்க்கும் அதிகாரம் கொடுக்கும் மனுஷகுமாரன். (மத்தேயு 19:28)
  6. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27).
  7. மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, அவர் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் (மத்தேயு 24:30).
  8. மனுஷ குமாரன் எப்போது நியாயந்தீர்க்க வருவார் என்று மனிதர்கள் அறியாதபடியால், எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும், விழித்திருக்கவேண்டும் (மத்தேயு 24:44, 25:13)
  9. மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார் (மத்தேயு 25:31)
  10. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார் (மத்தேயு 26:24)
  11. மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பார், வானத்தின் மேகங்கள்மேல் வருவார் (மத்தேயு 26:64).

பாரா அவர்களே, மேற்கண்ட வர்ணனைகளை கவனித்த யூதர்களுக்கு ”இவர் தன்னை மேசியாவாக, தானியேல் தன் தரிசனத்தில் கண்ட  மனுஷ குமாரனாக சொல்கிறார்” என்பதை புரிந்துக் கொண்டார்கள். இன்னும் அனேக வசனங்களைக் காட்டலாம். உங்களுக்காக இப்போதைக்கு இது போதும்.

2) யூதர்களின் ஓய்வு நாள் வெள்ளியா? சனியா?

பாரா அவர்கள் எழுதியது:

//யூதர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அவர்களுக்கு ஓய்வுநாள். அன்று எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். முற்றிலும் பிரார்த்தனைக்கான தினம் என்று பொருள். (Sabbath day).//

பாரா அவர்களே, மேற்கண்ட உங்களுடைய வரிகளில் ஒரு சின்ன தவறு இருக்கிறது. இது பெரிய தவறு இல்லை. யுதர்களின் ஓய்வு நாள் சனிக்கிழமையாகும். நீங்கள் வெள்ளிக்கிழமை என்று எழுதியுள்ளீர்கள். அதாவது யூதர்களின் கணக்குப்படி, ஒரு நாளின் ஆரம்பம் முந்தைய நாள் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகி, மறுநாள் மாலை ஆறுமணிக்கு முடிவடையும். 

உங்களுடைய மேற்கண்ட கருத்து ஒருவகையில் சரியானது என்றுச் சொன்னாலும், அதாவது யூதர்களின் ஓய்வு நாள், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது, என்பதால் வெள்ளிக்கிழமை தான் அவர்களின் ஓய்வு நாள் என்றுச் சொல்வது சரியானது இல்லை. ஓய்வு நாளின் முக்கால் பாகம் சனிக்கிழமையாக இருப்பதால், சனிக்கிழமை தான் யூதர்களின் ஓய்வு நாள் என்றுச் சொல்வது தான் சரியானது. வேண்டுமானால், யூதர்களின் ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது என்றுச் சொல்லலாம். கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் உங்களுடைய வரியை சரியாக புரிந்துக்கொள்ளத்தெரியும், ஆனால், உங்கள் தொடர் கட்டுரைகளை, புத்தகத்தை படிக்கும் இதர மார்க்க மக்கள், வெள்ளிக்கிழமைத் தான் யூதர்கள் தேவனை ஆராதிக்கிறார்கள் என்று எண்ணிவிடுவார்கள். இது ஒரு பொது அறிவு கேள்வியாகவும் இருக்கிறது(General Knowledge).

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையும், யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்கிறார்கள் என்பது General Knowledge ஆகும். உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்களில் தவறு செய்யக்கூடாது. 

3) கோயில் இடிக்கப்படும் என்கிற தீர்க்கதரிசனம்:

பாரா அவர்கள் எழுதியது:

//இதன் தொடர்ச்சியாகத்தான் ஜெருசலேம் தேவாலய மதகுருமார்களின் நடத்தை மீதான அவரது விமர்சனங்களும், கோயில் நிச்சயமாக இடிக்கப்படும் என்கிற தீர்க்கதரிசனமும், அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு யூத மதகுருக்களைக் கொண்டுவந்து சேர்த்தன. ஜெருசலேம் நகரின் பெருமைமிக்க கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும், மூன்றே நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று இயேசு சொன்னார். போதாது? மரணதண்டனை விதித்துவிட்டார்கள். ஆனால் ஒரு மரியாதைக்காகவாவது மன்னருக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியாக வேண்டும்.//

மேற்கண்ட வரிகளை படிக்கும்போது நீங்கள் தெளிவாக குழம்பியிருப்பது தெரிகிறது. 

இயேசு தேவாலயம் பற்றி இரண்டு இடங்களில் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டீர்கள்.

1) முதலாவதாக, தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை குறிக்கும் வண்ணமாக, இந்த தேவாலயத்தை இடித்துப்போடுங்கள், அதனை நான் மூன்று நாளைக்குள் திரும்ப எழுப்புவேன் என்று சொன்னார். பார்க்க யோவான் 2:18-20

2) இரண்டாவதாக, எதிர்காலத்தில் ஜெருசலேமுக்கு நடக்கும் தீங்கு பற்றி சீடர்களிடம் பேசும் போது, தீர்க்கதரிசமாக ‘இந்த தேவாலயத்தின் ஒரு கல்லின் மீது இன்னொரு கல் இருக்காது’ என்று சொன்னார். பார்க்க மத்தேயு 24:2

இயேசுவிற்கு எதிராக சாட்சி சொன்ன அன்றைய யூதர்கள், இயேசு சொன்னதை சிறிது மாற்றி சொன்னார்கள், அவர்களைப் போல நீங்கள் மாற்றி சொல்லியுள்ளீர்கள். ”கோவலனை கொண்டு வா” என்ற கட்டளையை ”கோவலனை கொன்று வா!” என்று புரிந்துகொண்டதற்கு சமமாக குழம்பியிருக்கிறீர்கள் நீங்கள்.  

  • இயேசு சொன்னது - இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்.
  • யூதர்கள் சொன்னது - கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்.
  • பாரா அவர்கள் சொன்னது -ஜெருசலேம் நகரின் பெருமைமிக்க கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும், மூன்றே நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று இயேசு சொன்னார்

பாரா அவர்களே, நீங்கள் சொன்னது போல இயேசு சொல்லவில்லை. அவர் சொன்னது “யூதர்களே ஆலயத்தை நீங்கள் இடித்துப்போடுங்கள்(என்னை கொல்லுங்கள்), நான் அதனை எழுப்புவேன் (நான் உயிரோடு எழுந்து காட்டுவேன்)

நீங்களும், யூதர்களும் சொன்னது - “இயேசுவே ஆலயத்தை இடிப்பாராம், அவரே அதனை எழுப்புவாராம்”.

அன்றைய யூதர்கள் இயேசுவிற்கு எதிராக பொய் சாட்சி சொன்னார்கள், இன்றைய பாராவாகிய நீங்கள் குழம்பி இப்படி சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிகின்றது. ஒரு எழுத்தை மாற்றிச் சொன்னாலும் விபரீதம் அதிகமாக இருக்குமென்பதால் இதனை விளக்கினேன்.

4)  எந்த உயிர்த்தெழுதல் இல்லையென்று யூதர்கள் நம்பினார்கள்?

பாரா அவர்கள் எழுதியது:

//சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.//

மதிப்பிற்குரிய பாரா அவர்களே, “யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது” என்பதை எங்கே படித்தீர்கள்? இதற்கு பழைய ஏற்பாட்டிலிருந்து ஏதாவது ஆதாரத்தை காட்டமுடியுமா? ஒரு தீர்க்கதரிசி மரித்த பிறகு உயிர்த்தெழமுடியாது என்று சொல்லப்பட்டுள்ளதா?  யோவான் ஸ்நானகன் மரித்த பிறகு, இயேசுவைக் கண்டவர்கள் ‘இவர் யோவான் ஸ்நானகன் தான், அவர் மரித்து இயேசுவாக வந்துள்ளார்” என்று சொல்லிக்கொண்ட யூதர்களும் உண்டு. 

இயேசு வாழ்ந்த காலத்து யூதர்கள் பல பிரிவுகளாக பிரிந்து இருந்தார்கள். இவர்களில் கீழ்கண்ட இரண்டு வகையினரை பற்றி நாம் அதிகமாக புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.

  1. சதுசேயர்கள் - மரித்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை என்று நம்புபவர்கள் (மத்தேயு 22:23; மாற்கு 12:18-27; அப் 23:8)
  2. பரிசேயர்கள் - மரித்த பிறகு உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்புபவர்கள் (அப் 23:6)

நீங்கள் மேற்கண்ட யூதர்களில் எந்த பிரிவினரைப் பற்றி சொன்னீர்கள்?

உங்கள் இவ்வரியை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு சிறிய தவறுபோலத் தான் தெரியும். ஆனால், கூர்ந்து உங்கள் வரிகளை ஆய்வு செய்பவர்களுக்கு அவைகளுக்கு பின்னால், என்ன நோக்கம் இருந்திருக்கிறது என்பது தெளிவாக புரியும். 

இங்கு உயிர்த்தெழுதல் பற்றிய இன்னொரு விவரத்தைச் சொல்லவேண்டி இருக்கிறது. எல்லா மனிதர்களும் மரித்த பிறகு கடைசி நாளில்  உயிரோடு எழுத்திருப்பார்கள் என்று நம்புவது என்பது வேறு, இயேசு மரித்த பிறகு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்று நம்புவது வேறு. 

உயிர்த்தெழுதல் (மரித்த பிறகு கடைசி நாளில் உயிரோடு எழுப்பப்படுதல்) உண்டு என்று நம்பும் பரிசேயர்களும் கூட, இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருந்தார் என்று நம்பவில்லை. இதைப் பற்றித் தான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே, கொஞ்சம் தெளிவாக நீங்கள் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன். பைபிள் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பும் வேலையை நீங்கள்செய்யவேண்டாம், அதை செம்மையாகச் செய்ய உங்களுக்கு அதிகமாக உதவிய முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

5) ஜெருசலேம் சபையில் தலைமை வகித்தவர்கள் ஜேம்ஸ் மட்டும் தானா?

பாரா அவர்கள் எழுதியது:

//இயேசு உயிர்த்தெழுந்ததாக நம்பியவர்கள், இயல்பாக சனாதன யூதர்களிடமிருந்து கருத்தளவில் விலகிப்போனார்கள். இயேசுவுக்குப்பின் அவர் விட்டுச்சென்றதைத் தொடரும் பொறுப்பின் தலைமை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ், (ஹீப்ரு மொழியில் ஜேக்கப். பைபிளில் யாக்கோபு என்று வரும்.) அவர்களின் வழிகாட்டியாக இருந்தார்.

 கி.பி.62_ல் ஜேம்ஸும் யூதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்தும் தீவிரமாகவும் அவர் இயேசுவை தேவகுமாரனாகவும் கடவுள் அம்சம் பொருந்தியவராகவும் சித்திரித்துச் சொற்பொழிவுகள் ஆற்றியதே இதற்குக் காரணம்.

ஜேம்ஸுக்குப் பிறகு ஜெருசலேம் நகரின் கிறிஸ்தவ தேவாலயத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சைமன்.//

பாரா அவர்களே, இவ்வரிகளில் ஒரு பெரிய  தவறு காணப்படுகின்றது. ஜேம்ஸ் என்பவர் "ஜெருசலேம் சபையின் தலைமை அதிகாரியாக இருந்தார்" என்றுச் சொல்லியிருக்கிறீர்கள். இரண்டாவதாக, "ஜேம்ஸுக்குப் பிறகு ஜெருசலேம் நகரின் கிறிஸ்தவ தேவாலயத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சைமன்" என்று எழுதியுள்ளீர்கள். இதைப் பற்றி சிறிய விளக்கம் உங்களுக்கு கொடுக்கலாம் என்று விரும்புகிறேன். நீங்கள் புதிய ஏற்பாடு பற்றிய விஷயத்தில் தவறு மேல் தவறு செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். 

இயேசுவிற்கு அடுத்தபடியாக, ஜெருசலேம் (தலைமை) சபைக்கு அதிகாரிகளாக இருந்தவர்களை குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், மூன்று சீடர்களை குறிப்பிடலாம். அவர்களின் பெயர்கள்: பேதுரு (சைமன்), யாக்கோபு மற்றும் யோவான் ஆவார்கள். இந்த மூவரில் பிரதானமானவராக சொல்வதென்றால், அவர் பேதுரு (சைமன்) ஆவார்.  பேதுரு தான் பிரதானமானவர் என்பதற்கு அனேக ஆதாரங்களை தரலாம், உதாரணத்திற்கு சிலவற்றை அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து தருகிறேன்.

1. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸின் இடத்தில், இன்னொரு சீடரை தேர்வு செய்யும் பொறுப்பை பேதுரு ஏற்றுக்கொண்டு, முடித்தும் வைத்தார் (அப் 1:15-26).

2. பெந்தகோஸ்தே நாளில் முதலாவது கிறிஸ்தவ பிரசங்கத்தைச் செய்து, 3000 பேர் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட ஒரு கருவியாக இருந்தவர் பேதுரு ஆவார் (அப் 2:14-41).

3. இயேசுவிற்கு பிறகு முதல் அற்புதத்தை இயேசுவின் பெயரில் செய்தவர் இதே பேதுரு ஆவார். மேலும் உடனே, தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு பிரசங்கம் செய்தார், 5000 பேர் சபையில் சேர்க்கப்பட்டார்கள். (அப் 3:1-4)

4. பேதுருவும் யோவானும் கைது செய்யப்பட்டு, யூதமத தலைவர்கள் முன் நிறுத்தப்பட்ட போது, இதே பேதுரு, அவர்களுக்கு விளக்கம் அளித்து பிரசங்கம் செய்தார். யோவானுக்கும் சேர்த்து தான் இவர் பேசினார் (அப் 4:3-12).

5. சபையின் ஊழியத்தேவைக்காக பணத்தை சேகரிப்பதற்கு பொறுப்பாளராக இருந்தவர் பேதுரு தான். மேலும் அனனியா/சப்பீராள் மீது தண்டனையை வருவித்தமும் இவரே. இவரது நிழலாகிலும் பட்டு சுகம் கிடைக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். இவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தபோது, தேவதூதனால் விடுவிக்கப்பட்டார் (அப் 5:1-29).

6. இயேசுவின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல, அந்நிய ஜனங்களுக்கும் சொல்லவேண்டும் என்பதை தெரிவிப்பதற்காக, இயேசு பேதுருவிற்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து புரியவைத்தார், அந்நிய ஜனங்களிடத்தில் அனுப்பினார்.  யூதர்களுக்குத் தான் சுவிசேஷம் சொல்லவேண்டும் என்று நம்பியிருந்த யூத பின்னணி சீடர்கள் அனைவருக்கும், இந்த விவரத்தை பேதுரு சொல்லும் போது, அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர் (பார்க்க அப் 11:18). இதன் மூலமாக, அவருக்கு இருந்த செல்வாக்கு, மதிப்பு என்னவென்பதை நாம் அறியமுடியும் (அப் 10-11:18). அதாவது மத விஷயத்தில் ஒரு முக்கியமான தெரிவு செய்யவேண்டுமென்றால், பேதுரு பிரதானமானவராக இருந்தார். 

7. ஜெருசலேமுக்கு வெளியே ஸ்தாபிக்கப்பட்ட சபைகளில் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதால், ஜெருசலேமில் உள்ள தலைமை சபைக்கு அது கொண்டுவரப்படுகிறது. அதைப் பற்றி தலைமை சபையில் பலவாறு விவாதித்துக்கொண்டு இருக்கும்போது, பேதுரு எழுந்து நின்று அதை தீர்த்துவைக்கிறார். அதன் பிறகு, ஜேம்ஸ் எனப்பட்ட  யாக்கோபு பேசுகிறார்.( அப் 15:1 -16:4)

மேற்கண்ட விவரங்கள், பேதுரு தான் தலைமைச் சபைக்கு பிரதானமான தலைவராக இருந்தார் என்பதை தெரிவிக்கின்றன. இதனை அப்போஸ்தலர் நடபடிகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிடம் சீடர் ஜேம்ஸ் (யாக்கோபு), இயேசுவின் சகோதரர் ஆவார். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தான் இவர் இயேசுவை அங்கீகரிக்கிறார். இவருக்கு இயேசு வெளிப்பட்டார் அதைக் கண்டு தான் இவர் விசுவாசித்தார் (பார்க்க 1 கொரிந்தியர் 15:7).

// ஜேம்ஸுக்குப் பிறகு ஜெருசலேம் நகரின் கிறிஸ்தவ தேவாலயத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சைமன்.//

பாரா அவர்களே, உங்களுடைய மேற்கண்ட வரியில் நடந்த ஒன்றை அப்படியே தலைகீழாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள்.  பேதுருவும், யாக்கோபும் (இயேசுவின் சகோதரர்), யோவானும் ஜெருசலேம் தலைமை சபைக்கு தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பேதுரு பிரதானமானவராவார். மேலும் கடைசியில் ஜெருசலேமை விட்டு வேறு இடத்திற்கு பேதுரு சென்றுவிடுகிறார். கி.பி. 62ல் யாக்கோபு கொல்லப்படுகிறார், பேதுரு கி.பி. 64ல் கொல்லப்படுகிறார்.

நீங்கள் சொன்ன விவரங்களை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் 15 அத்தியாயங்களை நீங்கள் படித்திருந்தாலே, நான் மேலே சொன்ன விவரங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்து இருந்திருக்குமே!

நீங்கள் குறிப்பிட்ட ஜெருசலேம் சபையின் பிஷப் ஜேம்ஸ் (யாக்கோபு) என்பவரின் பெயர் முதலாவது அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் 12:17ம் வசனத்தில் வருகிறது. அதுவரை பேதுரு தான் பிரதானமான தலைவராக வருகிறார்.  அப்போஸ்தலர் நடபடிகளில் முதல் பாதியில் பேதுரு மூலமாக நடந்த நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன, இரண்டாம் பாகத்தில் பவுலின் மூலமாக நடந்த நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. 

மேற்கண்ட உங்களுடைய வரியை படிக்கும்போது, நீங்கள் புதிய ஏற்பாட்டிலுள்ள அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை படிக்கவில்லை என்று நமக்கு தெரிகிறது. இயேசுவின் சீடர்களை பற்றி எழுதும் போது குறைந்தபட்சம் நற்செய்தி நூல்களையும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையும் படிக்காமல் எப்படி நீங்கள் அவர்கள் பற்றிய கருத்தை எழுதுகிறீர்கள்? 

முடிவுரை:

அருமை பாரா அவர்களே! கோர்வையாக, ஒழுங்காக எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு விவரங்களை புரிந்துக்கொள்வதில் நீங்கள் இப்படி குழப்பமடைவீர்களென்றால், குர்-ஆனை படித்தால் உங்கள் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. பகலிலேயே உங்களுக்கு பசுமாடு தெரியவில்லையே, இரவிலே உங்களுக்கு எருமை எப்படி தெரியும்?  தெளிவாக விளக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாட்டு விவரங்களை மாற்றி எழுதும் உங்களுக்கு, இங்கொன்று அங்கொன்றுமாக விவரங்களைக் கொண்ட குர்-ஆனை எப்படி படித்து, இம்மாம்பெரிய புத்தகத்தை எழுதிவிட்டீர்கள்?

அடுத்த கட்டுரையில் இன்னும் இரத்தம் கசியும். . . 


2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்