2018 ரமளான் - 5: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், புதிய ஏற்பாட்டின் பர்னபாவா?

முந்தைய கட்டுரையில், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தவர் அல்ல, அவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மோசடி நபர் என்பதைக் கண்டோம். 

முதல் நூற்றாண்டில், இதர அப்போஸ்தலர்களோடு சேர்ந்து ஊழியம் செய்த "பர்னபா"  என்பவர்,  இந்த 'பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் அல்ல' என்பதை சான்றுகளுடன் இப்போது காண்போம்.

ஒரு புத்தகம் பர்னபா பெயரை ஏந்தி இருந்தால், உடனே அது முதல் நூற்றாண்டின் புதிய ஏற்பாட்டு பர்னபா எழுதி இருப்பார் என்று முடிவு செய்யமுடியாது. அந்த விவரம் உண்மையா? என்பதை ஆய்வு செய்து முடிவு செய்யவேண்டும். முக்கியமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களாக இருந்தால், அவைகளின் உண்மையான ஆசிரியர் யார்? அவைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் என்ன? போன்றவைகளை கண்டறிய சில வழிமுறைகளை பின்பற்றி கண்டுபிடிக்கலாம்.

கீழ்கண்ட இரண்டு வகையான சான்றுகள் இப்புத்தகத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள‌ நமக்கு உதவியாக இருக்கும்.

1) அகச்சான்றுகள் (Internal Evidences):

எந்த ஒரு புத்தகமானாலும் சரி, அந்த புத்தகத்தின் வரிகளில் காணப்படும் சரித்திர, புவியியல், மொழி நடை, எழுத்துவடிவம் மற்றும் இறையியல் விவரங்களை ஆய்வு செய்தால், அதன் காலத்தை கண்டுபிடிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் எழுதப்பட்ட காலத்திற்கு நெருங்கி வந்துவிடலாம். 

இதன் அடிப்படையில் பர்னபா சுவிசேஷத்தின் அகச்சான்றுகளை, முதல் நூற்றாண்டு சரித்திர, புவியியல், மொழி நடை, எழுத்துவடிவம் மற்றும் இறையியல் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை கண்டரிய முடியும்.

2) புறச்சான்றுகள் (External Evidences):

கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தின் அல்லது கையெழுத்துப் பிரதிகளின் காலத்தை நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் காலத்தை கண்டுபிடிப்பதாகும். மேலும், அதே காலத்தில் எழுதப்பட்ட இதர நூல்களோடு ஒப்பிட்டு அதன் காலத்தையும் இதர விவரங்களையும் கண்டுபிடிக்கமுடியும். 

இன்னும் அனேக வழிமுறைகள் இருந்தாலும், நாம் இந்த புத்தகத்தின் உண்மையை கண்டறிய மேற்கண்ட இரண்டு ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை கண்டறிந்தால், இந்த ‘பர்னபா சுவிசேஷம்’ புத்தகத்தின் ஆசிரியர் உண்மையாகவே முதல் நூற்றாண்டின் பர்னபா தானா? இல்லையா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

சான்றுகள்:

இந்த மோசடி சுவிசேஷத்தை முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள், இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ‘இந்த பர்னபா என்பவர், முதல் நூற்றாண்டின் பர்னபா ஆவார் மேலும் இயேசுவோடு ஊழியம் செய்த 12 சீடர்களில் இவரும் ஒருவர் ஆவார்’ என்று முஸ்லிம்கள் கருதுவதாகும். ஆனால், இச்சான்றுகள் முஸ்லிம்களின் நம்பிக்கையை தகர்த்துவிடுகின்றது, மட்டுமல்ல, குர்-ஆனை பொய்யாக்கிவிடுகின்றது. சத்தியத்தை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வமுள்ள முஸ்லிம்கள் இச்சான்றுகளை மேலோட்டமாக பார்த்தாலும் கூட‌, உடனே தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள். இப்போது இச்சான்றுகளில் சிலவற்றைக் காண்போம்.

சான்று 1. மஸீஹா(மேசியா) மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அறியாத பர்னபா

கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தையும், மேசியா என்ற எபிரேய வார்த்தையும் ஒரே பொருளை கொண்ட வார்த்தைகளாகும். அதாவது மேசியா என்று எபிரேயத்தில் சொல்வதை கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று மொழியாக்கம் செய்யவேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் தமிழில் “அபீஷேகம் செய்யப்பட்டவர் (அ) தெரிந்துக்கொள்ளப்பட்டவர்” என்பது பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால், இயேசு “கிறிஸ்து”வாக இருக்கிறார், இதை குர்‍ஆனில் "ஈஸா அல்-மஸீஹா" என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இயேசு என்பது அவருக்கு இட்டப்பெயர், மஸீஹா (மேசியா/கிறிஸ்து) என்பது அவரது பட்டப்பெயர்.

இந்த பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் எப்படி தன் மோசடி புத்தகத்தை தொடங்குகிறார் என்பதை கவனிக்கவும்:

உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு புதிய தீர்க்கதரிசியும், கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவருமாகிய இயேசுவின் உண்மையான நற்செய்தி. இவருடைய அப்போஸ்தலனாகிய பர்னபா என்பவர் எழுதிய நற்செய்தி.

கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர் பர்னபா, அமைதியையும், ஆறுதலையும் விரும்பும் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எழுதிக்கொள்வது. 

True Gospel of Jesus, called Christ, a new Prophet sent by God to the world: according to the description of Barnabas his apostle.

Barnabas, apostle of Jesus the Nazarene, called Christ, to all them that dwell upon the earth desireth peace and consolation.

மூலம்: http://www.sacred-texts.com/isl/gbar/gbar000.htm

“கிறிஸ்து (மஸீஹ்)” என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சுவிசேஷம் என்று தொடங்குகிறார். ஆனால், இந்த புத்தகம் முழுவதிலும் கவனித்தால், அனேக இடங்களில் இயேசு தான் ”மேசியா இல்லை” என்றுச் சொல்வதை காணலாம். 

உதாரணத்திற்கு, கீழ்கண்ட இயேசுவின் பதிலை கவனிக்கவும்.  சில யூத தலைவர்கள் இயேசுவிடம் வந்து நீர் யார்? என்று கேள்வி கேட்டபோது, நான் மேசியா இல்லை என்று இயேசு பதில் கொடுத்ததாக பர்னபா சுவிசேஷம் சொல்கிறது:

இயேசு அறிக்கையிட்டு உண்மையைச் சொன்னார்: ‘நான் மேசியா இல்லை. 

Jesus confessed, and said the truth: 'I am not the Messiah.'

மூலம்: பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 42: 

இந்த மோசடி சுவிசேஷத்தை எழுதியவருக்கு ‘மேசியா’ என்றாலும், ‘கிறிஸ்து’ என்றாலும் ஒன்று தான் என்ற உண்மை தெரியவில்லை. இவர் நிச்சயமாக கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறியாத அரைகுறை நபராக (முஸ்லிமாக) இருந்திருக்கவேண்டும்.  “நான் மேசியா இல்லை” என்று இயேசு புத்தகத்தின் உள்ளே சொல்லியிருக்கும் போது, அந்த புத்தகத்தை, ’கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசு’ என்று தொடங்குவதிலிருந்து, தனக்குத்தானே முரண்படுகின்றார் இந்த பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர். 

இயேசு கிறிஸ்துவாக இருந்தால், அவர் எப்படி “கிறிஸ்து” இல்லை என்று மறுக்கமுடியும்?  இது இவ்வாசிரியர் செய்த மிகபெரிய இறையியல் தவறாகும்.

இவ்விவரம் சில முஸ்லிம்களுக்கு இன்னும் புரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது, எனவே ஒரு இஸ்லாமிய உதாரணத்தைக் காண்போம். ஒரு புத்தகத்தில் 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஆவார்' என்று ஒருவர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே புத்தகத்தில், 'நீங்கள் அல்லாஹ்வின் தூதரா?' என்று கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு முஹம்மது, 'நான் அல்லாஹ்வின் தூதர் இல்லை' என்று பதில் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த புத்தகத்தை படிக்கும் வாசகர்கள் இப்போது எந்த முடிவுக்கு வருவார்கள்? முஹம்மது அல்லாஹ்வின் தூதரா? இல்லையா? முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று புத்தகத்தின் தொடக்கத்தில் கூறிவிட்டு, புத்தகத்தின் உள்ளே "நான் அல்லாஹ்வின் தூதர் இல்லை" என்று முஹம்மது கூறினால், அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஒரு பொய்யர் என்று அர்த்தமாகின்றது அல்லவா? அல்லது அவருக்கு முஹம்மது பற்றிய‌ அடிப்படை உண்மைகள் தெரியவில்லை என்று அர்த்தமாகின்றது அல்லவா? இதே போலத்தான், இயேசுவைப் பற்றி பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் தன்னுடைய அரைகுறை ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த மோசடியைச் செய்தவருக்கு எபிரேய மொழியில் மேசியா என்றால், கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று பொருள் என்ற அடிப்படை விவரம் கூட‌ தெரியவில்லை. இதனால், இவர் ஒரு மோசடி பேர்வழி என்பதை அறிந்துக்கொள்ளலாம்.  

குர்‍ஆனை கேவலப்படுத்தும் பர்னபா சுவிசேஷம்: 

குர்‍ஆனில் ‘அல் மஸீஹ்' என்று அல்லாஹ்  இயேசுவை குறிப்பிடுகின்றான், ஆனால், பர்பனா சுவிசேஷம் 'இயேசு மஸீஹ் இல்லை' என்றுச் சொல்கிறது.

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

குர்‍ஆன் 4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்);  . . ..

குர்‍ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . .

குர்‍ஆன் 5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; . . . .

குர்‍ஆன் 5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: . . .

குர்‍ஆன் 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். . . . (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்‍ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; . . . .

குர்‍ஆன் 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; . . . .

மேற்கண்ட அனைத்து குர்‍ஆன் வசனங்களையும் பர்னபா சுவிசேஷம் பொய்யாக்குகிறது.

மேசியா/கிறிஸ்து வார்த்தைகளின் பயன்பாடு

மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியிலே அதிகமாக பயன்படுத்தப்பட்ட சிறப்புமிக்க வார்த்தைகளாகும். முதல் நூற்றாண்டின் பர்னபா இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தவர், ஏனென்றால், இவர் பக்தியுள்ள கிறிஸ்தவராக இருந்தவர். முதல் நூற்றாண்டு பர்னபா ‘சைப்ரஸ்’ என்ற தீவில் வாழ்ந்துவந்த எபிரேயம் பேசும் யூதனாக இருந்தார், மேலும் இந்த தீவு கிரேக்க மொழி பேசும் மக்களைக் கொண்ட தீவாகும். இவர் கிரேக்க மொழி பேசும் நாடுகளுக்கு பயணம் செய்து சுவிசேஷ ஊழியம் செய்தவர். இவருக்கு தன் தாய்மொழியாகிய எபிரேயமும் தெரியும், தான் வாழும் நாட்டில் பேசப்படும் கிரேக்க மொழியும் தெரியும். இந்த நிலையில் இப்படிப்பட்ட அடிப்படை தவறை இவர் செய்திருக்கமுடியாது. இவ்வளவு புகழ் பெற்ற மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் வெவ்வேறானவை என்று இவர் கருத வாய்ப்பு இல்லை. எனவே, இந்த அடிப்படை தவறைச் செய்தவர் ஒரு மோசடி நபராகத்தான் இருக்கமுடியும்.

அரபி குர்‍ஆனையும், தமிழ் குர்‍ஆனையும், தமிழ் பைபிளையும் நன்கு கற்றறிந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முஸ்லிம், ஒரு புத்தகம் எழுதும் போது, அதில், அரபி குர்‍ஆனில் வரும் மஸீஹா என்ற வார்த்தையும், தமிழ் பைபிளில் வரும் 'கிறிஸ்து' என்ற வார்த்தையும் வெவ்வேறானவை என்று விளக்கமளிப்பாரானால், அவரை என்னவென்றுச் சொல்லமுடியும்? அவர் ஒரு பொய்யர் மற்றும் பித்தளாட்டக்காரர் ஆவார் என்றும், தனக்கு அரைகுறை ஞானம் இருந்தும், தனக்கு எல்லாம் தெரியும் என்று பொய்யைச் சொல்லிக்கொண்டு திரிகிறார் என்றும் கருதுவோம் அல்லவா? அது போலத்தான், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவரும் கருதப்படுவார்.

பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் முதல் நூற்றாண்டு பர்னபா இல்லை, அவர் பல நூற்றாண்டுகளை தாண்டி வாழ்ந்தவர், மேலும் தான் விவரிக்கும் நிகழ்ச்சி எந்த கலாச்சார சூழலில் நடந்தது, அப்பொழுது நடைமுறையில் இருந்த மொழிகள் பற்றிய விவரங்களை அறியாத ஒரு மோசடி பேர்வழி என்பது இதன் மூலம் அறிந்துக் கொள்ளமுடியும். 

முடிவுரை:

இக்கட்டுரையில் பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் 'முதல் நூற்றாண்டு பர்னபா இல்லை' என்பதற்கு ஒரு அகச்சான்றைக் கண்டோம். இயேசுவோடு வாழ்ந்த ஒருவருக்கு தெரிந்திருக்கவேண்டிய அடிப்படை விவரம் (மேசியா என்றால் கிறிஸ்து என்று அர்த்தம் என்பதைக்) கூட தெரியாத இவர் எப்படி இயேசுவின் சீடராக இருந்திருக்கமுடியும்?

அடுத்த கட்டுரையில் இன்னும் சில சான்றுகளைக் காண்போம்.


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்