கிறிஸ்தவர்கள் ஜோசியம் (ஜோதிடம்/ஜாதகம்) பார்க்கலாமா? இயேசுவின் பிறப்பின் போது வந்த சாஸ்திரிகள் ஜோசியர்கள் இல்லையா?

ஒரு கிறிஸ்தவ சகோதரர் மெயில் மூலமாக கீழ்கண்ட கேள்வியை கேட்டார். அவருக்கு கொடுத்த பதிலை இங்கு ஒரு கட்டுரையாக பதிக்கிறேன்.

கேள்வி: கிறிஸ்தவர்கள் ஏன் ஜோசியம் பார்க்கக்கூடாது? இயேசுவின் பிறப்பின் போது கிழக்கத்து தேசத்திலிருந்து வந்த சாஸ்திரிகள், விண்கோள்களைப் பார்த்து இயேசுவைக் காண வந்த ஜோசியர்கள் தானே? அப்படியானால் கிறிஸ்தவர்கள் ஏன் ஜோசியம் பார்க்கக்கூடாது? தங்களுடைய எதிர்காலத்தை குறித்து ஜோசியம் கேட்டு தெரிந்து கொள்ளக்கூடாது?

பதில்: இந்தியாவில் இருக்கின்ற கிறிஸ்தவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகள் எழுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் நம்மை சுற்றி வாழும் மற்ற மக்களின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் நம்மை தாக்க ஆரம்பிக்கும். எனவே இந்த கேள்விக்கு பதில் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.

இந்தக் கேள்விக்கான பதிலை கீழ்கண்ட தலைப்புகளில் பார்க்கப் போகிறோம்.

  1. ஜோசியம் என்றால் என்ன?
  2. நம் எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள ஜோதிடம்/ஜோசியம் பார்ப்பது பற்றி பைபிள் என்ன சொல்கிறது? 
  3. இயேசுவின் பிறப்பின் போது காண வந்தவர்கள் ஜோசியக்காரர்களா?

1) ஜோசியம் (Horoscope) என்றால் என்ன

இக்கேள்விக்கான பதிலை முழுவதுமாக பார்ப்பதற்கு முன்பு, ஜோசியம் என்றால் என்ன? என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஜோசியம் என்றால் ஒரு மனிதன் “பிறந்த தேதி, நாள் மற்றும் நேரம்” போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, அந்த நேரத்தில் விண்கோள்கள் எங்கு இருந்தன‌ போன்றவற்றை கணக்கில்கொண்டு அந்த மனிதனுடைய எதிர்காலத்தை முடிவு செய்வதாகும். அதாவது ந‌ம் சூரிய குடும்பத்தில் சுற்றுகின்ற வின் கோள்களின் பயணத்தின் மூலமாக மனிதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ? வியாபாரம் எப்படி இருக்கும்? உடல் நலம் எப்படி இருக்கும்? என்று கணித்துக் கூறும் ஒரு சாஸ்திரமாகும். இது உண்மை என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இது ஒரு நம்பிக்கை மட்டுமே, உண்மையல்ல. மக்களின் இப்படிப்பட்ட நம்பிக்கைகளை பணமாக்க அனேக ஜோசியக்காரர்கள் முயலுகின்றனர், பணமும் சம்பாதிக்கின்றனர். (இந்த சேவையை பணம் பெறாமல் செய்யச் சொன்னால், ஒரு ஜோசியரும் இந்தியாவில் இருக்கமாட்டார்).

ஜோசியம் என்றால் என்னவென்று ஓரிரு வரிகளில் என் விளக்கத்தைக் கொடுத்தேன்.  ஒரு மனிதனுக்கு எதிர்காலத்தில் நடக்கும் நல்ல காரியங்கள் கெட்ட காரியங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவும் முயற்சி தான் ஜோசியம் பார்ப்பது, அல்லது ஜாதகம் பார்ப்பது.

இந்தியாவில் இந்த ஜாதகம் அல்லது ஜோதிடம் பார்ப்பது மக்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆகிவிட்டது. பிறந்தது முதல் மனிதன் மரிக்கும் வரைக்கும் இந்தியர்கள் இந்த ஜோதிடம் மீது நம்பிக்கை வைப்பவர்கள் இருக்கிறார்கள். என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என் மகனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? எப்போது வியாபாரம் செழிக்கும்? இந்த ஆபத்தில் இருந்து இந்த கண்டத்தில் இருந்து எப்படி தப்பித்துக்கொள்ளலாம்? போன்ற பல கேள்விகளுக்கு பதில்களை தேடி இந்துக்கள் ஜோசியர்களை நாடிச் செல்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் “ஜோசியம் என்பது உண்மை என்று” சொல்வார்கள், அது அவர்களின் நம்பிக்கை அவ்வளவு தான். ஆனால் என்னுடைய இந்த பதில் ஒரு கிறிஸ்தவத்தின் கண்ணோட்டத்தில், பைபிளின் அடிப்படையில் கொடுக்கப்படுகின்ற பதிலாகும்.

ஆங்கிலத்தில் Horoscope என்று சொல்வார்கள். “Hora” என்றால் கிரேக்க மொழியில் “நேரம்” என்று அர்த்தம், “Skopos” என்றால் கணிப்பவர் என்று அர்த்தம் அல்லது பார்ப்பவர் என்று பொருள். ஹோரோஸ்கோபி என்றால் “நேரத்தை கணிப்பவர்” என்று அர்த்தமாகிறது.

2) நம் எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள ஜோதிடம்/ஜோசியம் பார்ப்பது பற்றி பைபிள் என்ன சொல்கிறது? 

குறி கேட்பதும், ஜோதிடம் பார்ப்பதும் தேவனின் பார்வையில் அருவருப்பானது என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது.

ஆனால் செய்தித் தாள்கள் அனைத்திலும் ஜோதிடங்கள் குறித்து வருகிற செய்திகளை சில கிறிஸ்தவர்கள் கூட பார்க்கிறார்கள் என்பது வேதனையாகும்.

உபாகமம் 18:10-14

10. தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

11. மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

12. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.

13. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.

14. நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.

“குறி சொல்லுகிறோம்” என்று சொல்லுகின்ற ஜோதிடர்களிடம் சென்று நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து கேட்பது தவறானது என்பதை புதிய ஏற்பாட்டிலும் நாம் காணலாம்.

ஜோதிடம் என்பது வெறும் மனித ஞானத்தால் மட்டும் சொல்வதல்ல, அது தீய ஆவிகளினால் கூட சொல்லப்படுகின்றது என்பதை நாம் உணர்ந்து அதைவிட்டு தூரமாக இருக்கவேண்டும்.

அப்போஸ்தலர் 16: 16-18

16. நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.

18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.

குறி பார்ப்பது தீயசெயல் அல்ல என்று இருந்திருந்தால், அப்போஸ்தலர்கள் அதட்டியவுடனே அந்த ஆவிகள் புறப்பட்டு போயிருக்காது மேலும் அவைகளை ஆதரித்து அப்போஸ்தலர்களும் பேசியிருப்பார்கள். ஆனால் இந்த வசனத்தின்படி அவைகள் அசுத்த ஆவிகள் என்று நமக்கு புலப்படுகிறது. எனவே கிறிஸ்தவர்கள் குறி சொல்கின்றவர்களிடத்தில் செல்வதும்,  அவர்களிடம் எதிர்காலத்தைக் குறித்து கேட்பதும் தவறானதாகும்.

வானத்தில் இருக்கின்ற கோள்களையும், நட்சத்திரங்களையும் வணங்கவேண்டாம் என்றும் தேவன் கட்டளையிட்டுள்ளார்.

உபாகமம்  4: 19. உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

நம் எதிர்காலம் யார் கையில் இருக்கின்றது?

பூமியிலிருந்து பல லட்ச மைல்களுக்கு அப்பால் சுற்றிக்கொண்டு இருக்கும் கோள்களின் இயக்கங்களினால் நம் எதிர்காலம் மாறாது, நம்மை படைத்த இறைவனால் தான் அதனை மாற்றமுடியும் என்ற உண்மையை அனைவரும் அறியவேண்டும்.

நம்முடைய விசுவாசம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதும் இருக்க வேண்டும். நம்முடைய எதிர்காலம் அவர் கரங்களில் இருக்கிறது. எனவே நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து மற்ற ஆவிகளிடம் சென்று கேட்கும் போது,  நாம் இயேசுவைத் துக்கப்படுத்துகிறவர்களாக இருப்போம். 

ஜாதகம் பார்ப்பது பரிசுத்த வேதாகமத்தை இரண்டு வகையாக எதிர்க்கிறது. ஒன்று, நம்முடைய விசுவாசத்தை தேவன் மீது வைக்காமல்,  வேறு பொய்யானவைகளின் மீது வைப்பதற்கு இது வழிவகுக்கிறது (அவிசுவாசியாக மாற்றுகிறது). இரண்டாவது, நம்முடைய எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கு, தேவ கட்டளையை மீறி, தேவன் அனுமதிக்காத ஒன்றை செய்வதற்கு நம்மை வழிகெடுக்கிறது. தேவ கட்டளையை மீறச்செய்து தண்டனைக்கு நேராக நம்மை நடத்துகிறது.

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து தேவனைத் தவிர வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது, இது மிகப்பெரிய வழிகேட்டில் நம்மைக் கொண்டுபோய் விடும். 

எதிர்காலத்தைக் குறித்து அறிந்துகொண்டு வாழ்ந்தால் என்ன தவறு? என்று சிலர்  கேள்வி கேட்கலாம்? எதிர்காலத்தைக் குறித்து அனைத்து விஷயங்களும் அறிந்துகொள்வது ஆபத்தானதாகும், நம் எதிர்காலம் முழுவதும் தேவனுக்கு மட்டுமே தெரியும். வேறு வழிகளின் ஆவிகளின் மூலமாக அதனை அறிய முயல்வது, தேவையில்லாத பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும்.

நம்முடைய சூழ்நிலைகளில் ஞானமாக நடந்து கொள்ள நாம் அனுதினமும் பைபிளை படித்து, பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, அவர் கொடுக்கும் ஞானத்தோடு எதிர்காலத்தை விசுவாசத்தோடு எதிர்கொள்ள முயலும்போது, தேவன் நமக்கு உதவி செய்து வெற்றியைத் தருவார். நேரான வழியில் சென்று வாழ்வதை விட்டுவிட்டு,  உபாகமம் புத்தகத்தில் பார்த்தது போல, நாம் ஜோதிடர்களின் வீடுகளில் சென்று அவர்களின் ஆலோசனையும் எதிர்காலத்தை குறித்த விவரங்களையும் கேட்டால், நாம் பைபிளுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று பொருள், நாம் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதுதான் பொருள், இயேசுவின் மீது நம்முடைய விசுவாசத்தை விட்டுவிட்டோம் என்பது தான் பொருள்.  இயேசுவின் கைகளில் நம்முடைய எதிர்காலம் இல்லை என்று நாம் சொல்கிறோம் என்று பொருள். ஆகையால் குறி பார்ப்பதை  கிறிஸ்துவர்கள் விட்டுவிட வேண்டும்.

நீதிமொழிகள் 3:5-6

5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, 6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

மற்ற மக்கள் ஜோதிடம் பார்க்கிறார்கள் அல்லவா அதேபோல் நாமும் பார்த்தால் என்ன? இந்த நாம் கேட்டால், மற்றவர்கள் செய்கின்ற அனைத்தையும் நாம் செய்வது நமக்கு தகுதியாக இருக்காது, அந்நிய ஜனங்களின் பழக்கவழக்கங்களை பின்பற்றாதீர்கள் என்று மேற்கண்ட வசனங்கள் நம்மைக் குறித்து எச்சரிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். எது சத்தியம் என்று தெரிந்தும், நாம் அசத்தியத்தின் பக்கம் சாய்ந்தால், எப்படி இரட்சிக்கப்படமுடியும்? இயேசு நம்மை மீட்டது நமக்கு பயன்படாது.

3) இயேசுவின் பிறப்பின் போது காண வந்தவர்கள் ஜோசியக்காரர்களா?

"ஜோசியம் பார்ப்பவர்களும்", வான சாஸ்திரிகளும் வெவ்வேறானவர்கள். ஜோசியர்கள் ஒருவகையான மாஜிக் வார்த்தைகளை சொல்பவர்கள், மற்றும் இந்தியாவில் தோன்றிய மூட நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள், கிரகங்கள் சரியாக இல்லை, சனி பிடித்திருக்கிறது என்று சொல்பவர்கள் ஆவார்கள்.  இன்னும் சொல்லவேண்டுமென்றால் தெய்வ சக்திக்கு வெளியே உள்ள சக்தியை பயன்படுத்தி சில கடந்த கால வாழ்க்கையின் நிகழ்ச்சிகளையும் சொல்பவர்கள். ஜோசியர்கள் விண்கோள்களை தெய்வங்களாக, தேவர்களாக பாவிப்பவர்கள், அவைகளின் உலா வருவதினால் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை மாறுமென்று நம்புபவர்கள். இவைகள் மூட நம்பிக்கைகள் ஆகும்.

ஆனால், புதிய ஏற்பாட்டில் வரும் சாஸ்திரிகளை  ‘ஜோசியர்கள்' என்றுச் சொல்லக்கூடாது, இவர்கள் வானத்தில் உள்ள கோள்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அல்லது ஆய்வாளர்கள் போன்றவர்கள்.  இவர்கள் கோள்களைக் கண்டு எதிர்காலத்தைப் பற்றி சொல்லவந்தவர்கள் என்று பைபிள் சொல்லவில்லை.   இவர்களுக்கு எதிர்காலத்தை கணிக்க தெரிந்திருந்தால், ஏரோது அரசனிடம் சென்று மறுபடியும் செய்தியை சொல்ல விரும்பியிருக்கமாட்டார்கள். இவர்களை தேவதூதர்கள் அறிவுரை கூறி வேறு வழியில் அனுப்பிவிட்டார்கள். எனவே, இவர்கள் விண்மீன்களை ஆய்வு செய்து ஜோசியம் சொல்பவர்கள் அல்ல, விண்மீன்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்றுச் சொல்வது தான் சரியான ஒன்றாக இருக்கும்.

இதுமட்டுமல்லாமல், இயேசுவின் பிறப்பின் விஷயத்தில் மட்டுமே 'தேவன் ஒரு அற்புதத்தை ஒரே ஒரு முறை செய்து, வானத்தில் ஒரு விசேஷித்த நட்சத்திரத்தை பயன்படுத்தி, வழி காட்டப்பட்டவர்கள்.  ஆக, புதிய ஏற்பாட்டு சாஸ்திரிகளை மனதில் வைத்துக்கொண்டு  கிறிஸ்தவர்கள் 'ஜோசியர்களை' நம்பலாமா? என்று கேட்பது சரியானது அல்ல. 

தீர்க்கதரிசிகள் ஜோதிடர்கள் அல்ல:

இன்றைக்கு கிறிஸ்தவர்களும் கூட தீர்க்கதரிசிகள் என்று சொல்லக்கூடிய சில ஊழியர்களிடம் அறிவுரை பெறச் செல்வதில்லை, ஜோதிடம் பார்க்கத்தான் செல்கிறார்கள், இது கூட தவறானதாகும். தீர்க்கதரிசிகளும், ஜோதிடர்கள் தான் என்றுச் சொல்வதும் தவறானதாகும். தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் ஜோசியர்கள் அல்ல, அவர்கள் தேவனின் செய்தியைச் சொல்லி நம்மை எச்சரிக்கை செய்பவர்கள்.

எதிர்க்காலத்தில் நடப்பவைகளை அறிந்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் விரும்பலாமா? என்றால் இதற்கும் பைபிளில் சான்று இல்லை. கிறிஸ்தவ தீர்க்கதரிசிகளிடமும் சென்று நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் என்று கேட்பதும் "தவறாகும்".  நம்மைப் பற்றி தேவன் ஒரு எதிர்கால நிகழ்ச்சியை அறிவிக்க விரும்பினால், அவராகவே ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி சொல்வார். ஆனால் நாமாகச் சென்று தீர்க்கதரிசிகளிடம் நம் எதிர்காலம் என்னவென்று கேட்கக்கூடாது.

நம் எதிர்காலத்தை நமக்கு தெரிவிக்காமல் இரகசியமாக தேவன் வைத்து இருப்பதே நமக்கு நல்லது, சிறந்ததும் கூட. அடுத்த மாதம் எனக்கு ஒரு நன்மை நடக்கும், அடுத்த வருடத்தில் எனக்கு ஒரு விபத்து நேரிட்டு, என் கால்கள் உடையும் போன்ற விவரங்களை இன்று நான் அறிந்துக்கொண்டால், இந்த வாழ்க்கையை நான் மனஅமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழமுடியாது.  இந்துக்கள் இதனை அறிந்துக்கொள்ளாமல் ஜோசியர்களிடம், சாமியார்களிடம் சென்று எதிர்காலத்தில் நடக்கும் தீய மற்றும் நல்ல‌ காரியங்களை அறிந்துக்கொண்டு (அவைகள் பெரும்பான்மையாக பொய்களாக இருக்கும்), அந்த ஆபத்துக்களை நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து பூஜைகள் செய்து, பணங்களை வீணாக செலவழிக்கிறார்கள். ஜோசியர்கள் இந்த பலவீனத்தை பயன்படுத்தி, காசு பார்க்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் பயத்தோடு வாழும் இந்துக்களைப்போல நாம் ஜோதிடம் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது, நம் தேவன் மீது தான் நம்பிக்கை வைக்கவேண்டும்.  அடுத்த நிமிடம் எனக்கு என்ன நேரிடும் என்பதை நான் அறியாமல் இருந்தால் தான் இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற தத்துவத்தை நம் உணர்ந்து வாழவேண்டும்.

ஆக, ஜோசியர்களிடமோ, தீர்க்கதரிகளிடமோ சென்று 'நம் எதிர்காலம்' எப்படி இருக்கும் என்று கேட்பது 'பைபிளின் படி சரியானதல்ல, அவைகள் தேவனுக்கு விரோதமான செயலாகும்'.  

ஒரு விஷயத்தை இங்கு மனதில் வைக்கவேண்டும், நமக்கு எதிர்காலத்தில் நன்மை நடக்க, நமக்கு வேலை கிடைக்க, பிள்ளைகளுக்கு திருமணமாக, வீடு கட்ட, ஊழியர்களிடம் சென்று, நண்பர்களிடமும் சென்று 'இந்த எதிர்கால நிகழ்ச்சிகளுக்காக ஜெபியுங்கள் என்றுச் சொல்வதோ, ஜெபித்துக்கொள்வதோ' தவறு இல்லை. நாம் 'முடிவு செய்த ஒரு காரியத்துக்காக' ஊழியர்கள் ஜெபிக்கும் படி கேட்பதும், நாமும் ஜெபிப்பதும் தவறு இல்லை. ஆனால், எதிர் காலத்தில் 'எனக்கு என்ன நடக்கும்?' என்று கேட்பது மட்டும் தவறாகும்.

முடிவுரை: 

இந்த உதாரணத்தை கவனியுங்கள். ஒரு நாள் திடீரென்று ஒரு தேவதூதன் உங்கள் முன் வந்து நின்று, உங்களிடம் "அடுத்த 20 ஆண்டுகளில் உங்களுக்கு நடக்கவிருக்கும் நல்லவைகள் கெட்டவைகள், உங்கள் பிள்ளைகளுக்கு நடவிருக்கும் நல்லவைகள் கெட்டவைகள் என்று ஒரு பெரிய பட்டியலைச் சொல்லிவிட்டுச் சென்றால்' உங்களால் நிம்மதியாக வாழமுடியுமா? தூக்கம் வருமா? 

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நன்மையை நினைத்து மகிழுவீர்களா? அல்லது அதற்கடுத்த மாதம் நடக்கவிருக்கும் விபத்தை நினைத்து தூக்கத்தை மறப்பீர்களா? எதிர்காலத்தை அறிவது மனிதனுக்கு நல்லதல்ல என்பதால் தான், சர்வ ஞானியான தேவன் அவைகளை மறைத்து இரகசியமாக வைத்துள்ளார்.

அஞ்ஞானிகள் அவைகளை நாடி ஜோதிடர்களிடமும், மரித்தவர்களிடமும் குறி சொல்லிக்கொள்ள விரும்புகிறார்கள். இவைகள் தவறானவைகள் என்று பைபிள் நமக்கு போதிக்கிறது. எனவே கிறிஸ்தவர்கள் ஜோதிடம் பார்ப்பது பைபிளுக்கு எதிரானதாகும், தேவனின் சர்வ வல்லமை மீது நமக்கு நம்பிக்கையில்லை என்பதை அது நிருபிக்கிறது.

கர்த்தரை நம்புங்கள், அவரது வசனங்களை சார்ந்துக்கொள்ளுங்கள், விசுவாச வார்த்தைகளை பேசுங்கள், விசுவாசியுங்கள். 

14. இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, 15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, 16. நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், 17. விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, 18. சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; 19. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். 20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,  21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3: 14-21)

நான் சொல்வதை நம்புங்கள். தேவன் நமக்கு கொடுத்திருக்கின்ற வசனங்களை படித்துப் பார்த்துமா? நமக்கு இன்னும் எதிர்காலத்தைப் பற்றி அறிய ஆவல் வருகிறது...! ஆச்சரியம்!

நூற்றுக்கணக்கான வாக்குத்தத்தங்கள், தேனைவிட மதுரமான வார்த்தைகள், இதயத்தை வருடும் வாசகங்கள், தற்கொலைக்கு நேராகச் சென்றாலும், உடனே திரும்பிவரச் செய்யும் உயிருள்ள பேசும் வார்த்தைகள், இவ்வளவு பெரிய பொக்கிஷங்களைக் கொண்ட கிறிஸ்தவர்களா, ஜோசியம் பற்றி பேசுவது! சகோதர சகோதரிகள்ளே! ஒரே ஒரு முறை தேவனை ருசித்துப் பாருங்கள், அவருடைய வசனங்களை உண்டுப்பாருங்கள், அதன் பிறகு, இந்த உலகமே கொடுத்தாலும், வேண்டாம் என்று நிச்சயம் சொல்வீர்கள்.


இமெயில் கேள்வி பதில் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்