தலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்?

தலாக் பற்றிய முந்தைய கட்டுரைகளை இங்கு சொடுக்கி படிக்கவும்.

இஸ்லாமின் மூல நூல்களில் ‘பெண்களைப் பற்றியும்,அவர்களுக்கு இழைக்கப்பட்ட தலாக் கொடுமைகள் பற்றியும் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்’. இக்கட்டுரையில், முஹம்மதுவிடம் ’தலாக் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் என்ன பதில் கொடுத்தார்’ என்பதைக் காண்போம்.

1) ஒரு மனிதனுக்கு நான்கிற்கும் அதிகமான மனைவிகள் இருந்தால் அவன் என்ன செய்யவேண்டும்?

கைலன் என்பவர் புதிதாக இஸ்லாமை தன் மார்க்கமாக ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்து மனைவிகள் இருந்தார்கள். இதே போல, ’ஹரித்’ என்பவருக்கும் எட்டு மனைவிகள் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமின் படி அதிகபட்சமாக நான்கு மனைவிகளைத் தான் ஒரு முஸ்லிம் திருமணம் செய்யவேண்டும். இப்போது இவர்களின் நிலை என்ன? இவர்களுக்கு மனைவிகளாக இருப்பவர்களின் நிலை என்ன?

முஹம்மது என்ன பதில் சொல்லியுள்ளார் என்பதை, திர்மிதி மற்றும் சுனன் அபூ தாவுத் ஹதீஸ் தொகுப்புக்களில் பதிவு செய்யப்பட்டவைகளை நாம் முதலாவது படித்து, அதன் பிறகு முஹம்மதுவின் பதிலை ஆய்வு செய்வோம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததாவது:

கைலன் இப்னு ஸலமா அத்தகஃபி என்பவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமை தழுவுவதற்கு முன்பாக அவருக்கு 10 மனைவிகள் இருந்தார்கள். அவரிடம் இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ‘நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவர்களை விலக்கிவிடு (விவாகரத்து கொடுத்துவிடு)’ என்று கூறினார். (நூல்: திர்மிதி, ஆங்கில தொகுப்பு எண் 945)

அல்ஹரித் இப்னு கஸ் அல்-அஸாதி அறிவித்ததாவது:

எனக்கு எட்டு மனைவிகள் இருந்தபோது நான் இஸ்லாமை தழுவினேன். எனவே நான் இறைத்தூதருக்கு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இதைப் பற்றிச் சொன்னேன். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) “அவர்களில் நான்கு பேரை மட்டும் வைத்துக்கொள் என்று” கூறினார்கள். (நூல்: சுனன் அபூ தாவுத், புத்தகம் 12, ஆங்கில தொகுப்பு எண் 2233) . 

Narrated Abdullah ibn Umar

Ghaylan ibn Salamah ath-Thaqafi accepted Islam and that he had ten wives in the pre-Islamic period who accepted Islam along with him; so the Prophet (peace be upon him) told him to keep four and separate from the rest of them. Ahmad, Tirmidhi and Ibn Majah transmitted it. (Al-Tirmidhi, Number 945;)

Narrated Al-Harith ibn Qays al-Asadi:

I embraced Islam while I had eight wives. So I mentioned it to the Prophet (peace_be_upon_him). The Prophet (peace_be_upon_him) said: Select four of them. (Sunan Abu Dawud, Book 12, Number 2233)

2) இஸ்லாமும் நான்கு மனைவிகளும்

ஒரு முஸ்லிம் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று குர்-ஆனில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால், இந்த கட்டளை முஹம்மதுவிற்கு இல்லை. முஹம்மது எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்துக்கொள்ளலாம், இதற்கு சிறப்புச் சலுமை முஹம்மதுவிற்கு மட்டும் உண்டு. [இவைகள் தவிர முஹம்மதுவும் முஸ்லிம்களும் பல அடிமைப் பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம், அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே அப்பெண்களோடு உடலுறவு கொள்ளாலாம்].

இரண்டு தமிழாக்கங்களில் குர்-ஆன் 4:3ஐ படிப்போம்.

4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106(மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (பிஜே தமிழாக்கம்).

மனைவிகளின் எண்ணிக்கைக்கு  குர்-ஆன் இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்து இருப்பதினால், முஸ்லிமாக மாறுகின்ற ஆண்கள், தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நான்கிற்கும் அதிகமான மனைவிகளை விவாகரத்து செய்யவேண்டும். இது நியாயமான கூற்று தான், இதில் தவறு இல்லை. ஆனால், ஒரு முக்கியமான நியாயமான சிக்கல் முஹம்மதுவின் பதிலில் உள்ளது, அதனை காண்போம்.

3) எந்தெந்த மனைவிகளுக்கு விவாகரத்து கொடுக்கவேண்டும்?

ஒருவர் முஹம்மதுவிடம் வந்து எனக்கு 10 மனைவிகளுண்டு என்றுச் சொல்லும் போது, இஸ்லாமின் படி நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவர்களை விவாகரத்து செய்துவிடு என்று முஹம்மது கூறினார். ஆனால், 

எந்த நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ளவேண்டும்?

எந்த ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் 

என்று முஹம்மது கூறவில்லை.

இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இந்த நிகழ்ச்சி எப்படி பெண்களுக்கு எதிரானதாக இருக்கும்? முஹம்மதுவின் பதில் குர்-ஆனின் படி உள்ளது தானே? போன்ற நியாயமான கேள்விகள் எழும்.

மேற்கண்ட பதிலில், முஹம்மது எந்த நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது மேற்கண்ட உதாரணத்தை எடுத்துக்கொண்டால். ஒரு ஆண் இளவயதாக இருக்கும் போது ஒரு இளவயது மனைவியை முதலாவது திருமணம் செய்துக்கொள்வான். ஆண்டுகள் செல்லச்செல்ல, தனக்கு செல்வம் வந்துச் சேரச்சேர, அவனது சமுதாயத்தில் அனுமதி இருந்தால், இன்னும் அதிக பெண்களை திருமணம் செய்துக்கொண்டு தன் மோகத்தை தீர்த்துக்கொள்ள முயலுவான். அதாவது, இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி என்று தொடர்ந்துக்கொண்டே செல்வான். 

இதே போலத்தான், மேற்கண்ட நபர் 10 மனைவிகளை திருமணம் செய்துள்ளான். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த ஆண் திருமணம் செய்துக்கொண்ட அடுத்தடுத்த மனைவிகள் பெரும்பான்மையாக இளவயது மனைவிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

அதாவது முதல் மனைவியை விட குறைந்த வயதுள்ளவள் தான் இரண்டாவது மனைவியாக வந்திருப்பாள். இரண்டாவதை விட, மூன்றாவது மனைவி கொஞ்சம் இளயவளாகத் தான் இருந்திருப்பாள். இப்படி பத்து மனைவிவரைக்கும் செல்லும் போது, இவனது கடைசி நான்கு மனைவிகள், இளவயதுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று நாம் கருதலாம். மோகம் அதிகமாகி, பல மனைவிகளைத் திருமணம் செய்பவன், இளவயது பெண்களை விட்டுவிட்டு, வயதான பெண்களை அடுத்தடுத்த மனைவிகளாக  திருமணம் செய்யமாட்டான் என்பது நமக்கு தெரிந்தது தான். ஒருவேளை அதிகமாக அழகியாக இருந்தால், வயதை கொஞ்சம் தள்ளிவைப்பான்.

ஆக, பத்து மனைவிகளை உடைய இந்த மனிதனின் நிகழ்ச்சிக்கு வரும் போது, இவனது முதலாவது மனைவி வயது சென்றவளாக இருப்பாள், இவனின் 10வது மனைவி இளவயதுள்ளவளாக இருப்பாள். 

இந்த நேரத்தில், முஹம்மது உண்மையான இறைத்தூதராக இருந்திருந்தால் என்ன பதில் சொல்லியிருக்கவேண்டும்? பெண்களைப் பற்றி அல்லாஹ் அக்கரையுள்ளவராக இருந்திருந்தால், முஹம்மது என்ன பதில் சொல்லியிருக்கவேண்டும்?

”உன்னுடைய முதல் நான்கு மனைவிகளை வைத்துக்கொள், அதாவது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவதாக நீ திருமணம் செய்த மனைவிகளை வைத்துக்கொண்டு, ஐந்திலிருந்து பத்துவரை திருமணம் செய்த பெண்களை விலக்கிவிடு.” என்று சொல்லியிருக்கவேண்டும்.

ஆனால், முஹம்மது என்ன பதில் சொன்னார்? ஏதாவது நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை விலக்கிவிடு என்று பதில் சொன்னார்.

இந்த பத்து மனைவிகளை உடைய மனிதன் அல்லது பெரும்பான்மையான ஆண்கள் இந்த நிலையில் என்ன செய்வார்கள்? தன் கண்களுக்கு அழகாகவும், இளமையாகவும் இருக்கும் மனைவிகள் நான்கு பேரை வைத்துக்கொண்டு, தான் முதன் முதலாவதாக திருமணம் செய்த பெண் வயது சென்றவளாக இருப்பதினால் அவளை நிச்சயம் தல்லிவிடுவான். ஆக, முஹம்மதுவின் பதில் ‘உனக்கு விருப்பமான நான்கு மனைவிகளை வைத்துக்கொள்’ என்பதாகும். இதன் விளைவு, அம்மனிதனின் முதல், இரண்டாவது, மூன்றாவது மனைவிகளை நிச்சயம் அம்மனிதன் விலக்கியிருப்பான், ஏனென்றால், மற்றவர்களோடு ஒப்பிடும் போது இவர்களுக்கு வயது அதிகமாக இருக்கும். 

முஹம்மது, ‘முதல் நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை விலக்கிவிடு’ என்று பதில் சொல்லியிருந்தால், உண்மையாகவே, பெண்களைப் பற்றி இஸ்லாம் அக்கரைக்கொள்கிறது என்றுச் சொல்லலாம். ஆனால், ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல முஹம்மது பதில் சொல்லியுள்ளார், இது பெண்களுக்கு விளைந்த கொடூரமாகும். 

4) சிறந்த நற்குணச்சீலர் முஹம்மது என்ன செய்தார்?

முஸ்லிம்களில் சிலர் ”இப்படியெல்லாம் நடக்காது, அந்த 10 மனைவிகளை உடையவன், தன் மூத்த மனைவிகளுக்கு அநியாயம் செய்யமாட்டான்” என்று சொல்லக்கூடும்.  ஆனால், இவர்கள் கவனிக்க தவறுவது என்னவென்றால், தங்கள் இறைத்தூதரே இப்படித்தான் செய்தார். அதாவது தனக்கு இளவயது மனைவிகள் தன் அந்தப்புறத்தில் சேரச்சேர தன் மூத்த மனைவிக்கு விவாகரத்து கூறினார். இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

உலகத்துக்கே வழிகாட்டி, சிறந்த நற்குணம் உடையவர் என்று கருதப்படுபவராகிய முஹம்மதுவே தன் வயதான மனைவிக்கு தலாக் கொடுப்பாரானால், இந்த 10 மனைவிகளைவுடைய இந்த மனிதன் எப்படி நடந்துக்கொள்வான் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

முடிவுரை:

இந்த பத்து மனைவிகளை உடைய மனிதனின் நிகழ்ச்சியில், ஆறு பெண்களுக்கு நிச்சயம் அநியாயம் நடக்கும். அவர்கள் கடைசி ஆறு பேராகவும் இருக்கலாம் (இதற்கு சாத்தியமில்லை), அல்லது அம்மனிதன் விலக்கிவிடும் யாராவது இருக்கலாம். ஒரு மதத்தை தழுவும் போது, அது சொல்லும் படி நடந்துக்கொள்வது சரியானது தான், ஒரு முஸ்லிம் இதர மனைவிகளை விலக்கிவிட்டு, குர்-ஆன் சொல்வது படி, நான்கு மனைவிகளை வைத்துக்கொள்வதுதான் சரி. இந்த சூழலில் கணவனோடு கடைசி வரை இருக்கும் வாய்ப்பு முதல் நான்கு மனைவிகளுக்கு கொடுக்கவேண்டும். இளவயதை கணக்கில்கொண்டு, அழகை கணக்கில் கொண்டு மனைவிகளை தெரிவு செய்யும் அதிகாரத்தை ஆண்களுக்கு முஹம்மது கொடுத்தது கொடுமையாகும். பெண்கள் பற்றி முஹம்மதுவோ, இஸ்லாமோ அக்கரையற்று இருக்கிறது என்பது இதன் மூலம் விளங்குகிறது. இதையே முஹம்மதுவும் தன் வாழ்வில் செய்துக்காட்டினார். ஸவ்தா என்ற தன் மனைவிக்கு வயது கூடிவிட்டது, அவருக்கு அழகில்லை, பருமனாக இருக்கிறார் என்பதால், அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். நீங்கள் என்னிடம் செலவிடும் நாளை நான் விட்டுக்கொடுக்கிறேன், நீங்கள் உங்கள் இளவயது சிறுமி மனைவியுடன் செலவிடுங்கள் என்றுச் சொல்லி, அவர் தன் உரிமையை விட்டுக்கொடுத்தார், இதற்கு குர்-ஆனின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நான் இத்தொடர் கட்டுரைகளில் மேற்கோள் காட்டும் விவரங்களை வாசகர்கள் சுயமாக குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும், முஸ்லிம்களின் விளக்கவுரைகளிலும் சரி பார்த்துக்கொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அவதூறுகளை பரப்புவது என் நோக்கமல்ல, தற்கால தலாக் பற்றிய பின்னணியை புரிந்துக்கொள்வது, இந்தியாவில் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். முஹம்மதுவை முதலாவது அறிந்துக்கொள்ளாமல், முஸ்லிம்களை அறிந்துக்கொள்ள முயலுவது வீணான முயற்சியாகும். அன்று முஹம்மது காட்டிய வழியில் தான் முஸ்லிம்கள் இன்று நடக்கிறார்கள். எனவே இவர்களின் மூலங்களை வாசகர்கள் ஆய்வு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம் பெண்கள் தானே அவதிப்படுகிறார்கள்! நமக்கு என்ன? என்று நாம் நினைக்கக்கூடாது, இது மனிதாபமற்ற செயலாகும். 

இன்னும் இஸ்லாமின் தலாக் மூலங்கள் ஆய்வு செய்யப்படும்…


தலாக் பற்றிய இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்