ரமளான் 2022 - உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?

ரமளான் 2022 தொடர் கட்டுரைகள் 

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

இந்த 2022ம் ஆண்டு ரமளான் தொடர் கட்டுரைகளாக, "முந்தைய வேதங்களின் உவமைகளும், இஸ்லாமும்" என்ற தலைப்பில் சில தியானக் காட்டுரைகள் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

உவமை என்பது ஒரு ஒப்புமையாகும், அதாவது ஒரு பொருளை விளக்குவதற்கு இன்னொரு பொருளை ஒப்பிட்டு கூறுவதாகும்.  இயேசு பல உவமைகளைச் சொல்லி மக்களுக்கு தம் நற்செய்தியை விளக்கினார். அவர் பல கதைகளை உவமைகளாகச் சொல்லி,  கேள்விகள் கேட்டு, பதில்களைப் பெற்று, அதன் மூலம் மக்களை சிந்திக்க வைத்தார். பழைய ஏற்பாட்டிலும், பல உவமைகள் சொல்லப்பட்டுள்ளன. இதே போன்று குர்‍ஆனிலும் அல்லாஹ் பல உவமைகளைச் சொல்லி தம் செய்தியை அறிவிக்கிறான். 

இவ்வாண்டு ரமளான் மாதம், இயேசுவின் மற்றும் பழைய ஏற்பாட்டின் உவமைகளை ஒவ்வொன்றாக நன்கு ஆய்வு செய்து, முஸ்லிம்களோடு  உரையாடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்... யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?

இது ஒரு உழவனின் கதை, இல்லை இல்லை, இது "அந்த உழவன் விதைக்கும் விதைகளின் கதை". வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், இது நிலத்தின் கதை, விதையின் கதை, இறையரசின் கதை.

இறையரசு என்றால், அதில் நீங்கள் இல்லாமல் இருப்பீர்களா என்ன? ஆம், இது உங்களுடைய கதை,  நம் ஒவ்வொருவருடைய கதை.

வாருங்கள், இயேசு சொன்ன அந்த உவமையை படிப்போம்:

மத்தேயு 13:3-10, 18-23

3. அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். 4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. 5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. 6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. 7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. 8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். 10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.

18. ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். 19. ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். 20. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; 21. ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். 22. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். 23. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

1) நல்ல நிலத்தில் விதைக்காமல் ஏன், எல்லா இடங்களிலும் விதைக்கிறான்?

மேற்கண்ட உவமையை படிக்கும் போது, நமக்கு தோன்றுகின்ற ஒரு கேள்வி, "ஏன் அந்த உழவன் விதைகளை நல்ல நிலத்தில் விதைக்காமல், வழிகளில், அதிக மண்ணில்லாத கற்பாறை நிறைந்த இடங்களில் இன்னும் முள்ளுள்ள இடங்களில் விதைக்கவேண்டும்?" என்பதாகும்.

ஆம், இது நியாயமான கேள்வி தான். பொதுவாக உழவர்கள் விதைப்பதற்கு முன், நிலங்களை சரி படுத்துவார்கள், கற்களை பொறுக்கி முட்கள் இருந்தால் அவைகளையும் சரி செய்து, நன்கு நீர் பாய்ச்சி, மண்ணை சரியான நிலைக்கு கொண்டுவந்து கடைசியாக தான் விதைப்பார்கள்.

ஆனால், இங்கு உவமையாக சொல்லப்பட்டது நிலமும் விதையும் தான், ஆனால் உண்மையில், அந்த இடத்தில் இருப்பது நானும் நீங்களும் தான்.  நற்செய்தி என்ற விதை விதைக்கப்படும் போது, அது எல்லோருக்கும் விதைக்கப்படும், நல்ல நிலத்திலும், அதிக மண்ணில்லாத நிலத்திலும், முட்கள் இருக்கின்ற இடங்களிலும் விதைக்கப்படும். வானத்திலிருந்து மழை பொழியும் போது, எப்படி எல்லா இடங்களிலும் பொழியுமோ, அது போன்று இறைவனின் நற்செய்தியை அறிவிக்கும் போது, அனைவருக்கும் பாகுபாடின்றி அறிவிக்கப்படும் என்பதைத் தான் இங்கு நாம் கவனிக்கவேண்டியது.

நாம் தான் அந்த நிலம், இறைவனின் நற்செய்தி தான் விதை.

2) நற்செய்தியைக் கேட்டு உணராதிருக்கிறீர்களா?

ஒருவர் நல்ல செய்தியைக் கேட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், அந்த நற்செய்தியினால் அவருக்கு என்ன பயன்?  விதை விழுந்தவுடன், அதன் மேல் மண் விழுந்து, அது மூடப்படவேண்டும், அப்படி மூடாவிட்டால், என்ன நடக்கும்? பறவைகள் வந்து அச்செய்தியை அந்த விதையை கவ்விக்கொண்டு சென்றுவிடும்.

முந்தைய நபிமார்கள் அனைவரையும் அனுப்பியது அல்லாஹ் என்று குர்‍ஆன் சொல்கிறது, ஆனால் அவர்களின் நற்செய்தியை, போதனைகளை முஸ்லிம்களாகிய நீங்கள் ஏன் படிப்பதில்லை?

கீழ்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ள முந்தைய‌  நபிமார்களின் பெயர்களை கவனியுங்கள்: 

மூஸாவுடன் அல்லாஹ் நேரடியாக பேசினான், தாவூத் நபிக்கு ஜபூர் என்ற வேதத்தை கொடுத்தான்.

ஸூரா  4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

ஸூரா 4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்

கவனிக்கவும்: அல்லாஹ் வஹீ அறிவிப்பது என்பது வேறு, அல்லாஹ் நேரடியாக நண்பனைப்போல பேசுவது என்பது வேறு. வஹீ என்பது இஸ்லாமின் படி, ஒரு மலக்கின் மூலமாக நபிகளுக்கு செய்தியை/வசனங்களை அறிவிப்பதாகும். வஹீயைவிட அல்லாஹ் நேரடியாக பேசுவது சிறந்தது. இந்த இடத்தில் அல்லாஹ் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் என்பதைத் தான் இது காட்டுகிறது.

மூஸாவுடன் அல்லாஹ் என்ன பேசினான்? ஜபூர் புத்தகத்தில் உள்ள நற்செய்தி என்ன? என்று படிக்க உங்களுக்கு விருப்பமா? 

ஸூரா 2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்). 

ஸூரா 5:44. நிச்சயமாக நாம் தாம் "தவ்ராத்”தையும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. . . . 

ஸூரா 5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

(அனைத்து குர்‍ஆன் வசனங்கள் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன‌)

  • தௌராத்தை தமிழில் இங்கு படிக்கலாம்
  • ஜபூரை தமிழில் இங்கு படிக்கலாம்
  • இன்ஜீலை தமிழில் இங்கு படிக்கலாம்

3) வழியறுகே விதைக்கட்ட விதைகள் ஏன் முளைப்பதில்லை?

அந்த நிலங்கள் மனிதர்களால் மிதிக்கப்பட்டு (வழி என்பதால்), மென்மையான மண் கல்லைப்போன்று கடினமாக மாறிவிடுகின்றது, அதில் விதைத்தால், முளைக்குமா? இல்லையல்லவா? சில இமாம்களும், முஸ்லிம் அறிஞர்களும் குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்ளாததினால், முந்தைய வேதங்களை நீங்கள் படிக்காதீர்கள் என்றுச் சொல்லி முஸ்லிம்களின் மென்மையான மனதை (மண்ணை) கல்லாக மாற்றிவிட்டார்கள். இதனால் தான் விதைகள் அங்கு முளைப்பதில்லை. முந்தைய வேதங்கள் பற்றி, குர்‍ஆன் சொல்வதைக் கேட்கப்போகிறீர்களா? அல்லது முஸ்லிம் அறிஞர்கள் சொல்வதை நீங்கள் கேட்கப்போகிறீர்களா?

நீங்கள் வழியறுகே விதைக்கப்பட்ட மண்ணாக இருக்கப்போகிறீர்களா? அல்லது நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் கொடுக்கப்போகிறீர்களா? 

ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.(மத்தேயு  13:19)

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.(மத்தேயு  13:23)

இறைவன் கொடுத்த நற்செய்தி, உலகமெங்கிலும் செல்கிறது, எல்லா வகையான நிலங்களிலும் விதைக்கப்படுகின்றது. நிலத்தின் நிலையைப் பொறுத்து, அதன் பயன் அமைகிறது. 

வாசகர்களிடம் சில கேள்விகள்: 

  1. மேற்கண்ட உவமையை படித்தீர்களா? இதனை இதற்கு முன்பு நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  2. இந்த உவமையில் சொல்லப்பட்ட நான்கு வகையான நிலங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?
  3. நீங்கள் கிராமங்களில் ஒரு உழவன் விதைப்பதை பார்த்திருக்கிறீர்களா? 
  4. ஒருவேளை உங்கள் வீட்டுத்தோட்டங்களில் கூட, நீங்கள் சில விதைகளை விதைத்து, சின்னச்சிறு செடிகள் வளருவதைப் பார்த்து இரசித்திருக்கிறீர்களா?
  5. வழியருகே விதைக்கப்பட்ட விதைகள், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நிலத்தைப்போன்று நன்கு பலன் தரவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?
  6. இந்த உவமையில் சொல்லப்பட்ட இதர வகையான நிலங்கள் பற்றி சிறிது சிந்தித்துப் பார்ப்பீர்களா?
  7. இன்ஜில் என்ற வார்த்தை குர்‍ஆனில் எத்தனை முறை வருகிறது? என்று கூட்டிப் பார்த்திருக்கிறீர்களா?
  8. இன்ஜில் என்ற வார்த்தையின் பொருள் என்ன? இதன் பொருள் "நல்ல செய்தி" என்பதாகும். குர்‍ஆனில் "நல்ல செய்தியை" அல்லாஹ் ஈஸாவிற்கு இறக்கினான் -  அது என்ன?

பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாக இருக்கும் இன்ஜிலை படிக்க உங்களுக்கு விருப்பமா?

. . .அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது (ஸூரா 5:46)

இந்த ரமளான் நாட்களில் ஏன் அல்லாஹ்வின் ஒளியும், நேர்வழியுமுள்ள இன்ஜிலை நீங்கள் படிக்கக்கூடாது?

இன்ஜீலை தமிழில் இங்கு படிக்கலாம்: மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 2nd April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்