இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 – பைபிள் பாகம் 3
(2020 ரமளான் தொடர் கட்டுரைகள்)
"இஸ்லாம் கிறிஸ்தவம் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்" என்ற பெயரில் இரண்டு பாகங்களை இதுவரை பதித்திருக்கிறோம். அதில் குர்ஆன் பற்றிய கேள்விகள் 60க்கு பதில் கொடுத்துள்ளோம். இந்த பாகத்தில் பைபிள் பற்றிய கேள்விகள் 30க்கு பதில்களைக் காண்போம். இத்தொடர் கட்டுரைகளின் நோக்கம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதாகும். இவைகள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பயன்படும்.
பாகம் 3 - பைபிள் கேள்விகள் பதில்கள் 61 - 90 வரை
கேள்வி 61: பைபிளுக்கு முன்பிலிருந்து குர்ஆன் இருக்கிறது என்று என் நண்பன் சொல்கிறான், இது உண்மையா?
பதில் 61: உங்கள் நண்பருக்கு இவ்விரு புத்தகங்களின் காலக்கட்டம் தெரியவில்லை, அதனால் தான் அவர் அப்படிச் சொல்கிறார்.
கீழ்கண்ட விவரங்களை அவருக்கு விளக்குங்கள்.
- பைபிளில் உள்ள பழைய ஏற்பாட்டை மோசே (மூஸா) எழுதினார். மூஸாவின் காலக்கட்டம் கி.மு. 1500 (தோராயமாக) ஆகும்.
- புதிய ஏற்பாடு கி.பி. 100 க்குள் எழுதப்பட்டுவிட்டது.
- முஹம்மது கி.பி. 570ல் பிறக்கிறார்.
- முஹம்மது கி.பி. 610ல் (தம்முடைய 40வது வயதில்) தம்மை நபி என்று பிரகடனப்படுத்தினார்.
- கி.பி. 610 முதல், 632 வரை, முஹம்மதுவிற்கு குர்ஆன் வசனங்கள் இறங்குகின்றன.
- கி.பி. 632 முஹம்மது மரிக்கிறார்.
- முஹம்மது மரித்து 14 ஆண்டுகளுக்கு பிறகு, உஸ்மான் மூன்றாம் கலிஃபாவாகிறார். இவரது காலகட்டத்தில் குர்ஆன் ஒரு புத்தகமாக முழுவடிவம் பெறுகிறது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பைபிள் முடிவடைந்த காலக்கட்டத்தையும், குர்ஆன் முதலாவது எழுதப்பட்ட காலக்கட்டத்தையும் கணக்கிட்டால் 500 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.
கேள்வி 62: பைபிளின் நபர்களின் பெயர்கள் குர்ஆனில் அத்தியாயங்களாக உள்ளனவா? அவை யாவை?
பதில் 62: கீழ்கண்ட ஆறு குர்ஆன் அத்தியாயங்களுக்கு பைபிளில் வரும் நபர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஸூரா 10 - யூனுஸ் (யோனா)
- ஸூரா 12 - யூஸுஃப் (யோசேப்பு)
- ஸூரா 14 - இப்ராஹீம் (ஆபிரகாம்)
- ஸூரா 17 - பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
- ஸூரா 19 - மர்யம் (இயேசுவின் தாய் மரியாள்)
- ஸூரா 71 - நூஹ் (நோவா)
கேள்வி 63: முஹம்மதுவின் காலத்தில் பைபிள் அரபி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருந்ததா?
பதில் 63: இல்லை, முஹம்மது வாழ்ந்த காலத்தில் பைபிள் அரபியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. மேலும், நமக்கு கிடைத்துள்ள பழைய அரபி பைபிள் கையெழுத்துப் பிரதிகள் 9/10வது நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.
கேள்வி 64: பைபிள் என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டுவது சரியா?
பதில் 64: பைபிள் என்ற வார்த்தை பைபிளில் உள்ளது. பைபிள் என்ற வார்த்தை “பிப்லோஸ்(βίβλος)” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். பிப்லோஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் "புத்தகம்/சுருள்" என்பதாகும்.
புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம், முதல் வசனம், முதல் வார்த்தை கீழ்கண்டவாறு ஆரம்பிக்கிறது. மூல கிரேக்க மொழியில் மத்தேயு 1:1
- கிரேக்க மொழி: Βίβλος Γενέσεως Ἰησοῦ Χριστοῦ υἱοῦ Δαυὶδ υἱοῦ Ἀβραάμ
- ஆங்கிலம்: [The] book of [the] genealogy of Jesus Christ son of David, son of Abraham:
- தமிழ்: ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு
இன்னும் கீழ்கண்ட வசனங்களிலும், பிப்லோஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது (Source: biblehub.com/greek/976.htm):
மாற்கு 12:26, லூக்கா 3:4;20:42, அப்போஸ்தலர் 1:20;7:42;19:19;பிலிப்பியர் 4:3, வெளி 3:5;20:15
கேள்வி 65: குர்ஆனில் பைபிளில் காணப்படும் அனேக நிகழ்ச்சிகள் காணப்படுவது ஏன்?
பதில் 65: பைபிளின் பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குர்ஆன் மறுபதிவு செய்திருக்கிறது. குர்ஆன் கி.பி. 610 லிருந்து 632வரை எழுதப்பட்டது. பைபிள் கி.மு. 1500 லிருந்து கி.பி 100 வரைக்குள் எழுதப்பட்டது. பிந்தையது (குர்ஆன்) முந்தையதிலிருந்து (பைபிளிலிருந்து) நிகழ்ச்சிகளை எடுத்து தன்னிடம் மறுபதிவு செய்திருப்பதினால் தான், பைபிளின் நிகழ்ச்சிகள், நபர்களின் பெயர்கள் குர்ஆனில் வருகின்றது.
குர்ஆன் இப்படி பைபிளின் நிகழ்ச்சிகளை மறுபதிவு செய்யும் போது, சில நிகழ்ச்சிகளை அப்படியே மாற்றாமல் பதிவு செய்துள்ளது, சில விவரங்களை குர்ஆன் மாற்றி எழுதியிருக்கிறது.
கேள்வி 66: முஹம்மதுவிடம் அரபி பைபிள் அல்லது பைபிளின் ஒரு புத்தகம் இருந்ததா?
பதில் 66: முஹம்மது வாழ்ந்த காலக்கட்டத்தில் (கிபி 570 - 632) அரபி மொழியில் பைபிள் மொழியாக்கம் செய்யப்படாமல் இருந்தது, மேலும், முஹம்மது வாழ்ந்த சமுதாயம் ஒரு படித்த சமுதாயமல்ல. முஹம்மதுவிற்கு எபிரெயம் மற்றும் கிரேக்க மொழி தெரியும் என்றும் சொல்லமுடியாது.
கேள்வி 67: இயேசுவைப் பற்றி பைபிள் சொல்வதை நம்பவேண்டுமா? குர்ஆன் சொல்வதை நம்பவேண்டுமா?
பதில் 67: முஹம்மதுவைப் பற்றி, இஸ்லாமைப் பற்றி குர்ஆனில் உண்மை விவரம் கிடைக்குமா? அல்லது அதன் பிறகு எழுதப்பட்ட புத்தகத்தில் கிடைக்குமா? புதிய ஏற்பாடு எழுதப்பட்டு 500 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்ஆனில் எப்படி இயேசுவின் உண்மை விவரங்கள் காணப்படும்?
இதுமட்டுமல்ல, இயேசுவைப் பற்றி எதிராக கருத்துக்கள் சொல்லவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட புத்தகத்தில் எப்படி இயேசுவைப் பற்றிய உண்மைகளை பார்க்கமுடியும்? உண்மையான இயேசு பற்றிய விவரங்கள் புதிய ஏற்பாட்டில் மட்டுமே கிடைக்கும், குர்ஆனில் கிடைக்காது.
கேள்வி 68: குர்ஆனில் வரும் "இயேசு செய்த பறவைக்கு உயிர் கொடுக்கும் அற்புதம்" பைபிளில் இல்லையே! ஏன்?
பதில் 68: இயேசு குழந்தையாக இருந்த போது, கலிமண்ணினால் ஒரு பறவை செய்து, அதற்கு உயிர்கொடுத்தார் என்று ஒரு அற்புதத்தை குர்ஆன் பதிவு செய்துள்ளது. இது பைபிளில் இல்லை, காரணம் என்னவென்றால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பல தள்ளுபடி ஆகமங்கள் பலரால் எழுதப்பட்டன.
அப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் ' "Infancy Gospel of Thomas(இன்பான்சி காஸ்பல் ஆஃப் தாமஸ்)', இதில் தான் அந்த அற்புதம் உள்ளது. இது ஒரு பொய்யான புத்தகம், இயேசுவின் சீடர்களால், எழுதப்பட்டதல்ல. புதிய ஏற்பாடு முழுவதும், கடைசி அப்போஸ்தலர் உயிரோடு இருக்கும்போதே எழுதப்பட்டாகிவிட்டது. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் பல கட்டுக்கதைகள் புனைந்து பல புத்தங்கள் எழுதப்பட்டன. அப்படிப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்ட கற்பனைக் கதையையும் குர்ஆன் உண்மை என்று எண்ணி பதிவு செய்துவிட்டது.
குர்ஆனில் பல கட்டுக்கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் தான் கிறிஸ்தவ அறிஞர்கள் குர்ஆனை புறக்கணிக்கிறார்கள்.
அந்த தள்ளுபடி புத்தகத்தை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கலாம்:
இந்த புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்:
2. This child Jesus, when five years old, was playing in the ford of a mountain stream; and He collected the flowing waters into pools, and made them clear immediately, and by a word alone He made them obey Him. And having made some soft clay, He fashioned out of it twelve sparrows. And it was the Sabbath when He did these things. And there were also many other children playing with Him. And a certain Jew, seeing what Jesus was doing, playing on the Sabbath, went off immediately, and said to his father Joseph: Behold, thy son is at the stream, and has taken clay, and made of it twelve birds, and has profaned the Sabbath. And Joseph, coming to the place and seeing, cried out to Him, saying: Wherefore doest thou on the Sabbath what it is not lawful to do? And Jesus clapped His hands, and cried out to the sparrows, and said to them: Off you go! And the sparrows flew, and went off crying. And the Jews seeing this were amazed, and went away and reported to their chief men what they had seen Jesus doing.
குர்ஆன் 3:49: குர்ஆன் சொல்வதை படியுங்கள்:
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். . . .” (என்று கூறினார்).
பைபிளின் படி இயேசு செய்த முதல் அற்புதம் கானா ஊர் திருமணத்தில் அவர் செய்த அற்புதம் தான் (யோவான் 2:1-11). குர்ஆன் கட்டுக்கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
கேள்வி 69: பைபிளின் அரபி மொழியாக்கங்களில் யெகோவா தேவனுக்கு ஏன் அல்லாஹ் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்?
பதில் 69: அரபி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிளில், யெகோவா என்ற பெயர் வரும் இடங்களில் 'ரப்' என்றும், 'அல்லாஹ்' என்றும் இரண்டு வகைகளில் 9ம் நூற்றாண்டிலிருந்து மொழியாக்கம் செய்துள்ளார்கள். அல்லாஹ் என்பது குர்ஆனை கொடுத்தவனின் தனிப்பெயர் என்று முஸ்லிம்கள் சொல்வதால், 'ரப்' என்றோ, 'யெகோவா'என்றொ மொழியாக்கம் செய்வது தான் சரியானது.
பைபிளின் யெகோவா தேவன், குர்ஆனின் அல்லாஹ் அல்ல. இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள். இவ்விருவரும் ஒருவர் என்று முஸ்லிம்கள் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அது தவறு. இந்த குழப்பம் தீர, அரபி பைபிள்களில் அல்லாஹ் என்ற பெயருக்கு பதில் 'ரப்' என்றோ, 'யெகோவா' என்றோ மொழியாக்கம் செய்வதே சரியானது.
கேள்வி 70: முஸ்லிம்கள் குர்ஆனை அதன் மூல மொழியில் படிப்பது போன்று, ஏன் கிறிஸ்தவர்கள் பைபிளை அதன் மூல மொழிகளாகிய எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் படிப்பதில்லை?
பதில் 70: தெரியாத மொழியில் புரியாமல் படிப்பதினால் என்ன நன்மை சொல்லுங்கள்?
சில நேரங்களில் நாம் பேருந்து அல்லது இரயிலில் பயணம் செய்யும் போது, நம் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு, நமக்கு தெரியாத மொழியில் சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். நமக்கு ஒன்றுமே புரியாது, தலைவலியாக இருக்கும். ஏன் தெரியுமா? நமக்கு புரியவில்லை என்பதும் ஒரு காரணம் தான். அதுவே, நமக்கு புரியும் தமிழில் யாராவது தொன தொனவென்று பேசினால், தலைவலியாக இருந்தாலும், கொஞ்சமாவது தாக்குபிடிக்கலாம், புரியும் என்பதால்.
மேலும், குர்ஆனை அரபி மொழியில் படிப்பது படிப்பவரை முட்டாள்களாகவே வைத்திருக்கும் யுக்தி தான் அது. இமாம்கள், மார்க்க தலைவர்கள் மக்களை அறியாமையில் வைத்திருக்கவேண்டுமென்றால், புரியாத மொழியில் வேதங்களை படிக்க வைக்கவேண்டும், அப்போது தான் 'இந்த அரபியில் ஏதோ சக்தி இருக்கிறது, இதை நாம் கேள்வி கேட்கக்கூடாது, புரியும் மொழியில் படித்தால் நன்மை கிடைக்காது' என்று மக்கள் எண்ணி அறியாமையில் இருப்பார்கள்.
கிறிஸ்தவர்களோ, போதகர்களோ இப்படியெல்லாம் மக்களை அறியாமையில் வைத்திருக்க விரும்புவதில்லை, எனவே, நாங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிளை படிக்காமல், எங்களுக்கு தெரிந்த மொழியில் அல்லது தாய் மொழியில் படிக்கிறோம். பைபிள் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிப்பவர்கள், ஆய்வு செய்ய விரும்புகிறவர்கள், இம்மொழிகளை படித்து ஆய்வு செய்கிறார்கள், ஆனால் தங்கள் அனுதின ஆன்மீக வளர்ச்சிக்கு புரியும் மொழியிலேயே படிக்கிறார்கள்.
கேள்வி 71: குர்ஆனை அரபியில் படித்தால் அதிக நன்மையை அல்லாஹ் தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இதுபோலவே பைபிளை எபிரேய கிரேக்க மொழிகளில் படித்தால், தேவன் நமக்கு அதிக நன்மைகளைத் தருவாரா?
பதில் 71: அல்லாஹ் ஒரு பொய்யான இறைவன் எனவே மக்கள் அறியாமையிலேயே இருக்கவேண்டுமென்று விரும்பி, புரியவில்லையென்றாலும் நீங்கள் குர்ஆனை அரபியில் படியுங்கள் என்று முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டான்.
பைபிளின் தேவன் மக்களை ஞானத்திற்கு நேராக அழைத்துச் செல்கிறார். நீதிமொழிகள் புத்தகத்தை படித்தால், ஞானத்திற்கு (உலக ஞானம், ஆன்மீக ஞானம்) எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
இறைவனுடைய வேதத்தை வாசிக்கவேண்டும், கேட்கவேண்டும் மற்றும் கீழ்படியவேண்டும், அரபியிலோ, எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியிலோ படித்தால் எப்படி புரியும்? புரியவில்லையென்றால் எப்படி கீழ்படியமுடியும்?
இதனை பைபிள் எப்படி அழகாகச் சொல்கிறது என்பதை கவனிக்கவும்:
வெளி 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகத் தான் இயேசுவும் "காது உள்ளவன் கேட்கக்கடவன்" என்றார். நமக்கு புரியும் மொழியில் கேட்கும் போது தான் அதனை நாம் உணர்ந்துக்கொள்ளமுடியும், அதன் பிறகு அக்கட்டளைகளை பின்பற்றுவதா அல்லது புறக்கணிப்பதா என்ற முடிவு எடுக்கலாம்.
ஞானம் மற்றும் அறிவு பற்றி இரண்டு வசனங்களை பாருங்கள். நமக்குள் இருக்கும் ஆவியானவர் ஞானத்தின் ஆவியானவர், நமக்கு புரியவைத்து, நாம் அதற்கு மனப்பூர்வமாக கீழ்படிய உதவி செய்கிறார்.
நீதிமொழிகள் 15:14
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்
ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
எனவே, நமக்கு புரியாத மொழியில் அதாவது அரபி, எபிரேயம், மற்றும் கிரேக்க மொழியில் படித்தால் நான் நன்மை செய்வேன் என்று பைபிளின் தேவன் சொல்லவில்லை, அவர் சொல்லவும் மாட்டார். முஸ்லிம்களே! குர்ஆனை அரபியில் படித்து வஞ்சிக்கப்படாதிருங்கள்.
கேள்வி 72: பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாடு இரத்துசெய்கிறது, அதுபோல புதிய ஏற்பாட்டை குர்ஆன் இரத்து செய்கிறது. எனவே, குர்ஆனைத் தான் கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டும் என்று என் நண்பர் சொல்கிறார். இதற்கு பதில் என்ன?
பதில் 72: உங்கள் நண்பருக்கு வேதங்கள் பற்றிய ஞானமில்லை அல்லது அவர் பொய் சொல்கிறார்.
பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாடு இரத்து செய்தது என்று யார் சொன்னார்கள்? புதிய ஏற்பாட்டில் அப்படி ஒன்றும் சொல்லப்படவில்லையே!
இயேசு நியாயப்பிரமாணங்களை, தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்தார் என்று கூறியுள்ளார், பார்க்க மத்தேயு 5:17:
5:17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதல் ஆகும். புதிய ஏற்பாட்டில் அனேக இடங்களில் பழைய ஏற்பாட்டின் “தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் படி இப்படி நடந்தது” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் நண்பர் சொல்வது தவறு. மேலும், குர்ஆன் ஒரு இறைவேதமில்லை என்று இருக்கும் போது, அது எப்படி புதிய ஏற்பாட்டை இரத்து செய்யும். பைபிளின் படி, அல்லாஹ் ஒரு பொய் இறைவன், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார், இப்படி இருக்கும் போது, குர்ஆன் எப்படி இறைவேதமாகும்.
கேள்வி 73: இயேசுவிற்கும் தனக்கும் (முஹம்மதுவிற்கும்) இடையே எந்த ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை என்று முஹம்மது கூறியுள்ளாரே! இது உண்மையா?
பதில் 73: பைபிளின் படி, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல. இப்படி இருக்கும் போது முஹம்மது எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
இதுமட்டுமல்ல, இயேசுவிற்கும் முஹம்மதுவிற்கும் இடையே (600 ஆண்டுகள்) ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை என்று முஹம்மது கூறுவது, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான கூற்றாகும். அதாவது இஸ்லாமின் படி, ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு இனத்திற்கும் அல்லாஹ் நபிகளை அனுப்பி வழிநடத்துகின்றான். ஆனால், 600 ஆண்டுகள் ஒரு நபியும் எழும்பவில்லை என்று முஹம்மது கூறும் போது, இஸ்லாமுக்கு எதிரான கூற்றாக உள்ளது. எனவே முஹம்மதுவின் கூற்று அல்லாஹ்விற்கும் இஸ்லாமுக்கும் எதிரான கூற்றாகும்.
இன்னொரு வேடிக்கையைப் பாருங்கள், இயேசுவிற்கும் முஹம்மதுவிற்கும் 600 ஆண்டுகள் இடைவெளி உள்ளது, ஆனால், முஹம்மதுவிற்கும் இஸ்மாயீலுக்கும் (இப்றாஹீமின் மகன்) இடையே கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் உள்ளது.
ஆக, அல்லாஹ் தன் மக்கா மக்களை வழி நடத்த 2500 ஆண்டுகளாக ஒரு நபியையும் அங்கு அனுப்பவில்லை என்று அறியும் போது, அல்லாஹ் மீது சிறிது சந்தேகம் வரத்தான் செய்கிறது.
கேள்வி 74: முஸ்லிம்கள் பைபிளை படித்தால் அல்லாஹ் கோபம் கொள்வானா?
பதில் 74: பைபிளில் நேர் வழி உள்ளது என்று குர்ஆன் சொல்கிறது, பைபிளின் நபிமார்கள் பற்றி பல நிகழ்ச்சிகளை குர்ஆன் மறுபதிவு செய்கிறது. இப்படி இருக்கும் போது, முஸ்லிம்கள் பைபிளை படிப்பதுதானே நியாயமான செயலாக இருக்கும்!
முந்தைய வேதங்களை கொடுத்தவனும் தானே என்று அல்லாஹ் சொல்கின்றான், தன் வேதங்களை யாராளும் மாற்றமுடியாது என்றும் அல்லாஹ் சொல்கின்றான். விஷயம் இப்படி இருக்கும் போது, ஏன் அல்லாஹ் கோபம் கொள்வான், சொல்லுங்கள்?
தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் பற்றி குர்ஆன் சொல்பவற்றை படியுங்கள், இதன் பிறகுமா நீங்கள் இவைகளை படிக்க தயங்குவீர்கள்?
குர்ஆன் 2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
குர்ஆன் 3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
குர்ஆன் 5:44. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; . . .
குர்ஆன் 5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
குர்ஆன் 17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
கேள்வி 75: முஸ்லிம்கள் குர்ஆனின் வசனங்களில் அடிக்கோடு இடுவது, பக்கங்களில் குறிப்பு எழுதுவது போன்று எதையும் செய்வதில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் இதனைச் செய்கிறார்கள். இது தவறு தானே!
பதில் 75: இது தவறு இல்லை, இதனால் அனேக நன்மைகள் உள்ளன. முஸ்லிம்கள் அரபியில் குர்ஆனை படிக்கிறார்கள், அவர்கள் படிப்பது என்னவென்றே அவர்களுக்கு தெரிவதில்லை, எனவே எந்த வசனத்தை அவர்கள் அடிக்கோடு இடுவார்கள்?
ஆனால், கிறிஸ்தவர்கள் பைபிளை தாய் மொழியில் படிக்கிறார்கள். மேலும் பைபிளின் வசனங்களுக்கு உயிர் இருக்கிறது, அவைகளை படிக்கும்போது, நம்மோடு அவைகள் பேசும், அப்போது நாங்கள் உடனே அவ்வசனங்களை அடிக்கோடு இடுவோம். சில மாதங்கள் கழித்து மறுபடியும் அதே வசனங்களை படிக்கும்போது, அடிக்கோடுகளை கண்டு கர்த்தருக்கு நாங்கள் நன்றிகளைச் சொல்லுவோம்.
பைபிளில் எச்சரிக்கைத் தரும் கட்டளைகள் இருக்கும், ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்கள் இருக்கும், அடிக்கோடு இட்ட இந்த வசனங்கள் பார்க்கும் போது, சில எச்சரிக்கைகள் ஞாபகத்திற்கு வந்து, நாங்கள் தொடர்ந்து மனந்திரும்பவோ, மற்றவர்களுடன் ஒற்றுமையடையவோ அவைகள் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, அடிக்கோடு இடுவது, பைபிளின் பக்கங்களில் குறிப்புகளை எழுதுவது கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமான செயலாகும்.
கேள்வி 76: முஸ்லிம்கள் குர்ஆனை குளித்துவிட்டு, உளு செய்துவிட்டு தொடுகிறார்கள், படிக்கிறார்கள். இதே போல கிறிஸ்தவர்கள் குளித்துவிட்டு பைபிளை படிப்பதில்லை ஏன்? சுத்தமாக இருப்பதில் தவறேதுமில்லையே!
பதில் 76: உடல் சுத்தமாக வைத்துக்கொண்டு வேதத்தை படிப்பது தவறில்லை, ஆனால், உடல் சுத்தம் தான் முக்கியம் என்று எண்ணுவது தான் தவறு. இயேசு போதிக்கும் போது, உடல் சுத்தத்தைவிட உள்ளம் சுத்தம் முக்கியம் என்று கூறினார்.
உடலை மட்டும் சுத்தம் செய்துக்கொண்டு, புரியாமல் குர்ஆனை படிப்பதினால் என்ன பயன்? உடலை சுத்தம் செய்துக்கொண்டு, இறை கட்டளைகளுக்கு கீழ்படிய விருப்பமில்லாமல் குர்ஆனை படிப்பதினால் என்ன பயன்?
கிறிஸ்தவம் மிகவும் தெளிவாக உள்ளது, கிறிஸ்தவர்களும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பைபிளை எப்போது வேண்டுமானாலும் படிப்பார்கள், மாலைவரை வியர்வை சிந்தி வேலை செய்துவிட்டு, வீடு திரும்பும் போது வியர்வை நாற்றம் உடலுக்குள் அடித்தாலும், பஸ்ஸில் அல்லது ரயிலில் உட்கார்ந்துக்கொண்டு, பைபிளை நாங்கள் படிப்போம். இயேசு அந்த நேரத்தில் எங்கள் வியர்வை நாற்றத்தை பார்ப்பதில்லை, மனதின் நற்கந்தத்தை பார்க்கிறார்.
இப்படி நான் எழுதுகின்றேன் என்பதற்காக, கிறிஸ்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள் என்று நான் சொல்லவரவில்லை. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும் என்று சொல்லவருகிறேன்.
முஸ்லிம்களில் அனேகர் ஏன் குர்ஆன் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை தெரியுமா? இதற்கு முதல் காரணம், குர்ஆனை அரபியில் படிக்கச் சொல்வதினால், இரண்டாவது காரணம், குளித்துவிட்டு, உளு செய்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்துக்கொண்டு, பயபக்தியால் நிரம்பி, குர்ஆனை படிக்கச்சொல்வதினால் தான்.
கேள்வி 77: குர்ஆனை மூல மொழியாகிய அரபி மொழியில் மனப்பாடம் செய்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது, இது போல ஏன் கிறிஸ்தவம் ஊக்குவிப்பதில்லை?
பதில் 77: கிறிஸ்தவம் பொருள் புரியாமல் எதையும் செய்ய ஊக்குவிப்பதில்லை. உண்மையில் இதனால் நன்மை ஒன்றுமில்லை. கிறிஸ்தவர்கள் படித்தவர்கள் அவர்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்வதினால் என்ன நன்மையென்று கேட்கத்தெரிந்தவர்கள்.
அர்த்தம் தெரியாமல் குர்ஆனை மனப்பாடம் செய்வது என்பது ஒரு அறியாமையாகும். முஸ்லிம்களுக்கு இதனால் ஒரு பொய்யான திருப்தி உண்டாகுமே தவிர, வேறு ஒரு நன்மையும் இல்லை.
மெய்யான ஜீவனுள்ள பைபிள் வசனங்களை எங்களுக்கு புரியும் மொழியில் மனப்பாடம் செய்வதில் தான் உண்மையான ஆன்மீகம் என்று நாங்கள் அறிவோம்.
கேள்வி 78: இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன்பு என்ன செய்தார்?
பதில் 78: இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால், "தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்". இயேசு இப்படி மன்னித்ததினால் தான், எந்நிலையிலும் எதிரிகளை மன்னிக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் கற்றுக்கொண்டார்கள்.
இதே போல மரண படுக்கையில் முஹம்மது யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபித்தார், அதனால் தான் அவரை பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் மிகவும் கோபத்தோடும், எரிச்சலோடும் யூதர்களையும்,கிறிஸ்தவர்களையும் இன்று வெறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மரம் எப்படியோ கனிகள் அப்படி.
கேள்வி 79: இயேசு அடிமைகளை வைத்திருந்தாரா?
பதில் 79: இல்லை, இயேசு அடிமைகளை வைத்திருந்ததில்லை.
கேள்வி 80: ஆபிரகாம் மக்காவிற்குச் சென்று அங்கு காபாவை கட்டியதாக ஏதாவது குறிப்பு பைபிளில் உள்ளதா?
பதில் 80: கி.மு. 2000/1900 காலக்கட்டத்தில் ஆபிரகாம் மக்காவிற்குச் சென்று அங்கு காபாவை கட்டியதாக இஸ்லாம் சொல்லும் விவரம் சரித்திர சான்று அற்றது. இப்படிப்பட்ட விஷயத்தை பைபிளில் காணமுடியாது. ஆபிரகாம் தனக்கு தேவன் சொன்ன பகுதியிலே கடைசி வரை வாழ்ந்து மரித்ததாக பைபிள் சொல்கிறது. அப்பொழுது ஈசாக்கும், இஸ்மவேலும் அவரை அடக்கம் செய்த விவரத்தை பைபிளில் காணலாம்:
ஆதியாகமம் 25:7-9
7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
இஸ்லாமில் அனேக சரித்திர பிழைகள் உள்ளது, அவைகளில் இதுவும் ஒன்று.
கேள்வி 81: இஸ்மவேல் மக்காவில் சென்று வாழ்ந்தார் என்று இஸ்லாம் சொல்கிறது, பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
பதில் 81: இஸ்மவேலும் ஈசாக்கும் அடுத்தடுத்த பகுதிகளில் வாழ்ந்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்மவேலுக்கு 12 பிள்ளைகள் பிறந்து அவர்களும், குழுத்தலைவர்களாக (பிரபுக்கள்) இருந்தார்கள். இஸ்மவேல் மக்காவிற்குச் செல்லவில்லை, காபாவை கட்டவில்லை என்பது தான் உண்மை.
ஆதியாகமம் 25:12-17
12. சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு: 13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,14. மிஷ்மா, தூமா, மாசா, 15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. 16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே. 17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
கேள்வி 82: பைபிளின் அனேக நிகழ்ச்சிகள் குர்ஆனில் வருவதினால், ஏன் நீங்கள் குர்ஆனை ஏற்பதில்லை?
பதில் 82: இது அருமையான கேள்வி தான். இன்று ஒரு நபர் ஒரு புத்தகத்தை எழுதி, அதில் குர்ஆனில் உள்ள 90% சதவிகித விவரங்களை சேர்த்துவிட்டு, ஒரே ஒரு விவரத்தை மட்டும் மாற்றிச் சொல்வாரானால், அதனை முஸ்லிம்கள் ஏற்பார்களா? அதுவும், அந்த புத்தகத்தில் "முஹம்மது ஒரு நபி இல்லை" என்று எழுதியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.
குர்ஆனில் உள்ள 90% விவரங்கள் இந்த புதிய புத்தகத்தில் இருந்தாலும், இஸ்லாமின் அடிப்படை கோட்பாடு, முஹம்மது அல்லாஹ்வின் நபி என்பதாகும். இதனை இந்த புதிய புத்தகம் மறுத்தால் இது ஏற்றுக்கொள்ளப்படுமா?
இதே போன்று தான் பைபிளில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளையும், நபிமார்கள் பற்றியும் குர்ஆனில் சேர்த்தாலும், அதனை "மாற்றாமல் சேர்த்து இருந்தால்" அதனை ஏற்கமுடியும், ஆனால் குர்ஆன் பைபிளின் பல அடிப்படை கோட்பாடுகளை புறக்கணிப்பதால், அதனை ஏற்கமுடியாது.
கள்ள ரூபாய் நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் 9 ஒற்றுமைகள் இருந்தாலும், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரே ஒரு வித்தியாசம் இருந்தால் அது கள்ள நோட்டு என்று கருதப்படுமே ஒழிய நல்ல ரூபாய் நோட்டு என்று கருதப்படாது.
கேள்வி 83: பைபிள் மூல மொழிகளிலிருந்து வேறு மொழிகளுக்கு மொழியாக்கம் செய்தால், அது தன் தெய்வத்தன்மையை இழந்துவிடுகின்றதல்லவா?
பதில் 83: இல்லை, மொழியாக்கம் செய்யும் போது, பைபிள் தன் தெய்வத்தன்மையை ஒரு போதும் இழந்துவிடாது. ஆனால், முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்கள் அதாவது, குர்ஆனை மொழியாக்கம் செய்தால், அது தான் தெய்வத்தன்மையை இழந்துவிடுகிறது, அதனால் தான் அரபியிலேயே குர்ஆனை படிக்க முஸ்லிம்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
பைபிளின் படி, பைபிளில் சொல்லப்பட்ட செய்தியை மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும் போது, அந்த செய்தியை சொன்னால் போதும், இந்த புதிய மொழியிலும் அதே மூல வார்த்தைகளைக் கொண்டுச் சொல்லவேண்டும் என்பதல்ல.
உதாரணத்திற்கு, கீழ்கண்ட வசனத்தின்(மத்தேயு 11:28) 'முதல் வார்த்தையை கவனிக்கவும்'. தமிழ் மொழி தான் மூல மொழி என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த வசனத்தை தமிழிலிருந்து, வேறு ஒரு மொழிக்கு மொழியாக்கம் செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த புதிய மொழியில் 'வருத்தப்பட்டு' என்ற வார்த்தைக்கு 100% இணையான வார்த்தை இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த புதிய மொழியில் 'துக்கப்பட்டு' என்ற வார்த்தை தான் உள்ளது, இது தமிழின் மூல வார்த்தைக்கு 90% மட்டுமே பொருந்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
வேறு வார்த்தை இல்லை என்பதால், "துக்கப்பட்டு..." என்று அந்த புதிய மொழியில் மொழியாக்கம் செய்தாலும், அந்த புதிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிள் தன் தெய்வத்தன்மையை இழக்காது. ஏனென்றால், அந்த வசனத்தின் சுருக்கம் என்ன? வருத்தப்பட்டோ, துக்கப்பட்டோ, இயேசுவிடம் வந்தால், அவர் அவர்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார் என்பதாகும்.
மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
எனவே, மொழியாக்கம் செய்யும் போது சில வார்த்தைகள் மூல மொழிக்கு சமமாக கிடைப்பதில்லை, இருந்த போதிலும் செய்தி சரியாகச் சொன்னால் போதும். வார்த்தைக்கு வார்த்தை 100% சமமான வார்த்தைகளையே பயன்படுத்தவேண்டும் என்ற கோட்பாட்டை பைபிள் நிர்ணயிக்கவில்லை. வானத்திலிருந்து குதித்த எழுத்துக்களையே இயந்திரங்களைப் போன்று மக்கள் பொருள் தெரியாமல் படிக்கவேண்டும் என்று பைபிளின் தேவன் எதிர்ப்பார்க்கவில்லை, அர்த்தம் தெரிந்து செய்தியை புரிந்து படித்து அதற்கு கீழ்படிந்தால் போதும்.
ஒரு மனிதனுக்கு எதை கீழ்படியவேண்டும், எப்படி கீழ்படியவேண்டும் என்ற செய்தி தெளிவாக தெரிந்தால் போதும், அவன் இறைவனுக்கு அருகில் வந்துவிடுவான், இது இல்லாத பட்சத்தில் பல இடைத்தரகர்கள் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் வந்து உட்கார்ந்துக்கொள்வார்கள்.
கேள்வி 84: "பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்கள் கூறுகிறார்களே! இது உண்மையா?
பதில் 84: பைபிளில் முஹம்மதுவின் பெயர் வரவேண்டிய அவசியம் என்ன? அவர் யார்? நம்மிடம் இப்போது முஹம்மதுவின் காலத்துக்கு முன்பு இருந்த பைபிளின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன, அதே போன்று அவரது காலத்துக்கு பின்பு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
இந்த குற்றச்சாட்டை வைக்கும் முஸ்லிம்கள் இவ்விரு கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். உலகில் எந்த ஒரு முஸ்லிமாலும் இந்த காரியத்தைச் செய்யமுடியாது.
கேள்வி 85: இஸ்லாம் சொல்வது போன்று ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு 'தீர்க்கதரிசி' என்று மட்டுமே பார்க்கக்கூடாது.
பதில் 85: உலகத்தில் குர்ஆன் மட்டுமே இருந்திருந்தால், கிறிஸ்தவர்கள் இயேசுவை வெறும் தீர்க்கதரிசி என்று மட்டும் நம்பலாம். ஆனால், குர்ஆனுக்கு முன்பாகவே பைபிள் வந்துவிட்டதே, அதுவும் குர்ஆனுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே புதிய ஏற்பாடு வந்துவிட்டதால், இயேசுவை வெறும் நபி என்று கருதமுடியவில்லை.
முஸ்லிம்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், யாராவது புதிய ஏற்பாட்டை படியுங்கள், அதுவும் நற்செய்தி நூல்களை மட்டுமே படித்து, 'அதில் இயேசு தன்னை நபி என்று மட்டும் சொல்கிறார்' என்று நிருபியுங்கள், அப்போது நான் 'இயேசு ஒரு நபி’ என்று ஏற்றுக்கொள்ளுவேன்.
இயேசு பேசிய வார்த்தைகளை படிக்கும்போது, அவர் தன்னை இறைவனுக்கு சமமாக கருதுவதாக தெரிகிறது. இதில் எந்த ஒரு சிறிய சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை.
கேள்வி 86: நான் ஒரு முஸ்லீம், பைபிளை படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். எங்கேயிருந்து ஆரம்பிக்கட்டும், பழைய ஏற்பாடா அல்லது புதிய ஏற்பாடா?
பதில் 86: நீங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பியுங்கள். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்திலிருந்து படிக்க ஆரம்பியுங்கள். புதிய ஏற்பாட்டை முடித்த பிறகு நீங்கள் பழைய ஏற்பாட்டை தொடங்கலாம்.
கேள்வி 87: இயேசுவிற்கு இன்ஜில் கொடுக்கப்பட்டதென்று குர்ஆன் சொல்கிறது? அது ஒரு புத்தகம் தான், ஆனால் நீங்கள் ஏன் நான்கு நற்செய்திகளை வைத்திருக்கிறீர்கள்?
பதில் 87: முஹம்மது கி.பி. 610ல் நபியாகிறார். புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா & யோவான்) கி.பி. 100க்குள் முடிவடைந்துவிட்டது. 500 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்ஆன் இயேசுவிற்கு இன்ஜில் கொடுக்கப்பட்டது என்றுச் சொல்லும் போது, அது அனைத்து நற்செய்தி நூல்களை குறிப்பதாகத் தானே அர்த்தம்?
கிறிஸ்தவர்களைப் பார்த்து குர்ஆன் நீங்கள் இன்ஜிலை பின்பற்றுங்கள் என்று கி.பி. 610க்கு பிறகு கட்டளையிடும் போது, அவர்களிடம் உள்ள நான்கு நற்செய்தி நூல்களைத் தானே அது குறிப்பதாக அமையும்?
ஒருவேளை குர்ஆனில் எங்கேயாவது, கிறிஸ்தவர்களிடம் உள்ள நான்கு நற்செய்தி நூல்களை நான் அனுப்பவில்லை, நான் ஒன்றைத் தான் அனுப்பினேன் என்று அல்லாஹ் சொல்லியுள்ளானா? இல்லையே!
5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கும் போது கிறிஸ்தவர்களிடம் நான்கு நற்செய்தி நூல்கள் உள்ளன என்று அவனுக்குத் தெரியவில்லையா? நிச்சயம் தெரியும், ஆனால் முஸ்லிம்கள் தான் இதனை ஏற்கமனதில்லாமல் இருக்கிறார்கள்.
கேள்வி 88: பைபிளில் இயேசு எங்கேயாவது தன்னை இறைவன் என்று சொன்னதுண்டா?
பதில் 88: அனேக இடங்களில் அவர் தன்னை இறைவன் என்று கூறியுள்ளார். இயேசுவின் கீழ்கண்ட சில வார்த்தைகளை கவனியுங்கள், இதனை ஒரு மனிதன் சொல்லமுடியுமா? என்பதை ஆய்வு செய்யுங்கள்:
- இப்றாஹீமுக்கு முன்பே தாம் இருப்பதாகச் சொன்னார். (இயேசுவிற்கும் இப்றாஹீமுக்கு இடையே 2000 ஆண்டுகள் இடைவெளி உள்ளது)
- மக்களின் பாவங்களை மன்னிக்க தமக்கு அதிகாரம் உண்டென்றுச் சொன்னார்.
- கியாம் நாளன்று உலக மக்களை நியாயம் தீர்ப்பார் என்றார்.
- மக்களுக்கு நித்திய ஜீவனைத் தருவேன் என்றார்.
- ஓய்வு நாளுக்கு தாமே ஆண்டவர் என்றார்.
- தேவாலயத்தைவிட பெரியவர் என்றார்.
- சாலொமோன் அரசரை விட பெரியவர் என்றார்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கண்டவைகளை ஒரு நபி சொல்லமுடியுமா? என்றுசிந்தித்துப் பாருங்கள்.
கேள்வி 89: பைபிளில் ஏன் இயேசு பற்றிய அங்க அடையாளங்கள் சொல்லப்படவில்லை?
பதில் 89: ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு என்ன தேவை? இறைவன் மனிதனாக வந்தால், அவர் என்ன சொல்கிறார்? அவர் என்ன செய்கிறார்? இவை இரண்டு தான் முக்கியமே தவிர, அவரது வெளிப்புற அடையாளங்கள் அல்ல.
இயேசுவின் வெளித்தோற்றமும் கிறிஸ்தவர்களும்:
ஒரு கிறிஸ்தவனிடம் 'உங்கள் இயேசு என்ன உயரம்?' என்று கேட்டுப்பாருங்கள், "எனக்கு தெரியாது" என்று பதில் வரும்.
- இயேசு என்ன கலர்? என்று கேட்டால், "எனக்கு தெரியாது" என்று பதில் வரும்.
- இயேசுவின் கண்கள் எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
- இயேசுவின் முகம் எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
- இயேசு மீசை வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது.
- இயேசு தாடி வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது.
- இயேசுவின் பேச்சு எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
- இயேசு பொதுவாக எப்படி பேசுவார், சத்தம் உயர்த்தி பேசுவாரா? தாழ்த்திப் பேசுவாரா? எனக்குத் தெரியாது.
- இயேசு எப்படி சாப்பிடுவார்? எனக்குத் தெரியாது.
- இயேசு எப்படி தண்ணீர் குடிப்பார்? எனக்குத் தெரியாது
இயேசுவின் வெளித்தோற்றம் பற்றி எந்த கேள்வியைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது என்றுச் சொல்கிறீர்களே! கிறிஸ்தவர்களே! இயேசுவைப் பற்றி என்னத்தான் தெரியும் உங்களுக்கு!?
இயேசுவே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்றுத் தெரியும் என்று கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்கள். மனிதன் இரட்சிக்கப்பட எவைகளை பதிவு செய்யவேண்டுமோ, அதை மட்டுமே பைபிள் பதிவு செய்துள்ளது, மற்றவைகள் தேவையில்லை.
இதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கு படியுங்கள்: இயேசுவின் ஹலால், முஹம்மதுவின் ஹராம் 6: முஹம்மது என்னும் முஸ்லிம்களின் விக்கிரகம்
கேள்வி 90: மத நல்லிணக்கத்திற்காக, குர்ஆனை உங்கள் ஞாயிறு ஆராதனையில் வாசிக்க அனுமதி கொடுப்பீர்களா?
பதில் 90: நீங்கள் மத நல் இலக்கணத்திற்காக உங்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் மசூதிகளில், பைபிளிலிருந்து முக்கியமாக புதிய ஏற்பாட்டிலிருந்து சில வசனங்களை படிப்பீர்களா?
அடுத்த தொடரின் இன்னும் 30 கேள்வி பதில்களை வேறு ஒரு தலைப்பில் காணலாம்.