நீங்களும் கடவுளே, நானும் கடவுளே மற்றும் நாம் அனைவரும் கடவுளே - இது சரியா?

நமக்கு வந்த ஒரு மெயில்:

From:  Hxxxxxxxxx 

Date: Jul 17, 2018, 2:10 AM

அன்பு தான் கடவுள் என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை இயேசுவும் கடவுளே, நீங்களும் கடவுளே, நானும் கடவுளே மற்றும் நாம் அனைவரும் கடவுளே. அதாவது கடவுளின் தன்மைக்கு (அன்பு) அதிகமாக முயற்சி செய்யும் உயிரினங்கள்.

இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

சூரியனில் எவ்வாறு நிழல் இல்லையோ, அவ்வாறே இறைவனிடம் தண்டனை என்ற குணம் இருக்காது.

என்னுடைய இந்த விசுவாசம் சரியானதா? அல்லது தவறானதா?

(நான் இஸ்லாமியன் இல்லை).


எங்களுடைய பதில்:

அன்பான சகோதரருக்கு,

உங்கள் கேள்விக்காக மிக்க நன்றி. தாமதமான பதிலுக்காக மன்னிக்கவும்.

உங்களுடைய வரிகளில் கீழ்கண்ட விவரங்கள் தெரிகின்றன.

1) உலகத்தில் பிறந்த அனைவரும் கடவுள்கள் தான்.

2) இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும், தண்டனை கொடுக்கும் குணம் இருக்காது.


1) உலகத்தில் பிறந்த அனைவரும் கடவுள்கள் தான்

(இக்கருத்தை கடவுள் ஏற்றுக்கொள்வாரா?)

மேலோட்டமாக பார்த்தால், “உலகத்தில் பிறந்த அனைவரும் கடவுள்கள் தான்” என்ற‌ நம்பிக்கை சரியானதாக தோன்றும். பொதுவாக, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட நேரமில்லாதவர்கள், ஆன்மீக விவரங்களை அதிகமாக ஆய்வு செய்யாதவர்கள், நம்புவது இப்படித்தான். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோன்றும் புதிய சாமியார்கள் அல்லது ஆன்மீக குருக்கள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இப்படிப்பட்ட 'ஆன்மீகத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்'.

“நீயும் கடவுள் தான், நானும் கடவுள் தான், எல்லோரும் கடவுள் தான்” என்பது ஒரு தனிப்பட்ட நபரின் நம்பிக்கை, அது நிஜமாவதில்லை. அதே நேரத்தில் இப்படி நம்புவதில் தவறில்லை.

“நான் இப்படி நம்புகிறேன்” என்று நீங்கள் சொன்னால், அது உங்கள் உரிமை. ஆனால், நாம் வாழும் உலகை நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்களுடைய‌ நம்பிக்கைக்கு எதிராக உலகம் ஓடிக்கொண்டு இருப்பதை காணமுடியும். அதாவது, “இந்த நம்பிக்கை தவறு” என்று உலகம் நம்மிடம் அடித்துச் சொல்வதை காணமுடியும்.

எல்லோரும் கடவுள்கள் என்பது சாத்தியமா?

கடவுள் கடவுள் தான், மனிதன் மனிதன் தான். 

மனிதன் கடவுள் ஆகமுடியாது. (ஆனால், கடவுள் மனிதன் ஆகமுடியும். இதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம், தேவைப்பட்டால்).

கடவுள் என்றால் யார்? என்ற ஒரு வரையறையைச் சொல்லாமல், நாம் நம் கருத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் (அடக்கடவுளே!, நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்லாமலேயே, என்னைப் பற்றி இப்படியெல்லாம் மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே, என்று கடவுளே ஆச்சரியப்படுவார்).

அனேக விஷயங்களில் மனிதர்கள் ஒருவர் சொல்லும் வரையறையை மற்றொருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், கடவுள் பற்றி ஒருவர் சொல்லும் வரையறையை உலக மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக‌ ஏற்றுக்கொண்டதாக சரித்திரம் இல்லை, இனியும் அப்படிப்பட்ட ஒரு நிலை வரப்போவதும் இல்லை. 

கடவுள் வானத்தில் பிரமாண்டமாக‌ தோன்றி, உலக மக்கள் அனைவரும் காணும் படி மேகங்களில் வந்து, "நான் தான் கடவுள், இனியும் நீங்கள் என்னை மறுக்கமுடியாது" என்று அவர் சொன்னால் தான், மக்கள் அனைவரும் கடவுளை நம்புவார்கள். ஆனால், அப்படி அவர் வரும் போது, அதுவரை அவரை நம்பவேண்டிய படி நம்பாதவர்களுக்கு அவர் இன்னொரு வாய்ப்பை தருவாரா என்பது தான் முக்கியமான கேள்வி. 

இது ஒரு பக்கம் இருக்கட்டும், இப்போது 'எல்லோரும் கடவுள் தான்' என்ற கருத்து நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை கவனிப்போம். 

நடைமுறை சாத்தியமற்ற கருத்து:

'எல்லோரும் கடவுள் தான்' என்ற கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது, இதனை புரிந்துக்கொள்ள‌ சில உதாரணங்கள்:

  • ஒவ்வொரு மனிதனும் கடவுள் என்றால், ஏன் ஊருக்கு ஊர் காவல் நிலையம் உள்ளது? ஏன் நீதிமன்றங்கள் உள்ளன?
  • திருட்டு, கற்பழிப்புக்கள், ஏமாற்றுதல் போன்ற தீய காரியங்களை ஏன் மனிதன் (அதாவது கடவுள்) செய்கின்றான்.
  • ஒரு கடவுள் இன்னொரு கடவுளை ஏன் கொலை செய்கின்றான்? அதாவது ஒரு மனிதன் ஒன்னொரு மனிதனை ஏன் கொலை செய்கின்றான்?
  • மனிதர்களால் உலகில் நடக்கும் அனைத்து தீய செயல்களைக் கண்டால், “மனிதன் ஒரு போதும் கடவுள் ஆகமுடியாது” என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. இதனை மறுக்கமுடியுமா?
  • இரக்கம் இல்லாமல் சிறுமிகளை, பெண்களை கற்பழிப்பவன் கூட உங்களின் கருத்துப்படி கடவுளா? நிச்சயமாக இல்லை. சில கடவுள்கள் (மனிதர்கள்) கிழவிகளையும் கற்பழித்துள்ளார்கள் என்று செய்திகளில் வாசிக்கிறோம், இவர்கள் மனிதர்களா! கடவுள்களா! 
  • உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, தானும் செத்தும் மற்றவர்களையும் கொல்பவன் கடவுளா? நிச்சயமாக இல்லை.

மேற்கண்ட நாட்டு நடப்புக்கள், “மனிதன் கடவுள் ஆகமுடியாது” என்று சொல்லாமல் சொல்கின்றன.

தற்காலிக கடவுள்கள் உண்டு:

ஒரு ஏழை கஷ்டத்தில் இருக்கும் போது, அவனுக்கு ஒருவன் உதவி செய்தால், உதவி செய்தவனைப் பார்த்து, அந்த ஏழை 'நீங்க தான் என் கடவுள்' என்றுச் சொல்வான். உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நபருக்கு, மருத்துவம் செய்து பிழைக்கவைத்தால், அந்த  மருத்துவரைப் பார்த்து, “நீங்கள் தான் என் கடவுள்” என்று உயிர் பிழைத்தவனும், அவன் குடும்பத்தாரும் சொல்வார்கள். (அவர்கள் இப்படி சொல்வதால், உதவி செய்தவரை இவர்கள் கடவுளாக்கிவிட்டு, தினமும் இவரை வணங்குவார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் இந்த அர்த்தத்தில் அவர்களை கடவுள் என்று அழைக்கவில்லை. கடவுளைப்போல வந்து உதவி செய்தார் என்ற நன்றி உணர்வு பொங்க அவர்களை கடவுள் என்று சொல்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.)

ஆக, நாம் அனைவரும் கடவுள் அல்ல, ஆனால், சில வேளைகளில் 'நல்ல செயல்களை செய்தால்' நம்மை பகுதி நேர கடவுளாக (Part-time gods) இவ்வுலகம் தற்காலிகமாக‌ பார்க்கும், இதனை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும்.

இங்கு இன்னொரு விஷயம், மேற்கண்ட உதாரணங்களில் ஏழைக்கு உதவியவனும், உயிரைக்காத்த மருத்துவரும், கடவுள்கள் அல்ல. அவர்களின் வாழ்க்கையை பார்த்தால், வேறு காரியங்களில் அல்லது மற்றவர்களிடம் கடவுளாக அவர்கள் நடந்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.  அவர்களும் தீமை செய்பவர்களாகவே இருப்பார்கள். ஒரு மனிதனால் எல்லா நாட்களும், எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் நன்மை (கடவுளாக முடியாது) செய்யமுடியாது என்பது தான் நிஜம்.

  • அந்த ஒரு குறிப்பிட்ட  நாள், 
  • அந்த ஒரு குறிப்பிட்ட  செயல், 
  • அந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு 
  • அவர்கள் கடவுளாக காணப்படுவார்கள், அவ்வளவு தான்.

அந்த ஏழைக்கு வேறு ஒரு நபர், வேறு ஒரு சூழ்நிலையில் உதவி செய்தால், அவனையும் 'கடவுள்' என்று தான் அவன் அழைப்பான். உதவியைப் பெற்ற ஏழையைப் பொருத்தமட்டில், உதவி செய்பவன் யாராக இருந்தாலும் சரி, அவன் கடவுள் ஆவான்.

அடுத்ததாக, “நீயும் கடவுள் நானும் கடவுள்” என்று நம்புவது ஆபத்தானதாகும். 

பேருந்து அல்லது இரயில் நிலையத்தில் எந்த ஒரு கடவுளையும் (மனிதனையும்) நம்பி, நம் பணப்பையை கொடுத்துச் செல்வது ஆபத்தானது. இப்படி செய்பவனைப் பார்த்து உலகம் சிரிக்கும். அனைவரும் கடவுள் என்றால், அவனிடம் பயப்படாமல் பணப்பையை கொடுத்துச் செல்லலாமே! அப்படி யாருமே செய்யமாட்டோம், ஏனென்றால் "அனைவரும் மனிதர்கள் தான்" என்று நம் அடிமனதுக்கு நன்றாகத்தெரியும்.

கடைசியாக, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எப்போது  இல்லாமல் போகுமோ,  இராணுவம்  இல்லாமல் நாடுகள் இருக்குமோ, பயங்கரமான விளைவுகளை கொடுக்கும் ஆயுதங்களை நாடுகள் அதிகமாக வாங்கி சேமித்துக்கொள்ளாமல் இருக்குமோ,  அன்று  'நீயும் கடவுள், நானும் கடவுள், எல்லோரும் கடவுள் என்று' சொல்லிக்கொள்ளலாம். அதுவரை இப்படி நாம் சொல்லமுடியாது, மன்னிக்கவும் சொல்லக்கூடாது.

நடைமுறைக்கு முரணான கருத்து தான் 'நீயும் கடவுள், நானும் கடவுள், எல்லோரும் கடவுள்' என்று நம்புவது.

இப்போது அடுத்த  பாயிண்டுக்குப்போவோம்.

2) இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும், தண்டனை தரும் குணம் இருக்காது:

இப்படி யார் சொன்னது? கடவுள் சொல்லியுள்ளாரா? என்ற கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது.

நீங்கள் கீழ்கண்ட விதமாக கூறினீர்கள்:

//இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

சூரியனில் எவ்வாறு நிழல் இல்லையோ, அவ்வாறே இறைவனிடம் தண்டனை என்ற குணம் இருக்காது.//

இங்கும் நாம் “கடவுள் யார்?” என்ற வரையறையை கொடுக்கவில்லை, ஆனால், கடவுளிடம் இருக்கவேண்டிய ஒரு குணத்தை சுட்டிக்காட்டிவிட்டோம். அந்த ஒரு குணம் தான் கடவுளிடம் இருக்கவேண்டும் அல்லது இருக்கும் என்று நம்பிவிட்டோம். இதனை அந்த கடவுள் ஏற்றுக்கொள்ளவேண்டுமே!

இதிலும் ஒரு குறை உள்ளது.  இறைவன் அன்பாக இருக்கிறான் என்பது உண்மை தான். ஆனால், அன்பு என்றால் என்ன? அது என்ன செய்யும்? அது என்ன செய்யாது என்ற விவரத்தை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன். 

ஒரு உதாரணம்:

ஒரு அன்பான தகப்பன், தன் 10 வயது மகன் சாலையில் புகைபிடித்துக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் என்ன செய்வான்? அவனை கண்டிப்பான் அல்லவா? அவன் திருந்தாமல் மறுபடியும் அப்படியே செய்தால், அடிக்கவும் செய்வான் அல்லவா? அன்பு இருந்தால் அடிப்பாரா? என்று நாம் கேள்வி கேட்டால் நம்மை விட அறிவீனன் யாருமே இருக்கமுடியாது. அன்பு இருப்பதினால் தான் தகப்பன் அடிக்கிறான் என்பது தானே சரியான பதில். நம் ஊர்களில் சிறுவர்கள் புகை பிடிப்பதை நாம் பார்த்தால், உடனே அதட்டுவோம் அவ்வளவு தான், அடிக்கமாட்டோம், ஏனென்றால், அவர்கள் நம் பிள்ளைகள் இல்லையே! அச்சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால் திருந்தும் வரை அடிப்பார்கள், அல்லது பல வகையான தண்டனைகளைக் கொடுப்பார்கள்.

அதே குழந்தை வாலிபனாகி படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் ஊர் சுற்றிக்கொண்டு, புகைபிடித்தல், குடித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் போது, தந்தையின் அன்பு என்ன செய்யும்? அவன் நேர்வழி அடையும் படி, தன் தீய செயல்களை விடும் விதத்தில் சில தண்டனைகளை கொடுக்காதா?

தண்டனை என்பது கெட்ட குணமல்ல, அதுவும் அன்பின் ஒரு பாகம் தான்.

நான் என் மகனை நேசிக்கிறேன் எனவே, அவனை தண்டிக்கமாட்டேன் என்று ஒருவர் சொன்னால், நாளைக்கு அந்த பிள்ளை வாழ்க்கையை தொலைத்துக்கொண்டு, தீய செயல்களை அதிகமாக செய்ததால், சிறைக்குச் சென்றால் அல்லது எயிட்ஸ் போன்ற வியாதிகளால் பீடிக்கப்பட்டு மரணத்தை சந்தித்தால், இதற்கு யார்  காரணம்? அந்த தகப்பன் தானே! இப்படிப்பட்ட குணத்தை அன்பு என்று சொல்லமாட்டோம். தவறு செய்யும் போது, திருந்தும் வகையில் தண்டனை கொடுப்பதும், நல்வழியில் நடத்துவதும் உண்மையான அன்பு என்றே அழைக்கப்படும்.

எனவே, இறைவன் என்றால் அவனிடம் அன்பு இருக்கும், தண்டனை கொடுக்கும் குணம் இருக்காது என்றுச் சொல்வது தவறான கோட்பாடு ஆகும். குற்றம் செய்பவர்களை நீதிபதி தீர்ப்பு எழுதி தண்டிக்கிறார் என்றால், அதன் அர்த்தம் என்ன? அவர் செய்தது தீய செயலா? இல்லையே!

அன்பு என்றால் குறைந்தபட்சம் கீழ்கண்டவைகளின் கூட்டு குணமாகும்.

அன்பு = நேசித்தல் + வழி காட்டுதல் + கடிந்துக்கொள்ளுதல் + சகித்துக்கொள்ளுதல் + சீர்திருத்துதல் + தண்டித்தல் + தேவைப்பட்டால் உயிரையும் கொடுத்தல் + ...

 நீதிமொழிகள்  13:24 

பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

 நீதிமொழிகள்  29:15 

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

அன்பிலிருந்து நீங்கள் தண்டையையும், கடிந்துக்கொள்ளுதலையும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் யாரை நாம் அதிகமாக நேசிக்கிறோமோ, அவர்கள் தீயவைகளை செய்தால் கடிந்தும் கொள்ளுவோம், தேவைப்பட்டால் திருந்தும் படி தண்டனையும் கொடுப்போம். கடிந்துக்கொள்ளாத, தண்டனை கொடுக்காத அன்பு, முழுமையான அன்பு ஆகாது, அது ஆபத்தானது.

எபிரெயர் 12:5-7

5. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

7. நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

வெளி 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

முடிவுரை:

எல்லோரும் கடவுள் தான் என்று யாராவது உங்களுக்கு போதித்தால், அவர்கள் உங்களை உண்மையான கடவுளிடமிருந்து பிரிக்கப்பார்க்கிறார்கள் என்று பொருள். மனிதனை மனிதனாக பாவித்து நடந்துக்கொண்டாலே போதும். அதாவது உங்களை நீங்கள் நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசித்தால் போதும். உங்கள் அயலானை கடவுளாக பாவிக்கவேண்டிய அவசியமில்லை. முதலாவது அவனை மனிதனாக பாவித்து அன்பு செலுத்தினால் அது போதும்.

இரண்டாவதாக, இறைவன் என்றால் அவன் அன்புள்ளவன், தண்டிக்கமாட்டான் என்று நம்புவதும் சரியான கோட்பாடாக இருக்காது. இதுவும் ஆபத்தானது. இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களை 'கடவுள் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை இழக்கச்செய்யும்'. நமக்கு ஒரு தீமை நடந்துவிட்டால், எனக்கு ஏன் இப்படி நேரிடவேண்டும், என் மீது கடவுளுக்கு அன்பில்லையா? போன்ற கேள்விகள் கேட்கத்தோன்றும். என் தகப்பன் என் மேல் அதிக அன்பு கொண்டுள்ளார், நான் தவறு செய்யும் போது தண்டிப்பார், தற்காலத்தில் தீமை நேரிட்டாலும், அதனை நன்மையாக மாற்ற என் கடவுளால் முடியும் என்ற எண்ணமுடைய மகன்/மனிதன், ஒரு போதும், தகப்பனின் தண்டனையைக் கண்டு பயந்து வீட்டை விட்டு ஓடமாட்டான்.

இப்போது ஒரு புதிய கேள்வி உங்களுக்கு எழும், அது என்னவென்றால், "நம்மீது இறைவன் அதிக அன்பு வைத்திருந்தால், ஏன் மரணத்துக்கு  பிறகு நம்மை நரகத்தில் தள்ளுவேன் என்றுச் சொல்கிறார்?" என்பதாகும்.

இதற்கு பதில் வேண்டுமென்றால், இறைவன் நீதியுள்ளவர் என்றால் என்னவென்று நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். இறைவனுக்கு அன்பு என்பது மட்டும் ஒரு குணமல்ல, அவர் நீதியுள்ளவர் மற்றும் பரிசுத்தர் ஆவார். அன்போடு கூட நீதியும் இறைவனின் குணங்களில் கலந்துள்ளதால், நாம் இந்த சிக்கலில் மாட்டியுள்ளோம்.

இனி எந்த ஒரு மனிதனையும் க‌டவுள் என்று சொல்லவேண்டாம், அதற்கு பதிலாக அவனுக்கு நன்மை செய்தால் அதுவே நம்மை பகுதி நேர கடவுளாக மாற்றிவிடும்.

கர்த்தருக்கு சித்தமானால், அதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

தேதி: 26 நவம்பர் 2018


உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

ஈமெயில் பதில்கள்